என் மலர்
விருதுநகர்
- கூமாப்பட்டி தொடர்பான வீடியோக்கள் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
- கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு பலரும் படையெடுத்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இணையத்தில் உருவாகும் பல ட்ரெண்ட்களுக்கு மத்தியில் இதுவும் ஒரு புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.
- தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான்.
- அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும்.
சிவகாசி:
மதுரையில் நேற்று இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றோரை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், நாத்திக நரி, அதர்மம், போலி திராவிடம், வழிபாடு இல்லாத ஆலயமா, கட வுளை காணக்கூட நாணயமா? போன்ற வசனங்களுடன் இடம் பெற்றிருந்தன.
அதே வேளையில் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த வீடியோ திரையில் ஒளிப ரப்பானபோது, அவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அண்ணா, பெரியார் குறித்து முருகன் மாநாட்டில் எழுந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணிக்கு ஒரு பயத்தை, ஒரு பீதியை முருக பக்தர்கள் மாநாடு உருவாக்கியிருக்கிறது. இதனால் அவர்கள் மாநாடு குறித்து மாற்று கருத்து தான் கூறுவார்கள். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக ஒரு எழுச்சி மாநாடாக தான் அமைந்திருந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் மக்கள் குவிந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆளுகின்ற தி.மு.க. அரசிற்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.
அ.தி.மு.க.வில் பா.ஜ.க. இருப்பதால்தான் தங்களால் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரக்கூடிய கருத்துக்கள். தி.மு.க. கட்சியோடு மனதளவில் உறவை முடித்துக் கொண்டார். பெயரளவில் மட்டுமே உறவு வைத்துள்ளார். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.
அ.தி.மு.க. ஏற்படுத்தியுள்ள கூட்டணி வலுவான கூட்டணி. இதில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் சிறிதளவும் கிடையாது. தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க., ம.தி.மு.க., த.வா.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உட்பட தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக சீட்டுகள் வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள் என்று சொன்னால் அங்கே பூகம்பம் வெடித்துள்ளது என்று தான் அர்த்தம். தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி முறியக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது.
மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில், அதிலும் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோவை இந்த முருக பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில் இந்து முன்னணியினர் வெளியிட்டது தவறு, அதனை தவிர்த்திருக்கலாம். அறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல், எழுத்துக்கள் சிலரின் மனதை புண்படுத்தி இருக்கலாம். அதனுடைய வெளிப்பாடாக வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.
தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான். அவர்கள் இல்லையென்றால் என்னை போன்றவர்கள் கூட அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அப்பேற்பட்ட தலைவர்கள் பற்றி முருகன் மாநாட்டில் திரையிடப்பட்ட வீடியோ, விமர்சனம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் போற்றும் கடவுள் முருகன். அதேபோல் அனைத்து மதங்களையும் மதித்து போற்றும் கட்சி அ.தி.மு.க. என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்த மதம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. தலைவர்கள் கலந்துகொள்வது பழக்கமாகவும், வழக்கமாகவும் இருக்கிறது. மாற்றுக்கருத்தையும், மாற்று மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் அ.தி.மு.க.வினர்.
நேற்று நடைபெற்ற முருகன் மாநாட்டில் அண்ணா குறித்த விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம். அப்போது நாகரீகம் கருதி நாங்கள் எதையும் கூறவில்லை. அடித்தட்டு, உழைக்கும் மக்களுக்காகவும், அவர்கள் ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்கும் காரணமாக இருந்தவர்களை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அ.தி.மு.க. எப்போதும் மக்களுக்காக உழைக்கும் கட்சி.
ஆன்மீக திருவிழாக்கள் எதுவாக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் நாங்கள் கலந்துகொள்வோம். அதில் மிகுந்த பக்குவம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி அதனுடைய ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க, இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவதுதான் சாலச் சிறந்தது. முன்னாள் தலைவர்களின் ஒரு போக்கு சிந்தனைகளையும் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகளைப் பற்றி தற்போது விமர்சனம் செய்வது தேவை யற்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள், அ.தி.மு.க. தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும். எடப்பாடி பழனிசாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அ.தி.மு.க.வின் எதிர்தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும். தி.மு.க. ஐ.டி. பிரிவு தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்கள். தி.மு.க. அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். தி.மு.க.வின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார். விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும்.
அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும். தி.மு.க.வை வெல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்பதால் விஜய் பக்க பலமாக, உரமாக அ.தி.மு.க.வோடும், எடப்பாடி பழனிசாமியோடும் கைகோர்ப்பதுததான் சாலச் சிறந்த முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (10), ஜெயலட்சுமி (7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அதே கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த சில மாதங்களாகவே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனை அக்கம்பக்கத்தினர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து வந்தனர். கணவன், மனைவி சண்டை போட்டு வந்தால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும், அவர்களின் மனநிலையும் மாறிவிடும் என்று அவர்கள் அறிவுரை கூறினார்கள். இருந்தபோதிலும் கடன் பிரச்சினை உள்ளிட்டவைகளால் தம்பதிக்கிடையே தகராறு தீர்ந்தபாடில்லை.
அவ்வப்போது பூங்கொடி கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அருகிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். அப்போதெல்லாம் சுந்தரவேலு, மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது. அதேபோல் இருவீட்டாரின் பெற்றோரும் அவர்களுக்கு சண்டை போடாமல் குடும்பம் நடத்த அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதில் கடும் கோபத்திற்கு ஆளான சுந்தரவேலு, மனைவியை சரமாரியாக தாக்கினார். இதைப்பார்த்த மகள்கள் இருவரும் அழுதுகொண்டே சிறிது நேரத்தில் தூங்கிவிட்டனர்.
இன்று அதிகாலை எழுந்த சுந்தரவேலு மனைவி மீதான ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முதலில் மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் நிலைகுலைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் எழுந்து பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து கல்நெஞ்சம் படைத்த சுந்தரவேலு, மகள்களையும் கொலை வெறியுடன் பார்த்தார். இதனால் அஞ்சி நடுங்கியவாறு நின்று கொண்டிருந்த மகள்களை சற்றும் ஈவு, இரக்கமின்றி சுந்தரவேலு அரிவாளால் வெட்டினார். இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தூக்கம் கலைந்து எழுந்து ஓடிவந்தனர். அப்போது திறந்து கிடந்த வீட்டிற்குள் தாய், இரண்டு மகள்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
பின்னர் இதுகுறித்து உடனடியாக அவர்கள் அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தாலுகா போலீசார் கொலையுண்டு கிடந்த பூங்கொடி, அவரது மகள்கள் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவி, 2 மகள்களை கொடூரமாக கொலை செய்த சுந்தரவேலு, நேராக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய அரிவாளுடன் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? 2 பெண் குழந்தைகளையும் கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
- அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
- தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார்.
விருதுநகர்:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பா.ஜ.க.வுன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார். இதன்பின் தியானத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். இதன்பின்னர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு நள்ளிரவில் தியானத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல சலசலப்புகள் ஏற்பட்டது.
- பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
- அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அண்மை காலமாக பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி அதிரடியாக ஆய்வு நடத்தி விதிகளை முறையாக பின்பற்றாத ஆலைகளுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.
இந்தநிலையில காரியாபட்டி அருகே இன்று காலை நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அமைந்துள்ளது வடகரை கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று பல்வேறு கட்டிடங்களுடன் இயங்கி வருகிறது. இங்கு காரியாபட்டியை அடுத்த தண்டியனேந்தல், கல்குறிச்சி, காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு கிளைகளை கொண்டுள்ள இந்த ஆலை நாக்பூர் மாநில உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த ஆலையில் சங்கு சக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்படுகிறது. இன்று காலை பட்டாசு ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் தண்டியனேந்தல், கல்குறிச்சியை சேர்ந்த 5 தொழிலாளர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் இருந்தனர். அப்போது அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.
