என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி 12-வது குறுக்குத்தெருவில் 4 வீடுகளில் அமாவாசை தினமான 3-ந் தேதி நள்ளிரவு மர்மகும்பல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இதுதொடர்பாக, சத்துவாச்சாரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் அடிப்படையில் வடமாநில வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
ஆனால் துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை சத்துவாச்சாரி கோர்ட்டு பின்புறத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த வடமாநில் வாலிபர்கள் 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காலிசரன் (34), சுனில் (23), மகேந்திரா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வாலாஜா மற்றும் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வீடுகளில் இவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
வீடுகளில் திருடியது குறித்து கைதான 3 பேரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
மத்திய பிரதேசத்தில் இருந்து 20 குடும்பத்தினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். பகல்நேரத்தில் பலூன், டார்ச்லைட் போன்ற பொருட்கள் விற்பனை செய்வது போல் வீடுகளை நோட்டமிடுவது இவர்களது வழக்கம்.
இதில் புதர் மண்டியுள்ள பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளாக தேர்வு செய்வார்கள். பின்னர் இரவு உண்டிகோல் மூலம் ஜன்னலை குறிவைத்து அடித்து, அந்த அறையில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்றால் உடனே வீட்டின் மெயின் கதவினை முன்பக்கமாக பூட்டிவிடுவார்கள். பின்னர் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகின்றனர்.
அந்த வீட்டில் உள்ளவர்கள் எந்த அறையில் உள்ளார்கள் என்று கண்டுபிடித்து, அதனையும் தாழ்போட்டு, நகை, பணம் போன்றவற்றை திருடுகின்றனர். இப்படி தமிழகத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ள கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த பூதூர் எம்.ஜி.ஆர். நகரில் ஊர் பொதுமக்கள் சார்பில் அம்பேத்கர் முழு உருவ சிலை வைக்கபட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையில் அவதூறு வாசகங்கள் அடங்கிய அட்டையை மாட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இன்று காலை இதனை கண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆத்திரமடைந்து, அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி (என்கிற) கோவேந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் அணைக்கட்டு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர்கள் பார்த்தசாரதி, நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவேசமாக கூறினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கட்சியினர் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் தொரப்பாடி எழில்நகரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி நவநீதம் (வயது 67) இருவரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள்.
நவநீதம் நேற்று இரவு பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வந்தனர்.
தெருவில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நவநீதம் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பிடித்து இழுத்தனர்.
அப்போது சுதாரித்து கொண்ட நவநீதம் செயினை கேட்டியாக பிடித்து கொண்டார். இதனால் கொள்ளையர்கள் கையில் 8 பவுன் சிக்கியது.
இதனால் திடுக்கிட்ட நவநீதம் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் செயின் பறிப்பு கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி பாகாயம் போலீசில் நவநீதம் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதனை கண்ட அப்பகுதியினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 27 வயது இளம்பெண் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த வாரம் சொந்த ஊர் சென்ற அந்த பெண் நேற்று முன்தினம் கோவைக்கு வந்து அங்கிருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த அவர் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தார். இளம்பெண் தூங்குவதை கண்ட ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக எழுந்து அந்த பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார். அதற்குள் அந்த ரெயில் நேற்று காலை காட்பாடியை வந்தடைந்துவிட்டது.
இளம்பெண் அளித்த புகார் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு டிக்கெட் பரிசோதகர் தகவல் அனுப்பியிருந்தார். அதன்பேரில் சேரன் எக்ஸ்பிரஸ் வருவதை எதிர்பார்த்து காட்பாடி ரெயில்வே போலீசார் தயாராக இருந்தனர். ரெயில் வந்ததும், பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது30) என்பதும், அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஆற்காடு அடுத்த பூங்கனூரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து பஞ்சாயத்து செயலரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காவனூர்- பாலமதி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த திமிரி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சொர்ணலதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி குப்பத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 52). விவசாயி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஜெகநாதன் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தம்பதியினர் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு நிலத்தில் உள்ள கோழிபண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.4 லட்சம், 7 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இன்று காலை ஜெகநாதன், ஜோதி வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெகநாதன் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரபாகரன் (27). ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
விடுமுறையில் ஊருக்கு வந்த பிரபாகரன் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.
