search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போது எடுத்த படம்.

    பாரதி பூங்காவை திறக்காவிட்டால் கவர்னர் மாளிகை முன் போராட்டம்- அமைச்சர் அறிவிப்பு

    பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாரதி பூங்காவை மீண்டும் திறக்காவிட்டால் கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்துவேன் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், சட்டசபை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி மூடப்பட்ட பாரதி பூங்கா இதுவரை திறக்கப்படாமல் மூடிக் கிடக்கிறது. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்தனர்.

    இந்தநிலையில் கடற்கரை சாலையில் அமைச்சர் கந்தசாமி நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பாரதி பூங்கா மூடப்பட்டு இருப்பது கண்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் விசாரித்தார்.

    இதன்பின் அவர் கேட்டுக் கொண்டதன்பேரில் பூங்காவின் நுழைவாயில் திறந்து விடப்பட்டது. அங்கு நடைபயிற்சி சென்று விட்டு மீண்டும் அவர் வெளியே வந்தார்.

    உடனே அங்கிருந்த போலீசார் மீண்டும் பூங்காவை இழுத்து மூட முயன்றனர். இதைப்பார்த்ததும் ஆத்திரமடைந்த அமைச்சர் கந்தசாமி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதன்பின் அமைச்சர் கந்தசாமி அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் நல திட்டங்களை தடுக்கும் கவர்னர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தனி நபரின் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தினருக்கு இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. அரசு சார்பு நிறுவனத்தில் பணி செய்யும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தனி நபர் பாதுகாப்பிற்கு இவ்வளவு வீண் செலவு அவசியம் தானா? தடுப்பு கட்டைகளை அகற்ற உத்தரவிட்டும் போலீசார் அகற்றாமல் உள்ளனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாரதிபூங்காவை மீண்டும் திறக்க வேண்டும். இல்லை என்றால் கவர்னர் மாளிகை முன்பு மீண்டும் போராட்டம் நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் கந்தசாமி சென்ற பின்னர், பாரதி பூங்கா மீண்டும் மூடப்பட்டது.
    Next Story
    ×