என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அலுமேலு ராங்கபுரம் குளத்துமேட்டை சேர்ந்தவர் முனிவேல் (வயது 37) ஆட்டோ டிரைவர். இவர் நேற்றிரவு வீட்டின் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றோரு பைக் மோதியது. இதில் முனிவேல் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர். அங்கு முனிவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூரில் பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    ஒசூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சமியா (38). இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக குமார் தனது மனைவியுடன் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் 7 பவுன் நகையை ஒரு பையில் எடுத்து கொண்டு இன்று காலை திருப்பத்தூருக்கு பஸ்சில் பயணம் செய்து வந்தார்.

    பண பையை சமியா வைத்திருந்து உள்ளார். திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே வந்த போது சமியா வைத்திருந்த பண பை காணாமல் போயிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி கத்திகூச்சலிட்டனர். பின்னர் இது குறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை என்றும் தி.மு.க. சார்பில் 12,500 கிராமங்களில் ஊராட்சி சபைகூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார். #DMK #UdhayanidhiStalin #DuraiMurugan
    வேலூர்:

    மு.க.ஸ்டாலினின் 66-வது பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அணைக்கட்டை அடுத்த தார்வழி கிராமத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு 30 பேருக்கு சலவைபெட்டி, 10 பேருக்கு 3 சக்கர சைக்கிள், 7 பேருக்கு இருசக்கர சைக்கிள், 75 பேருக்கு தையல் எந்திரம், 200 பேருக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் உள்பட 425 பேருக்கு மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

    கருணாநிதிக்கு நிழலாக இருந்தவர் துரைமுருகன். அவர் தற்போது எங்களுக்கு கருணாநிதியின் மறுஉருவமாக இருக்கிறார்.

    தி.மு.க. சார்பில் நடந்து வரும் ஊராட்சி சபை கூட்டங்களை யாரையோ பார்த்து காப்பி அடிப்பதாக சிலர் சொல்லி வருகின்றனர். ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருக்கும் போதே இது போன்ற கூட்டங்களை நடத்தினார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. சார்பில் 12,500 கிராமங்களில் ஊராட்சி சபைகூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கெல்லாம் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெறச்செய்தால் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். நந்தகுமார் எம்.எல்.ஏ.வை போன்று அனைவரும் செயல்பட்டால் கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் வெற்றிபெறலாம்.

    வருகிற மே மாதம் நடைபெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களை வெற்றிபெறச்செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துரைமுருகன் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும். அதில் தி.மு.க. 18 தொகுதிகளில் வெற்றிபெற்றால் அ.தி.மு.க. ஆட்சியை கூண்டோடு வெளியேற்றிவிடலாம். நான் 11 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன். அதேபோன்று அணைக்கட்டு தொகுதி நிரந்தர எம்.எல்.ஏ. நந்தகுமார்தான்.

    அவர் தொகுதிக்கு ஆற்றும் சேவை மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்த தொகுதி நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. நந்தகுமார் வந்தபிறகு அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது. கலைஞர் ஆட்சியில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்களுக்கு ரூ.200 கூலி வழங்கப்பட்டது. தற்போது ரூ.120 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 365 நாட்களும் வேலை வழங்கப்படும். நான் அமைச்சராக இருந்தபோது 38 ஆயிரம்பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கிக்கொடுத்தேன். தற்போது பாதிபேருக்கு கூட ஓய்வூதியம் வரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #UdhayanidhiStalin #DuraiMurugan
    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜீவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், நளினி ஆகியோர்  உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.



    இந்நிலையில், இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜிவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள நளினி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மாற்றங்கள் செய்து கொள்ள இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு இன்றும் நாளையும் ஒரு வாய்ப்பாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இந்த இரண்டு நாட்களில், நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடிகளில், வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்தல், நீக்கல், திருத்துதல் மற்றும் தொகுதிக்குள்ளே இடம் மாறுதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதற்குரிய படிவங்களை பெற்று நிரப்பி தர வேண்டும் என்றும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 3453 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிடவற்றிற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். நாளையும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. #tamilnews
    வேலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூரை அடுத்த காட்டுபுதூர் ஆவாரம்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சாரதா (வயது 64). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில், ‘‘எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எனது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி குறுந்தகவல் வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஆன்-லைன் மூலம் ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை எடுத்தவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

    எனவே எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #tamilnews
    தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய பெங்களூரு சிறுமியை போலீசார் மீட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூர் மாநிலம் மனோரஞ்சிதபாலையா பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மகள் சித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சித்ரா தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் ரெயில் ஏறி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.

