என் மலர்tooltip icon

    வேலூர்

    நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் இக்பால் (வயது 68). நூல்வியாபாரி. இவர் இன்று காலை நாட்டறம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இக்பால் கடக்க முயன்றார். அப்போது கடப்பாவில் இருந்து கேராளா நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் இக்பால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கபட்டது.

    இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Thangamani

    குடியாத்தம்:

    தமிழகத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் களப்பணிகளை அ.தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பூத்கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை என களப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களான மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு படிப்படியாக கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுக்கு டி.டி.வி.தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    அ.தி.மு.க., எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் யாரையும் இழுத்து சேர்க்கவில்லை. கழகத்தில் தானாக வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சிறப்பாக நிர்வாகத்தை கொண்டிருக்கின்றனர். அதனை பார்த்து தற்போது வரை கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.

    மற்ற கட்சிகளில் இருந்து அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை. இங்கு அனைவரும் வந்து சேரலாம் என்பது எங்கள் நோக்கம்.

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் சேர முயற்சி செய்தார். நாளை தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்றால் வேறு கட்சிக்கு சென்று விடுவார்.

    தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு தேவையான நிதியை பெற முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசை தொடர்ந்து கேட்டு வருகிறோம். விரைவில் மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி கிடைக்கும். இடைத்தேர்தலுக்காக கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangamani

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பள்ளி ஒன்று பழுதான வகுப்பறைகள் இடிக்கப்பட்டதால் 10 மாதமாக கோவிலில் இயங்கி வருகிறது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மோடிகுப்பம் ஊராட்சி மத்தேட்டிபல்லி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

    ஆரம்ப காலத்தில் ஓலை வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளிக்கு 1967-ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பராமரிப்பின்றி பழுதடைந்து விட்டது. எனவே புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து 10 மாதங்களுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக பழுதடைந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. தற்போது அந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம் மட்டுமே இயங்கி வருகிறது. பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் உள்ள பாட்டசாரி கெங்கையம்மன் கோவிலில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது.

    புதிய கட்டிடம் விரைந்து கட்டி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கட்டிடம் கட்டி கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அருகில் உள்ள கோவிலிலேயே பள்ளி இயங்கி வருகிறது.

    நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘தனியார் பள்ளி மோகம் அதிகரித்துள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விரைவில் பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

    அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் சில தினங்களில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது என்றனர். #tamilnews
    மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #MKStalin #RahulGandhi

    வேலூர்:

    அம்பேத்கரின் 63-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருப்பது இந்திய அரசியல் அரங்கில் மகத்தான திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த முன்மொழிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழி மொழிகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கு மேல் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய இந்திய அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. கவர்னருக்கு அதிகாரமும் இருக்கிறது. இதனை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக முதல் - அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தநிலையில், கவர்னர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கவர்னர் அமைதிகாத்திட வாய்ப்பில்லை என நம்ப வேண்டி இருக்கிறது.

    எனவே கவர்னர் விரைந்து இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய முன் வரவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.


    இடைத்தேர்தல் இப்போது வருமா? என தெரியவில்லை. ஆனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு கட்டாயம் இடைத்தேர்தல் வந்தே தீரும். எந்த முடிவாக இருந்தாலும், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவெடுக்கும்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். ஆனாலும் அதை ஏற்க இயலவில்லை. மிகவும் வேதனை அளிக்க கூடிய தீர்ப்பு. இந்த ஆலை விவகாரம் தொடர்பாக 13 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதார சீர்கேடு அதிகமாக இருக்கிறது. பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    இவ்வாறான சூழ்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு ஆணையை வைத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டது தான், இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த தீர்ப்பை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதற்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #RahulGandhi

    மாநில தேர்தலை வைத்து பாராளுமன்ற தேர்தலை கணித்திட முடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP
    வேலூர்:

