search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    உயிருள்ளவரை காங்கிரசில் தான் இருப்பேன் - நாராயணசாமி உறுதி

    எனக்கு இருக்கும் நெருக்கடி யாருக்கும் இல்லை. உடலில் உயிருள்ளவரை நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி அண்ணாசாலை அருகில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

    அதன்பின் கையெழுத்து இயக்க படிவத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவை மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும். கவர்னர் தவறு செய்ததால்தான் துணை ராணுவ பாதுகாப்பு கேட்கிறார். அந்த பாதுகாப்புக்கிடையேயும் அமைச்சர் கந்தசாமி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்துள்ளார்.

    இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியைவிட்டு யார் வெளியே போனாலும் காங்கிரஸ் கட்சியை அசைத்துப் பார்க்க முடியாது. எனக்கு இருக்கும் நெருக்கடி யாருக்கும் இல்லை. என் உடலில் உயிர் உள்ளவரை நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன். என்னை என்ன செய்தாலும் அதில் இருந்து அசைந்து கொடுக்கமாட்டேன். காங்கிரஸ் தொண்டர்களும், புதுவை மக்களும் நம் பக்கம் உள்ளனர்.

    மக்கள் நலனுக்காக நாம் எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்கவேண்டும். நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, வாரிய தலைவர் பதவிகள் தரவில்லை. கவர்னர், மத்திய அரசோடு இணக்கமாக செல்லவில்லை என்று கூறியுள்ளார். முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் அவர் உள்பட எந்த அமைச்சர் அனுப்பிய கோப்பினையும் திருப்பி அனுப்பியதில்லை. அவர் கோப்புகளை கையோடு எடுத்து வந்து அதில் கையெழுத்து பெற்றுச் சென்றார்.

    கடந்த 2019-ம் ஆண்டு கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். அப்போது நமச்சிவாயம் அங்கு வந்து எங்களோடுதான் படுத்துக் கிடந்தார். அப்போது அவர் பொய் சொன்னாரா? இப்போது இணக்கமாக போகவில்லை என்கிறார். நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது பிரதமர் மோடியை பலமுறை விமர்சனம் செய்தார். அதற்கான ஆதாரம் உள்ளது. நாம் எதிரிகளை மன்னிப்போம், துரோகிகளை மன்னிக்கமாட்டோம்.

    கடந்த தேர்தலின்போது ரங்கசாமியை ஜெயலலிதா துரோகி என்று கூறினார். அதேபோல் நமச்சிவாயமும் பிரதமரை பலமுறை விமர்சித்துள்ளார்.

    சந்தர்ப்பவாத அரசியல், நேரத்துக்கு நேரம் நிறம் மாறுவது எடுபடாது. அடிக்கடி நிறத்தை மாற்றுபவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். நிறைய துறைகளை அமைச்சர் நமச்சிவாயம் கவனித்து வந்தார். காங்கிரஸ் கட்சியைவிட்டு யார் சென்றாலும் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. மதச்சார்பற்ற அணியை யாராலும் அசைக்க முடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

    வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு சர்வாதிகார முறையில் செயல்படுகிறது.

    நமது மதச்சார்பற்ற கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது மாநில மக்களின் உரிமைகளை உயிரை கொடுத்தாவது காக்கவேண்டும். நாம் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை. சிலர் பணம், பதவிக்காக கட்சியை விட்டு ஓடுவார்கள். ஓடுகாலிகள் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள். நிலையாக இருப்பவர்கள் ஒரே இடத்தில் இருப்பார்கள். நாம் அளவோடு பேசவேண்டும். சிந்திக்க வேண்டும். எதையும் அதிகமாக சாப்பிட்டால் வி‌‌ஷமாகிவிடும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
    Next Story
    ×