என் மலர்
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின். இவரது 2-வது மகள் ஆலிவ்பிளசி சாரால் (வயது 15). இவர் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இந்த ஆண்டிற்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதையடுத்து ஆலிவ்பிளசி சாரால் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்ந்தார். காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த ஆலிவ்பிளசி சாரால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆலிவ்பிளசி சாரால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள வீ.சி. மோட்டூர் கெங்கையம்மன் கோவில் குளத்தில் இன்று காலை 50 வயது மதிக்கதக்க ஆண் பிணமாக மிதந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வாலாஜா போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை
இதையடுத்து உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் தண்ணீரில் முழ்கி இறந்தாரா? அல்லது கொலை செய்யபட்டு குளத்தில் வீசபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்னி நட்சத்திர வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.
அதிகபட்சமாக 112.5 டிகிரி வரை பதிவானது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
அதிகபட்சமாக திருத்தணி, வேலூரில் 107 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்று வழக்கத்தை விட 4 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, கடலூர், மதுரை தெற்கில் 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, திருச்சியில் 102 டிகிரி, பரங்கிப்பேட்டை, சேலத்தில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
குறிப்பாக திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரபிக்கடலின் தென்பகுதிகள், மாலத்தீவு, குமரிக்கடலில் சில பகுதிகள், கிழக்கு, மத்திய வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து சுமார் 200 ஜாக்கிகளை கொண்டு கட்டுமான பணியாளர்கள் பணிகளை தொடங்கினர். இதனால் வீட்டின் சுவற்றிற்கு எவ்வித பாதிப்பும், சிறிய விரிசலும் இன்றி தரைமட்டம் 2 அடி வரை உயர்த்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
வீட்டின் தரைமட்டத்திற்கும், ஜாக்கிகளுக்கும் இடையேயான இடைவெளியில் இரும்பு கம்பிகள் சிறிய தூண்களைப்போல் கட்டப்பட்டுள்ளது. 21 நாட்கள் நடந்த இந்த பணியின் இறுதியில், 4 அடி வரை வீட்டின் தரைமட்டம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வேலூர்:
காட்பாடி அடுத்த கரசமங்கலம் சிங்கா ரெட்டியூரில் சிலர் இன்று காலை கானாறு வழியாக நடந்து சென்றனர். அப்போது கானாறு பள்ளத்தில் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
மேலும் அவரது ஒரு கையில் 5 விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என தெரியவில்லை.
இறந்தவர் சிகப்பு கலரில் டி-சர்ட்டும், சிமெண்ட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோத தகராறில் கொலை செய்து இங்கு வீசி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
ஆற்காடு தாலுகா பூகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா அமிர்தி வனச்சரக அலுவலராக பணியாற்றினார். தற்போது சஸ்பெண்டாகி உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி மெர்லின்மாலதி (38). அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி மெர்லின்மாலதி மனு கொடுத்தார். அதில் தனது கணவர் ராஜா, வனத்துறையில் வேலை பார்த்து வந்தார்.
தற்போது சஸ்பெண்டு செய்யபட்டுள்ளார் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார். இது பற்றி கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்.
இதுபற்றி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தேன் ஆனால் விசாரணைக்கு வரவில்லை. அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மெர்லின்மாலதி மகன்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சோளிங்கர் அருகே உள்ள பாண்டியநல்லூரில் காமதேனு நகர், ராஜேஷ் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சோளிங்கர்- பானவரம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாரா வளர்ச்சி அலுவலர் அன்பரசு, கொண்டபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில்- எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கடந்த முறை மறியலில் ஈடுபட்டபோது தற்காலிகமாக குடிநீர் வினியோகம் வழங்கபட்டது. ஆனால் சில நாட்களிலேயே அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். ஒன்றிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூரை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் செல்லதுரை (வயது 8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
சிவக்குமார் தனது உறவினர்களுடன் 20 பேருடன் ஆண்டியப்பனூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று மினிவேனில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பினர். வெங்டாபுரம் என்ற இடத்தில் வந்த போது மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் செல்லதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். சிவக்குமார், கோவிந்தசாமி, மீனா, உண்ணாமலை, சேட்டு உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு படுகாயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( வயது 30). பேண்ட் வாத்திய இசை கலைஞர். இவருடைய மனைவி சின்னபாப்பா (28). தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து சின்ன பாப்பாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்து, முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னபாப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டோமே என்று அதிர்ச்சியடைந்த முருகன் தானும் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிணத்தின் மீது அவரது உடலும் கிடந்தது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனாதையான 2 குழந்தைகளும் தாய், தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மனைவியை வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலாயுதம் (50), பார்த்திபன் (55) வடசேரியில் பார்த்திபன் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி பேசுவதற்காக பார்த்திபன், வேலாயுதம் இருவரும் நேற்று வடசேரிக்கு சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். வெங்கடாபுரம் கூட்ரோடு அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வேலாயுதம் இறந்தார்.
பார்த்திபனை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டை காந்திநகர், சர்க்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 54). விவசாயி. இவர் நேற்று அவருடைய தம்பி மோகன் (52), அவரது மகன் சுந்தரம்(24) ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள வீட்டுமனையில் வளர்ந்து இருந்த முள்செடி விறகுகளை வெட்டி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த விஜயகுமாரின் மற்றொரு தம்பி ராமன் (50). அவரது மகன்கள் சக்திவேல்(23), லட்சுமணன்(22) ஆகியோர் விஜயகுமாரிடம் நிலத்தை பங்கு பிரிக்கவில்லை.
அதற்குள் அதில் வளர்ந்துள்ள முள்செடி விறகுகளை எப்படி வெட்டலாம் என கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோர் சேர்ந்து விஜயகுமார், மோகன், சுந்தரம் ஆகியோரை இரும்பி கம்பியாலும், உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மோகன், சுந்தரம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சீரஞ்சிவிலு ஆகியோர் வழக்குபதிவு செய்து ராமன், சக்திவேல், லட்சுமணன் ஆகியோரை கைது செய்தனர்.
வாணியம்பாடி:
ஆம்பூர் அடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுமித்ரா இவர்களுக்கு 1 மகள் உள்ளார்.
பாஸ்கர் நேற்று தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆட்டோவில் சென்றார்.
சின்ன கொள்ளகுப்பம் பகுதியில் ஆட்டோ சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் கும்பல் மீது மோதுவதுபோல் சென்றுள்ளது.
இதனை அந்த 7 பேர் கும்பல் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 7 பேர் கும்பல் பாஸ்கரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கினர்.இதில் பாஸ்கர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாஸ்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பாஸ்கர் தரப்பில் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், சூர்யா, வெள்ளையன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






