என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிருமாம்பாக்கம் அருகே குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்த மீனவர் வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 20 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே உள்ள பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் என்கிற சிவக்குமார் (வயது 41), மீனவர். நேற்று அங்குள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, வீரப்பன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

    அப்போது, வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனத்துக்கு பின் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த வீரப்பன், சாவியை எடுக்க முயன்றார். ஆனால், சாவி அவர் வைத்த இடத்தில் இல்லை. அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தபோது, சாவி கிடைத்துள்ளது.

    உடனே, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 80 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் தங்க வளையல், மோதிரம், அட்டிகை உள்பட சுமார் 20 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.

    வீரப்பன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றதை நோட்ட மிட்ட மர்ம ஆசாமிகள், ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து நகை, பணத்தை திருடியுள்ளனர். இதனால் வீரப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த துணிகர திருட்டு குறித்து வீரப்பன் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் நமச்சிவாயம். ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தனர்.

    தற்போது அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இன்று காலை 11.30 மணிக்கு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய தீப்பாய்ந்தானும், மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் பாஜகவில் இணைகின்றனர்.

    எனக்கு இருக்கும் நெருக்கடி யாருக்கும் இல்லை. உடலில் உயிருள்ளவரை நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி அண்ணாசாலை அருகில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

    அதன்பின் கையெழுத்து இயக்க படிவத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவை மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும். கவர்னர் தவறு செய்ததால்தான் துணை ராணுவ பாதுகாப்பு கேட்கிறார். அந்த பாதுகாப்புக்கிடையேயும் அமைச்சர் கந்தசாமி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்துள்ளார்.

    இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியைவிட்டு யார் வெளியே போனாலும் காங்கிரஸ் கட்சியை அசைத்துப் பார்க்க முடியாது. எனக்கு இருக்கும் நெருக்கடி யாருக்கும் இல்லை. என் உடலில் உயிர் உள்ளவரை நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன். என்னை என்ன செய்தாலும் அதில் இருந்து அசைந்து கொடுக்கமாட்டேன். காங்கிரஸ் தொண்டர்களும், புதுவை மக்களும் நம் பக்கம் உள்ளனர்.

    மக்கள் நலனுக்காக நாம் எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்கவேண்டும். நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, வாரிய தலைவர் பதவிகள் தரவில்லை. கவர்னர், மத்திய அரசோடு இணக்கமாக செல்லவில்லை என்று கூறியுள்ளார். முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் அவர் உள்பட எந்த அமைச்சர் அனுப்பிய கோப்பினையும் திருப்பி அனுப்பியதில்லை. அவர் கோப்புகளை கையோடு எடுத்து வந்து அதில் கையெழுத்து பெற்றுச் சென்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். அப்போது நமச்சிவாயம் அங்கு வந்து எங்களோடுதான் படுத்துக் கிடந்தார். அப்போது அவர் பொய் சொன்னாரா? இப்போது இணக்கமாக போகவில்லை என்கிறார். நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது பிரதமர் மோடியை பலமுறை விமர்சனம் செய்தார். அதற்கான ஆதாரம் உள்ளது. நாம் எதிரிகளை மன்னிப்போம், துரோகிகளை மன்னிக்கமாட்டோம்.

    கடந்த தேர்தலின்போது ரங்கசாமியை ஜெயலலிதா துரோகி என்று கூறினார். அதேபோல் நமச்சிவாயமும் பிரதமரை பலமுறை விமர்சித்துள்ளார்.

    சந்தர்ப்பவாத அரசியல், நேரத்துக்கு நேரம் நிறம் மாறுவது எடுபடாது. அடிக்கடி நிறத்தை மாற்றுபவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். நிறைய துறைகளை அமைச்சர் நமச்சிவாயம் கவனித்து வந்தார். காங்கிரஸ் கட்சியைவிட்டு யார் சென்றாலும் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. மதச்சார்பற்ற அணியை யாராலும் அசைக்க முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

    வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு சர்வாதிகார முறையில் செயல்படுகிறது.