    பா.ஜனதா கட்சி எஸ்.சி. அணியின் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடந்தது. இதில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு, பட்டியல் இன மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்துக்கு கடந்த 6 மாதங்களில் சாலை போக்குவரத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்வது தமிழக அரசின் கடமையாகும். ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு தன்னுடைய கொள்கைகளை, அரசின் சாதனைகளை மக்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு சென்று சேர்க்கும் உரிமை உள்ளது. அதில் ஒன்று தான் பயணங்கள் மேற்கொள்வது. அதனை தடை செய்யும் அளவிற்கு மேற்குவங்காள அரசு உள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலையாகும்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை திறப்பது, அவருக்கு பெருமையா என்பது குறித்து சொல்ல தெரியவில்லை. கருணாநிதி அவருடைய செயல்பாட்டின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் மரியாதையை பெற்றவர். இன்றைக்கு அந்த கட்சி அவருடைய மரியாதையை இழந்து நிற்கிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது குறித்து மறுஆய்வு செய்யும் நிலையில் அரசு உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வேலை வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆரம்ப காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வரக்கூடாது என்று நான் போராடினேன். ஆனால் அப்போது பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து அதனை கொண்டு வந்தனர். தற்போது அவர்களே வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் மிகவும் முக்கியம். இதனை முழு ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    5 மாநில தேர்தலில் பா.ஜனதா கட்சி தோற்றால் கூட, வாக்கு வங்கி அதிகமாகவே உள்ளது. இந்த தோல்வி பா.ஜனதாவிற்கு ஒரு சின்ன சறுக்கலாகும். மாநில தேர்தலை வைத்துக்கொண்டு பாராளுமன்ற தேர்தலை கணித்திடக்கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இப்போது இருப்பதை விட, அதிகப்படியான உறுப்பினர்களை பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். உலகின் வல்லரசு நாடாக அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உயர்ந்தே தீரும்.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் எந்த திட்டத்தையும் மத்திய அரசிடம் கேட்டு பெறுவதில்லை. கஜா புயல் தொடர்பான அறிக்கை அளித்தவுடன், உள்துறை மந்திரியை சந்தித்து பேச உள்ளேன். தமிழகத்திற்கு சூரியன் தேவை தான். ஆனால் பாலைவனமாக்கும் சூரியன் தமிழகத்துக்கு தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishnan #BJP




    ஆம்பூர் அருகே மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் தேவலாபுரம் அடுத்த எல்மாங்குப்பத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது42) எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷாராணி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தயாளன் மேல் கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த உஷாராணி கே.ஜி.எப்.பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் தயாளன் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசி வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் ராமமூர்த்தி சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்ட பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தயாளன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து உடலை மீட்ட போலீசார் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் தயாளன் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்து அதற்கான மாற்றுப் பொருள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் வேலூரில் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

    இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மனிதனின் வாழ்க்கையில் ஒன்றினைந்து விட்டது. இதற்கான காரணம் பெரும்பாலும் பொருட்களை கட்டுவதற்கு துணிகளை காட்டிலும் பேப்பரை காட்டிலும் பிளாஸ்டிக் வைத்து கட்டுவதற்கு மிகவும் எளிமையாகவும், சுலபமாகவும் உள்ளது.

    மிக முக்கியமாக சரக்கு போக்குவரத்திலும், துணிக்கடைகள், நொறுக்கு தீனிகள் போன்ற எல்லா கடைகளிலும் பொருட்களை கட்டுவதற்கு பிளாஸ்டிக், தெர்மாகோல் ஆகியவற்றின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதால் அதனுடைய தாக்கம் பூமியின் சூழ்நிலையை கெடுக்கிறது என்று அமெரிக்கா 1960-ம் ஆண்டு கண்டறிந்தது.

    மேலும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் கடலில் தான் கலக்கிறது என்பதையும் கண்டறிந்தன. மற்றொரு ஆச்சரியமான தகவல் என்ன வென்றால் 2002-ம் ஆண்டு பங்களாதேஷ் என்ற சிறிய நாடு தான் முதன் முதலில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.

    இதற்கான காரணம் பங்களாதேஷ் நாட்டில் புயல் மற்றும் மழை வெள்ள காலத்தில் தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு வெளியேறாமல் தங்கிவிட்டதை ஆராய்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் தான் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் மற்றும் இந்தியா பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்து வருகிறது.