    ரெயிலில் இருந்து இறங்கிய அவர் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட ரெயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுமி தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சிறுமியை வேலூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஓப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சிறுமியை அவர்களிடம் அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.

    காட்பாடி அருகே போலீஸ்காரரை தாக்கியது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த லத்தேரி மாலீயபட்டு கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    இதையொட்டி விழா குழுவினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பனமடங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஊர் இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ்காரர் சதீஷ் தட்டி கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 6 இளைஞர்கள் சரமாரியாக சதீஷை தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 27) ராணுவ வீரர். அவரது சகோதரர் சிலம்பரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடிவருகின்றனர்.
    குடியாத்தம் அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள சென்னாம்பள்ளியை பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது60). விவசாயி. இவர் நேற்று மாலை குடியாத்தம் காட்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் முனிரத்தினம் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முனிரத்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    வேலூர்:

    வேலூர் ஊரிசு கல்லூரியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வேலூர் வந்தார்.


    ஸ்டாலின் விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

    கூட்டணியை உருவாக்கி பல மாதங்களாக தி.மு.க.வுடன் செயல்பட்டு வருகிறோம். எனவே தி.மு.க. கூட்டணியில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    தி.மு.க கூட்டணியில் நாங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை வழங்கி உள்ளோம்.

    இறுதி பட்டியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MKStalin #Vijayakanth #ADMK
    பேரணாம்பட்டு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ரங்கம்பேட்டையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 10-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்குள் திருமணம் செய்வது குற்றமாகும்.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மகாராணி, எருக்கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் பைரவி ஆகியோர் நேற்று மாலை எருக்கம்பட்டு கிராமத்திற்கு சென்று சிறுமியின் வீட்டில் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்தி பெற்றோரை எச்சரித்தனர். அதனை தொடர்ந்து சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள அரசினர் பிற்காப்பு மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும், அவரது உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர்.

    டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகள் மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு அங்கு சோதனை நடத்தினர். 13 மணி நேரம் நடந்த சோதனை இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.

    அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இரவு 10.30 மணிவரை சோதனை நடைபெற்றது. சத்தியமூர்த்தி வீட்டில் 2 மஞ்சள் நிற பைகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது.

    மேலும் அமைச்சரின் நேர்முக உதவியாளரும், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சீனிவாசன் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.

    அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. நகை பணம் எதுவும் சிக்கவில்லை. இது குறித்து தகவல்களை வருமான வரிதுறையினர் தெரிவிக்க மறுத்தனர்.

    காட்பாடி காந்திநகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி ரெட்டி. கோபாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். 2 பேரும் ஒன்றாக ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வீடுகளில் நேற்று காலை 6.30 மணி முதல் 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

    காட்பாடி பாரதிநகரில் உள்ள ராமமூர்த்தி ரெட்டியின் தம்பி மோகன்ரெட்டி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது.

    வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போல குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான வி.டி.சிவக்குமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து வருமான வரித்துறையினர் வி.டி.சிவக்குமாரை அழைத்துக்கொண்டு, அவர் வங்கி கணக்கு வைத்துள்ள கே.வி.குப்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரூ. 300 கோடி மதிப்புள்ள 6.90 ஏக்கர் நிலம் தொடர்பாக காட்பாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோருக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமமூர்த்தி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் நிலப்பிரச்சனையில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது அந்த நில விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பில்லை என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதில் தொடர்புடைய அனைவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த நிலப்பிரச்சனை தொடர்பான இந்த திடீர் சோதனை சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் மத்திய வருமான வரி துறையினர் களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×