இதில் அந்த அறை அடையாளம் காண முடியாத அளவுக்கு இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கு பணியில் இருந்த தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 35), கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (53) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் பேச்சியம்மாள் (43), கணேசன் (53) மற்றும் முருகன் (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காரியாபட்டி உள்ளிட்ட அருகிலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து மருந்துகள் வெடித்த வண்ணம் இருந்தன. பின்னர் அதிக வேகத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகே பலியானவர்களின் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தை அறிந்த அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் உறவினர்கள் ஆலை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது.
- 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
- அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிவகாசி:
போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் பல்வேறு வசதிகளையும் சிறப்பு கற்றல் முறைகளையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க முன் உதாரணமாக அரசு அதிகாரிகளும், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை சில அதிகாரிகளும் பின்பற்றுவதை அவ்வப்போது காண முடிகிறது. ஆங்காங்கே கலெக்டர்கள் முதல் அரசு கடைநிலை ஊழியர்கள் சிலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து முன் உதாரணமாக திகழ்ந்து உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது சார்பு நீதிபதி ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயபாரதி, சிவகாசி சார்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகாசி நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற நீதிபதி விஜயபாரதி தனது மகள் அன்பிற்கினியாளை(7) சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை வரவேற்றனர்.
நீதிபதியே தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளது மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
- கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
சிவகாசி:
சிவகாசியில் பழமை வாய்ந்த விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசுவநாத ஸ்வாமி, விசாலாட்சி அம்மன் ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தேர் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அறநிலையத்துறை சார்பில் கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள் கோவில் முன்புதான் தேரை நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக கோவில் முன்பு தேரை நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர் தேர் நிலையை வந்து அடைந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
- அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாள்தோறும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சென்று வருகின்றனர். மாலை 4 மணிக்குள் திரும்பி வரவேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று (25-ந்தேதி) மற்றும் நாளை (26-ந்தேதி) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெடிவிபத்தில் பட்டாசு ஆலை கட்டிடம் முற்றிலுமாக தரைமட்டமானது.
- இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி அருகே அம்மாபட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
அம்மாபட்டியில் உள்ள கணேஷ்வரி பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் பீதியுடன் தெரிவித்தனர்.
வெடிவிபத்தில் பட்டாசு ஆலை கட்டிடம் முற்றிலுமாக தரைமட்டமானது. இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது.
வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
- போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் இந்தியா முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகள், மற்றும் அமெரிக்க ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, ஆசியா நாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த தொழிலை நம்பி இந்தப்பகுதியில் நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது.
தற்போது ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு நெசவு செய்யும் தொழில் கூடங்களுக்கு கூலி உயர்வு வழங்காத நிலையில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழில் ஈடுபடக்கூடிய விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் இந்த தொழில் சார்ந்த மறைமுக தொழிலில் ஈடுபடக் கூடியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கி விசைத்தறி கூடங்களை இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும் என தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கும் ஏற்று மதியாளர் மற்றும் விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி கூட அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டால் மீண்டும் இப்பகுதியில் பேண்டேஜ் தொழில் புத்துயிர் பெறும் என சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.
- நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ராமபிரான் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
- பல்பொருள் அங்காடியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.
விருதுநகர்:
விருதுநகர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராமபிரான் (வயது 58). இவர் மதுரை சாலையில் சூப்பர் மார்க்கெட் வைத்து கடை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ராமபிரான் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நள்ளிரவில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் உங்களுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராம பிரான் பதறியடித்துக் கொண்டு கடைக்கு விரைந்தார்.
அங்கு சென்று பார்த்தபோது, கடையின் உள்பகுதி பற்றி எரிந்துகொண்டிருந்தது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். தீயின் தாக்கத்தால் அருகில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் கதவுகளை திறந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் பல்பொருள் அங்காடியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.
நள்ளிரவில் இடி, மின்னல் ஏற்பட்டதால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






