என் மலர்
வேலூர்
ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அவர் இன்று தீர்ப்பளித்தார். டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைதான 40 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறினார்.
இதையடுத்த கைதான 40 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி மற்றும் வருவாய் துறையினர் ரோந்து சென்றனர்.
ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு என்ற இடத்தில் சாலையோரம் மூட்டைகளில் ரேசன் அரிசி கட்டி அடுக்கி வைத்திருந்தனர். 30-க்கும் மேற்பட்ட 2-டன் ரேசன் அரிசி இருந்தது. அவற்றை ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி செல்ல சாலையோரம் வைத்திருந்தது தெரியவந்தது. 2டன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆம்பூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும், ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் சாராயம் விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் இன்று காலை தண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்துர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி குடியாத்தம் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. தன் மகளை கண்டுபிடித்து தருமாறு மாணவியின் தந்தை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் 17 நாட்களுக்கு பிறகு மாணவியை சென்னையில் மீட்டு கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை கடத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் என்பவரின் மகன் ராஜசேகர் என்பது தெரியவந்தது. இவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆயல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி டேங்க் ஆபரேட்டரிடம் பலமுறை முறையிட்டும், ஆயல் ஊராட்சி செயலாளர் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கிராம மக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகே சோளிங்கர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக தங்கள் ஊருக்கு குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் பாணாவரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா இங்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசேகரகுப்தா சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்து தோய்த்த தீக்குச்சிகள் மற்றும் காலி தீப்பெட்டிகளை தனித்தனியாக வெளியில் கொடுத்து, தீப்பெட்டிகளுக்குள் குச்சிகளை நிரப்பும் ஜாப்ஒர்க் செய்யும் பணி பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து குடியாத்தம் காளியம்மன்பட்டி பகுதியில் உள்ள ஜாப்ஒர்க் செய்யும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தீக்குச்சி மற்றும் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு, வேலை நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஆண்கள், பெண்கள் என 25 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலையில் மருந்து தோய்த்த தீக்குச்சிகள் இருந்த மூட்டையை தொழிலாளர்கள் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி உள்ளது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற மூட்டைகளுக்கும், தீப்பெட்டிகளுக்கும் பரவியது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்கள் வெளியே வந்து விட்டனர். தீ வேகமாக பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் இதுதொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த தீ விபத்தின்போது பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் தப்பினர்.
வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் நேற்று இரவு வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தனர். ஆனால் அதற்குள் பஸ் கிளம்பிவிட்டது. இதையடுத்து அதிகாரிகள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் பாகாயம் பகுதியில் வந்து கொண்டிருந்த நாகப்பட்டினம் செல்லும் அந்த அரசு பஸ்சை மடக்கினர். அதில் ஏறி சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து பஸ் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு சென்றது. பின்னர் போலீசார் புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
வேலூர் அடுத்த ஊசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் தினேஷ்குமார் (21).இவர் டிராக்டர், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.
ஊசூர் வருவாய் ஆய்வாளர் அஸ்லம்பாஷா, தினேஷ்குமாரிடம் உங்கள் லாரிகளில் மணல் கடத்தல் வழக்கு பதியாமல் இருக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வேண்டும். அப்போது தினேஷ்குமார், தான் மணல் கடத்தலில் ஈடுபடவில்லை. எதற்கு லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். ரூ.25 ஆயிரம் பணம் தராவிட்டால் மணல் கடத்தல் வழக்கு பதிவு நடவடிக்கை எடுப்பேன் என அஸ்லம்பாஷா மிரட்டினார்.
இதுபற்றி தினேஷ்குமார் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு ஊசூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் அஸ்லம்பாஷாவிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அஸ்லம்பாஷாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி மகன் ஞானமூர்த்தி (வயது 23). மேஸ்திரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் நந்தினி (19) என்ற இளம்பெண்ணும் காதலித்து 1½ ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஞானமூர்த்தி மனைவியை தாக்கியுள்ளார். நள்ளிரவு வரை சண்டை நீடித்தது. அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்த போது நந்தினி தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார்.
உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ஞானமூர்த்தி மற்றும் அவரது தாய் உமா (50) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பக்கிரி மடம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே நேற்று மாலை 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
விக்னேஷ் சிறுமியிடம் பேசி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விக்னேசை அடித்து உதைத்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் விக்னேஷை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இந்து முன்னணி அமைப்பு கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் விநாயகர் சிலைகளுடன் இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர், ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர்.
கலெக்டர் அலுவலக மேம்பாலத்திற்குள் புகுந்து ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினரை, டி.எஸ்.பி. அலெக்ஸ் மேற்பார்வையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான ஏராளமான போலீசார், பேரிகார்ட்டுகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல இந்து முன்னணியினர் ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போலீஸ் அறிவுறுத்தியது. இதையடுத்து கோட்ட தலைவர் மகேஷ் உள்பட சிலர், கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்ட அரங்கிற்கு சென்று விநாயகர் சிலை கையில் கோரிக்கை மனுவை வைத்து அதிகாரிகளிடம் வழங்கினர்.
அந்த மனுவில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளாக அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு அரசாணை மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்கள் கொண்டாட முடியாத அளவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்து மக்களுக்கு மத வழி பாட்டு உரிமையை மறுப்பு போல் உள்ளது.
விநாயகர் சிலையை வைக்க கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் தான் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை சாமானிய மக்களும் கொண்டாட வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தாயும், மகளும் காயம் அடைந்தனர்.
குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், விவசாயி. இவரது மனைவி கீதா என்கிற அகிலாண்டேஸ்வரி (வயது 37). இவர்கள் நேற்று முன்தினம் இரவு 2 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் டவுன் பிச்சனூர் வாரியார் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
வாரியார் நகர் பகுதியில் சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் நிலைத்தடுமாறி 3 பேரும் கீழே விழுந்துள்ளனர்.
பின்னர் 5 பவுன் நகையுடன் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கீழே விழுந்ததில் கீதாவிற்கு தலையிலும், குழந்தைக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.