    நமது மதச்சார்பற்ற கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது மாநில மக்களின் உரிமைகளை உயிரை கொடுத்தாவது காக்கவேண்டும். நாம் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை. சிலர் பணம், பதவிக்காக கட்சியை விட்டு ஓடுவார்கள். ஓடுகாலிகள் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள். நிலையாக இருப்பவர்கள் ஒரே இடத்தில் இருப்பார்கள். நாம் அளவோடு பேசவேண்டும். சிந்திக்க வேண்டும். எதையும் அதிகமாக சாப்பிட்டால் வி‌‌ஷமாகிவிடும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
    ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம் என்று தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி: 

    தேர்தல்துறை சார்பில் நேற்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி  குமார் வரவேற்றுப் பேசினார். 

     விழாவில் வாக்காளர் உறுதிமொழியை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் வாசிக்க முதல்முறை வாக்காளர்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். சிறந்த  வாக்காளர் பதிவு அதிகாரி, வாக்குச்சாவடி நிலைய அலுவலர் விருது, சிறந்த இணைப்பு அதிகாரி விருது பொதுசேவை அமைப்புக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 

    வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

    விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் பேசியதாவது:- 

    தேர்தலின்போது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் பணம் வழங்கப்படுகிறது. இது தவறான அணுகுமுறை ஆகும். இதை அனைவரும் கூட்டாக இணைந்து தடுக்க  வேண்டும். ஓட்டுக்காக யாராவது பணம் கொடுத்தால் அதுகுறித்து முதல்முறை வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கலாம். 
     
    இவ்வாறு அவர் கூறினார். 

    விழாவில் புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங், கலெக்டர் பூர்வா கார்க் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். 
    கார் விபத்தில் சிக்கிய முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி: 

    முத்திரையர்பாளையம் பாம்பாட்டி வீதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 73). இவர் வெளியில் சென்றுவிட்டு 100 அடி ரோடு இந்திராகாந்தி சிலை அருகே  சாலையோரம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை ஓட்டிய டேவிட் என்பவர் முதியவரை கவனிக்காமல் மோதிவிட்டாராம். 

    பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துவிட்டு வீட்டில் விட்டு சென்றுள்ளார். வீட்டில் இருந்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார்.  உடனே அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைத்திலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  ஏற்கனவே காரில் அடிபட்டது காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

     இது குறித்து புதுவை வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி மாணவர்களுக்கு ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும் என கவர்னர் கிரண்பேடி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி: 

     புதுச்சேரி மாணவர்களுக்கு ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும் என கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார். கவர்னர் கிரண்பேடி 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன், பொறுப்புள்ள குடிமக்களாக  மாணவர்களை வளரச்செய்தல் என்ற தலைப்பில் காணொலிக்காட்சி மூலமாக கலந்துரையாடினார். 

    இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 2,500 மாணவர்கள் கலந்துகொண்டனர். துறை செயலர் அசோக்குமார்  தொடக்கவுரையாற்றினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிரு‌‌ஷ்ணன் தொகுத்து வழங்கினார். 

    இதில் சுயசார்பு, திறன்மேம்பாடு, குடிமை பணி, இந்திய நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய சவால்கள், விவசாயம், நீர் பாதுகாப்பு, மேலாண்மை, ஊழலற்ற இந்தியா,  தொழில்முனைவோர் தொடர்புடைய 20 கேள்விகளுக்கு விடையளித்து, பொறுப்புள்ள குடிமக்களாக எவ்வாறு வளர்வது குறித்து விளக்கினார். 

    மேலும் சுயசார்பினால் மட்டுமே ஒரு மாணவர் தன் லட்சிய கனவுகளை நினைவாக்கி கொள்ள முடியும். அறிவு, மனிதாபிமானம், தொழில் திறன்களை  வளர்த்துக்கொண்டால் ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக வரலாம். 

    இந்திய ஆட்சி பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) மற்றும் புதுச்சேரி குடிமை முறை பணி ஆகிய அதிகாரிகளின் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு  இந்திய அளவிலான குடிமை பணி போட்டி தேர்வில் பங்குகொள்ள பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். 

     இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் இன்று அமைச்சர் நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொதுப் பணித்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நேற்று தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறினார். கட்சியில் உரிய மரியாதை இல்லாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.

    ஆதரவாளர்களுடன் தொடர்ந்து கூட்டம் நடத்தி வந்த அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் சுப்பிரமணி இன்று அறிவித்தார்.
     