இதையடுத்து ராணுவ வீரர் பிரபாகரன் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குபதிவு செய்து பிரபாகரன் மற்றும் பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு டவுன் இனைவ் பஜார், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 50). சென்னை மாநகர பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது மகன்களுடன் வசித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜெகதீசன் அறை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன்கள் அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது ஜெகதீசன் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அவரது மகன்கள் அதிர்ச்சியடைந்து ஆற்காடு டவுன போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் விருபாட்சி புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), அரிசி வியாபாரி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இரவு வேலை முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வேலூர் சாய்நாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே திருவண்ணாமலையிலிருந்து வந்த அரசு பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
விபத்தில் பலியான வெங்கடேசன் குடும்பத்தினர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி, விபத்து இழப்பீடாக வெங்கடேசன் குடும்பத்திற்கு ரூ.13 லட்சத்து 22 ஆயிரத்து 780-ஐ வழங்கும் படி திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகள் இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். இதையடுத்து திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி வெற்றிச் செல்வி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று மாலை வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக வந்தவாசிக்கு செல்லும் திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பஸ் வந்தது.
அந்த பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ் கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையறிந்த அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 3 நாட்களுக்குள் விபத்து இழப்பீடு தொகையை வழங்குவதாக எழுத்தூப்பூர்வமாக கோர்ட்டில் வழங்கினர். அதைத்தொடர்ந்து பஸ் வடுவிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூரில் அக்னி நட்சத்திர காலத்தின்போது உச்சகட்டமாக 112 டிகிரி வெயில் கொளுத்தியது.
அக்னி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.
கடந்த 2-ந் தேதி 105.3 டிகிரியும், நேற்று முன்தினம் 102.7 டிகிரியும் நேற்று 105.8 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் வேலூரில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது.
அதன்பின்னர் சீரான இடைவெளியில் மழை பெய்தது. பலத்த மழை காரணமாக புதிய பஸ் நிலையம், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆற்காடு சாலையில் முருகன் கோவில் அருகே மழை நீர் செல்ல போதுமான வசதியில்லாததால் சாலை யோரக் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அங்கு சாலையோர பள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது.
ஆனால் அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் பள்ளத்தில் சிக்கிய காரை மீட்டனர்.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், சோளிங்கர், குடியாத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
வேலூர்-40.1, ஆம்பூர்-6, வாணியம்பாடி-16.4, ஆலங்காயம்-12, காவேரிப்பாக்கம்-9.2, சோளிங்கர்-16, திருப்பத்தூர்-21.6, குடியாத்தம்-7.4, மேல்ஆலத்தூர்-22.6, பொன்னை-5.8, நாட்டறம்பள்ளி-3, காட்பாடி-15, அம்முண்டி-8, வடபுதுப்பட்டு-14.6.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு, செங்கம், சாத்தனூர்அணை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழைஅளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
ஆரணி-8, செய்யாறு-2, செங்கம்-3.2, சாத்தனூர்அணை-16.6, வந்தவாசி-7.3, போளூர்-7.8, திருவண்ணாமலை-5.2.
சாத்தனூர் அணையில் 69.3 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. திருவண்ணாமலை நகராட்சி, கலசபாக்கம் உள்பட 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இங்கிருந்து குடிநீர் எடுக்கபடுகிறது.இதனால் அணையில் இருந்து நீர் திறக்கபடவில்லை.
வேலூரில் வெயில் கடுமையாக கொளுத்துவதால் நிலத்தடி நீர் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளன. ஆழ்துளை கிணற்றை நம்பியவர்களின் நிலை ஏமாற்றம் ஆகிவிட்டது.
குடிநீரை காசு கொடுத்து வாங்க முடியாத ஏழை எளிய மக்கள் தற்போது காலிக்குடங்களை கையில் எடுத்து வீதியில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர். குடிநீர் பிரச்சனையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் கிணற்றை ஆழப்படுத்துதல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.
வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.மாணியம் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களடன் நேற்று மதியம் குட்டைமேடு-வேலப்பாடி செல்லும் சாலையில் ஆணைக்குளத்தம்மன் கோவில் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து முன்னாள் கவுன்சிலர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனால் சாலை மறியலை கைவிட்டு பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






