என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • வேலாயுதம் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 32). கூலித் தொழிலாளி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் (36) என்பவரும் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். இவர்கள் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சொக்கனந்தாங்கலை சேர்ந்த முருகன் (32) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் பலத்த காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திண்டிவனம் - மரக்காணம் சாலையில் சொக்கனந்தாங்கல் சாலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த பிரம்மதேசம் போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? விபத்தில் இறந்தாரா? அவர் மீது எந்த வாகனம் மோதியது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தார்.
    • ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 45). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தார். இவர் பக்ரீத் பண்டிகைக்காக திண்டிவனம் வந்திருந்தார். விடுமுறை முடித்து இவரும், இவரது மகன் அப்துல் கலாம் ஆசாத் இருவரும் இன்று சென்னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது திண்டிவனம் தீர்த்த குளம் பாலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன் கண் முன்னே சாலை விபத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
    • விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மயிலம்:

    சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாகா மஸ்ஜித்(45). மினி லாரி டிரைவர். இவர், தனது மகன் அப்சல் ரகுமானுடன்(11) சென்னையில் இருந்து மினி லாரியில் சேலம் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த செண்டூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்ற லாரி மீது மினி லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 2 லாரிகளும் சேதமடைந்த நிலையில், மினி லாரியில் சென்ற 11 வயது சிறுவன் அப்சல் ரகுமான் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இவரது தந்தை லாரி டிரைவர் சாகாமஸ்ஜித்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தந்தை கண்முன்னே மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
    • அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆர். நயம்பாடி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சாமி ஆடிக்கொண்டு ஒரு பெண் வந்தார். அவரிடம் சென்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் என்ன என்று கேட்டபோது அண்ணாநகர் பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கிறோம் எங்கள் பகுதிக்கு ரோடு போட்டு தரணும் என்று கேட்டார் .

    அதற்கு வழியில் உள்ளவர்கள் நிலம் தந்தால் சாலை அமைத்து தருகிறேன் என்று அமைச்சர் சொன்னதற்கு அதையெல்லாம் நீ பார்த்துக்கோ எங்களுக்கு ரோடு தான் வேணும் என்று சொன்னார். பின்னர் அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
    • மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருள் (வயது27) இவருடைய மனைவி அமுல் (23) . இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று மதியம் அருள்வேலைக்கு சென்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் குடிபோதையில் இருந்த அருள் அவரது மனைவி அமலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த அமுல் தனது சேலையை எடுத்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது கணவர் அருள் அதிர்ச்சி அடைந்து தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

    இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமுலின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது.
    • காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா ?

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலைய வீதியை சேர்ந்தவர் முகமது ஷாலி (வயது 52). பழைய பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் வியாபாரம் நிமித்தமாக நேற்று காலையில் வெளியில் சென்றார். பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த முகமது ஷாலியை எழுப்பி தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த விக்கிவாண்டி போலீசார், காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    • நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது.
    • காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் சென்றுள்ளனர். நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசாமாக யாருக்கும் காயமோ, உயிரழப்போ இல்லை. விபத்துக்குள்ளான காரில் வந்தவர்கள், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர். இது தொடர்பாக காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவெண்ணை நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூரை அடுத்த மண்டகமேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49), இளந்துறையை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர்கள் 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

    • கிராமம் முழுைமயாக பள்ளி மாணவர்களுடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.
    • கிராமப்புற அரசு பள்ளியில் பயில்வதினால் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    திண்டிவனம், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெலாகுப்பம் ஊராட்சி, வேம்பூண்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைய பள்ளியில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனையுடன், "நம் பள்ளி நம் பெருமை" மற்றும் பள்ளி வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்தும், கிராமப்புற அரசு பள்ளியில் பயில்வதினால் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்து கிராமம் முழுைமயாக பள்ளி மாணவர்களுடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.

    பேரணியை ஊராட்சிமன்ற தலைவர், உயர்நீதி மன்ற வக்கீல் பூங்கா பாக்யராஜ் கலந்துகொண்டார், நடுநிலைய பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்பண்டராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூருவில் இருந்து மூட்டை மூட்டையாக பான் மசாலா ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கடத்தி வரப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்துடி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவை கொண்ட கார் அந்த வழியாக வேகமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் நிற்காமல் அதி வேகமாக சென்ற கார் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது. இருப்பினும் காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஜெய பாண்டியன் (43,) சிறுபாலன் (27 )மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம் .எஸ். தர்கா பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கம் அமைக்க ஆய்வு மேற்கொண்டார்.

    விழுப்புரம்:

    உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடி , மாவட்ட கலெக்டர் பழனி,தலைமையில், விக்கிரவாண்டி எம்.எல்ஏ. புகழேந்தி , விழுப்புரம் எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் ஆ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் விழு ப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது ,

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி தியாகிகள் அரங்கம் அமைத்திட அறிவித்தார்கள்.

    மேலும், 6.9.2021 சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 -ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், அண்ணா மற்றும் கருணாநிதி அமைச்ச ரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமானஆ.கோவிந்தசாமி யின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைத்திட அறிவித்தார். அதனடிப்படையில், விழுப்பு ரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 1.12.0 ஹெக்டேர் பரப்பாவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ெபான்முடி கூறினார்.

    ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவர் ஜனகராஜ் மாநில தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் அன்னியூர் சிவா ,வருவாய் கோட்டாட்சியர் குமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்)சிவா, உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் பாலாஜி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)கலையாமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் மீன்பிடித்து வந்து தங்களது படகுகளை தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம். தந்திராயன்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமம் சின்னமுதலியார் சாவடி. இந்த கிராமத்திலும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனையடுத்து சின்னமுதலியார்பேட்டை சாவடியில் உள்ள மீனவர்கள் சில நாட்களாக தங்களது படகுகளை சின்னமுதலியார் சாவடி கடற்கரை ஓரமாக நிறுத்தாமல் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வருகின்றனர். இதனால் தந்திராயன்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்களது பகுதி கடற்கரை ஓரங்களில் நிறுத்த இடமில்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் படகுகளை கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பதில் மீனவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

    இதனை கண்டித்து தந்திராயன்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடமும், வானூர் தாசில்தாரிடமும் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுநாள் வரை அந்த மனுவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்திராயன்குப்பம் மீனவர்கள் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்து வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமீபகாலமாக தங்கள் பகுதி மீனவ கிராமத்திற்கு பக்கத்து மீனவ கிரமமான சின்னமுதலியார் சாவடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்கள் பகுதி கடற்கரையில் நிறுத்தாமல் எங்களது பகுதி கடற்கரை ஓரமாக நிறுத்துகின்றனர். இதனால் நாங்கள் எங்களது படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்த இடமில்லாமல் தினந்தோறும் அல்லல்பட்டு வருகிறோம். இதனை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அந்த மனுவிற்கு இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சனைக்கு அதிகாரிகளால் தீர்வு எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் அளித்த மனுவிற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி இந்த சாலை மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலை மறியலில் ஈடுபட்டபோது அங்கு இருந்த சில பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுத்து அவர்கள் மீது ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முற்பட்டனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த (பெண்) போலீசார் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர்களை மீட்டனர். இதனையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியா தீர்வு எடுக்கப்படும் என போலீசார் கூறியதின்பேரில் மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் அதிகாரிகள் எங்களிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்லாமல் அங்கேயே கூட்டம் கூட்டமாக நின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பதட்டமாக உள்ளது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்துவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×