    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் இன்று தனது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். அவருடன், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான தீப்பாஞ்சானும் (ஊசுடு) சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவர்களின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். 

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியது புதுச்சேரி அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கொரோனாவிற்காக கோவேக்சின், கோவி‌ஷீல்டு ஆகிய 2 தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான முறை வரும்போது தைரியமாக சென்று மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    சில நேரங்களில் நம்முடைய வெற்றியை சகித்துக்கொள்ள முடியாத சிலர் தவறான செய்திகளை ஊடகத்தின் மூலம் பரப்பி வருகின்றனர். தயவு செய்து அதனை நீங்கள் நம்ப வேண்டாம். தவறான செய்திகளை பரப்புவோர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இந்த தடுப்பூசியின் மூலம் நோய் பரவுவதை கணிசமாக தடுத்து மக்களை பாதுகாக்க முடியும்.

    பிரதமரின் ஆயு‌‌ஷ்மான் பாரத் என்னும் மருத்துவ திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மருத்துவ சிகிச்சைகள் பெற முடியும். புதுவையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்பு ரே‌‌ஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தங்கள் மேல்சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். அதற்கான பணத்தை அரசு நேரடியாக செலுத்தி விடும். பொதுமக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வில்லியனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில் மனவேதனை அடைந்த எல்லப்பன், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வியாபாரியை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). பலூன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் தர்மன் (30). சம்பவத்தன்று கனகராஜிடம், தர்மன் பீடி கேட்டுள்ளார். ஆனால் அவர் தரமறுத்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தர்மன் கீழே கிடந்த கல்லை எடுத்து கனகராஜை தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.
    புதுவையில் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய பிரமுகர்களுடன் 2 இடங்களில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் கூறிய அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் 2 இடங்களில் ஆலோசனை நடத்தினார்.

    வில்லியனூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இரவு 8 மணியளவில் சுல்தான்பேட்டையை சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து வாணியர் திருமணமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு வில்லியனூர் தொகுதி ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி ஏற்றது முதல் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். சட்டமன்ற பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தலை சந்தித்து அதில் அனைத்திலும் கட்சி வெற்றி பெற கடுமையாக உழைத்தோம்.

    அப்படிப்பட்ட என்னை கட்சித்தலைவர் பதவியில் இருந்து தூக்கினர். கட்சியில்தான் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால் எனது துறை மீதான பணிகளிலும் முதல்- அமைச்சர் தலையிட்டு பல தடைகளை ஏற்படுத்தி வருகிறார்.

    என்னை நம்பி வந்தவர்களுக்கு துறையில் பதவி உயர்வு, பணியிட மாற்றம் கூட என்னால் செய்து கொடுக்க முடியவில்லை. கட்சிக்காரர்களுக்கும், தொகுதி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியவில்லை.

    அதனால் கட்சியில் இருந்து வெளியேறி விடலாம் என முடிவு செய்துள்ளேன். அரசியலில் இருந்தும் விலகலாம் என நினைக்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

    அப்போது அவரது ஆதரவாளர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டாம் என கோ‌ஷமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், விரைவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மாற்று அரசியல் நிலைப்பாட்டை எடுக்கலாமா? என ஆதரவாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அவரது ஆதரவாளர்கள் நீங்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கோ‌ஷமிட்டனர். இதையடுத்து ஆதரவாளர்கள் கூட்டம் அரை மணி நேரத்தில் முடிந்தது.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயத்திடம், ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை கூட்டம் ஏன்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் தொடர்ந்து தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார்.

    பா.ஜனதாவுக்கு நீங்கள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு இதுவரை அதுபோன்ற நிலைப்பாடு இல்லை என்று பதில் அளித்தார்.

    அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    புதுச்சேரி:

    கோரிமேடு இந்திராகாந்தி சிலை அருகே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை தீவைத்து கொளுத்தினர்.

    இதனை தடுத்த போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கொடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. நிர்வாகிகள் அகிலன், நிர்மல் குமார், ஏம்பலம் செல்வம், ரவிச்சந்திரன், சரவணன், தங்க விக்ரமன், கலையரசி, வடிவேலு, விக்கி, பிரபாவதி, ஜெயலட்சுமி, சோமசுந்தரம், செல்வி, தேன்மொழி, புவனேஸ்வரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×