என் மலர்
செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
வேலூர்:
வேலூரில் அக்னி நட்சத்திர காலத்தின்போது உச்சகட்டமாக 112 டிகிரி வெயில் கொளுத்தியது.
அக்னி வெயில் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.
கடந்த 2-ந் தேதி 105.3 டிகிரியும், நேற்று முன்தினம் 102.7 டிகிரியும் நேற்று 105.8 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் வேலூரில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது.
அதன்பின்னர் சீரான இடைவெளியில் மழை பெய்தது. பலத்த மழை காரணமாக புதிய பஸ் நிலையம், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஆற்காடு சாலையில் முருகன் கோவில் அருகே மழை நீர் செல்ல போதுமான வசதியில்லாததால் சாலை யோரக் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அங்கு சாலையோர பள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது.
ஆனால் அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் பள்ளத்தில் சிக்கிய காரை மீட்டனர்.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், சோளிங்கர், குடியாத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
வேலூர்-40.1, ஆம்பூர்-6, வாணியம்பாடி-16.4, ஆலங்காயம்-12, காவேரிப்பாக்கம்-9.2, சோளிங்கர்-16, திருப்பத்தூர்-21.6, குடியாத்தம்-7.4, மேல்ஆலத்தூர்-22.6, பொன்னை-5.8, நாட்டறம்பள்ளி-3, காட்பாடி-15, அம்முண்டி-8, வடபுதுப்பட்டு-14.6.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு, செங்கம், சாத்தனூர்அணை, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழைஅளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
ஆரணி-8, செய்யாறு-2, செங்கம்-3.2, சாத்தனூர்அணை-16.6, வந்தவாசி-7.3, போளூர்-7.8, திருவண்ணாமலை-5.2.
சாத்தனூர் அணையில் 69.3 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. திருவண்ணாமலை நகராட்சி, கலசபாக்கம் உள்பட 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இங்கிருந்து குடிநீர் எடுக்கபடுகிறது.இதனால் அணையில் இருந்து நீர் திறக்கபடவில்லை.