    தமிழகத்தில் கிராமங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை உள்ளது. இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வேலூரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சுற்றுசூழல் பொறியாளர் ராஜகோபால், மாவட்ட பொறியாளர் ரதி, பன்னீர் செல்வம், நகராட்சிகளின் மண்டல கமி‌ஷனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கேசி வீரமணி தெரிவித்துள்ளார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சியில் கால் நடைத்துறையின் சார்பில் 240 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளையும், தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 208 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், கூட்டுறவுத் துறையின் மூலம் 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 3 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

    தமிழகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஏழைகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மகளிர் தன்னம்தனியாக பொருளாதாரத்தை பெற்றிட கடனுதவிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி பகுதிகள் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக கண்டறிப்பட்டு மாவட்டத்தில் கணியம் பாடியில் செயல்படுத்தப்பட்ட உறைகிணறு நமது பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்று மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் கேட்காமலே செய்து கொடுத்து வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று பயன்படுத்திக் கொண்டு என்றென்றும் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் முகமை பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மண்டல கால்நடை இணை இயக்குநர் சாந்தகுமாரி, துணைபதிவாளர் முனிராஜ், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், தாமலேரி முத்தூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் ரமேஷ், உதவி இயக்குநர் கால்நடை ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சிவா, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    வேலூரில் காதல் தோல்வியால் நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த குணசீலன் மகள் லாவண்யா (21). இவர் வேலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    அவரது உறவினரான வாலிபரை காதலித்து வந்தார். காதலுக்கு வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் மனமுடைந்த லாவண்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.

    உடல் கருகிய அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாகாயம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் பாலாஜி (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.இவர் அவரது உறவினர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பாலாஜி நேற்று உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது வீட்டில் பெண் கேட்க சென்றுள்ளார்.

    அதற்கு பெண்ணின் தந்தை பெண்ணை தர விருப்பம் இல்லையென்று கூறி அனுப்பி உள்ளார். இதனால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினார். மனமுடைந்த பாலாஜி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை தீயில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அம்பலூர் அருகே குடிசை வீடு எரிந்து தாய், குழந்தை உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம், அம்பலூர் அருகே உள்ள தும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). மகள் தனலெட்சுமி (2) வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் சிம்னி விளக்கு பயன்படுத்தி வந்தனர்.

    நேற்று இரவு 10 மணிக்கு நந்தீஸ்வரன் வெளியே சென்றிருந்தார். அப்போது சரஸ்வதி குழந்தையுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டில் இருந்த சிம்னி விளக்கு திடீரென சரிந்து குடிசையில் தீப்பற்றியது.

    வேகமாக பரவிய தீ குடிசை முழுவதும் எரிந்தது. வீட்டிற்குள் இருந்த சரஸ்வதி குழந்தை தனலெட்சுமி உடல் கருகினர். அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். அதற்குள் உடல் கருகிய சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

    தீக்காயத்துடன் துடித்த குழந்தையை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். வழியிலேயே குழந்தை உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரஸ்வதிக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இதனையடுத்து அவரது கணவரிடம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். #Fireaccident

    அரக்கோணம் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆன இளம்பெணி தீயில் கருகி பலியான சம்பவம் தொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

    தேவி நேற்று வீட்டில் இருந்தபோது உடலில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவியின் அண்ணன் தேவராஜ் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் எனது தங்கையை அவரது கணவர், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தனர். என் தங்கை மீது மண்எண்ணை ஊற்றி கொளுத்திவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கழிவறை கேட்டு தந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார். #Toilet
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் அவதியடைந்த மாணவி ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்ட வேண்டும் என்று கேட்டு வந்தார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரை பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டி தரவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


    மேலும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரிக்கை வைத்தார். மாணவியின் செயலை எண்ணி கலெக்டர் ராமன், நெகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு மாணவியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மாணவியின் வீட்டில் கழிவறை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

    மேலும் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக நியமித்து நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.

    தற்போது மாணவி ஹனீபாஜாரா விவரங்களை மத்திய அரசின் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தூய்மை இந்தியா திட்ட இயக்குனரகம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.

    சிறுமி ஹனீபாஜாராவின் முழு விவரங்களையும் அவரது புகைப்படத்துடன் மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை ஆம்பூரில் உள்ள ஹனீபாஜாரா வீட்டிற்கு கலெக்டர் ராமன் நேடியாக சென்றார். அவர் மாணவி ஹனீபாஜாராவை சந்தித்து அவரது செயலையும், துணிச்சலான முடிவையும் பாராட்டினார்.

    ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மாணவிக்கு பரிசு வழங்கினார்.

    மாணவியின் வீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை பணிகளை பார்வையிட்டார்.

    ஆம்பூர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், தாசில்தார் சுஜாதா மற்றும் வருவாய் துறையினர் உடன் சென்றனர்.  #Toilet
    ×