search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை- கவர்னர் எச்சரிக்கை

    கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கொரோனாவிற்காக கோவேக்சின், கோவி‌ஷீல்டு ஆகிய 2 தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான முறை வரும்போது தைரியமாக சென்று மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    சில நேரங்களில் நம்முடைய வெற்றியை சகித்துக்கொள்ள முடியாத சிலர் தவறான செய்திகளை ஊடகத்தின் மூலம் பரப்பி வருகின்றனர். தயவு செய்து அதனை நீங்கள் நம்ப வேண்டாம். தவறான செய்திகளை பரப்புவோர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இந்த தடுப்பூசியின் மூலம் நோய் பரவுவதை கணிசமாக தடுத்து மக்களை பாதுகாக்க முடியும்.

    பிரதமரின் ஆயு‌‌ஷ்மான் பாரத் என்னும் மருத்துவ திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மருத்துவ சிகிச்சைகள் பெற முடியும். புதுவையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்பு ரே‌‌ஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தங்கள் மேல்சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். அதற்கான பணத்தை அரசு நேரடியாக செலுத்தி விடும். பொதுமக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×