என் மலர்tooltip icon

    வேலூர்

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    வாலாஜா:

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து விட்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததுள்ளது. ஏரி, குளங்கள், கிணறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள், குடிதண்ணீருக்கு வெகுதூரம் அலைய வேண்டிய நிலையும், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் காத்திருந்தும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் போராட்டம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    வாலாஜா அடுத்த ராணிப்பேட்டை நெல்லிக்குப்பம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை- பொன்னை செல்லும் சாலையில் இன்று திரண்டு மறியல் செய்தனர். சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. எனவே நாங்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவநிலை ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆம்பூர் அருகே அரசு பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து 20 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர்:

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு தமிழக அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சை திருத்தணியை சேர்ந்த டிரைவர் சீனிவாசன் (வயது 45). ஓட்டி வந்தார்.

    ஆம்பூர் அடுத்த சோலூர் என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புகள் மீது மோதி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறியபடி கூச்சலிட்டனர்.

    இதில் பஸ் டிரைவர் சீனிவாசன், ஒடுகத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (24). மூர்த்தி (25). திருவள்ளுரை சேர்ந்த தினேஷ்குமார், திருநெல்வேலியை சேர்ந்த வித்யாசாகர் (46). சென்னையை சேர்ந்த அன்பரசன், பாலய்யா, ஜான்சன், ராஜலட்சுமி, ரமேஷ், சூர்யா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
    வேலூர்:

    வேலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு தேவையான தண்ணீரை இந்த அரசால் கொடுக்க முடியவில்லை. அரசின் அடிப்படை கடமை மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது. ஆனால் அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே 100 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

    தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குகிறார்கள். இது அரசுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வுமையம் வடகிழக்கு பருவமழை பொய்க்கும், தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும் என்று அறிவித்திருந்தது. அப்போதே தமிழக அரசு ஏரி, குளங்களை ஆழப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ஏரிகளில் குறைந்த அளவு தண்ணீராவது இருக்கும்.

    அண்டை மாநில முதல்வர்களை, நமது முதல்-அமைச்சர் சந்தித்து பேசியிருக்கலாம், அப்படி பேசியிருந்தால் அவர்கள் தண்ணீர் கொடுத்திருப்பார்கள். ஆனால் இந்த அரசு ஒன்றை தலைமையா, இரட்டை தலைமையா என்பதிலும், யாருக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவது என்பதிலும் குறியாகவும், பொறுப்பற்ற அரசாகவும் இருக்கிறது.

    மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மதிப்பு குறைவான மடிக்கணினி வழங்கப்படுவதாகவும், இதில் ரூ.300 கோடிக்கு தவறு நடந்துள்ளதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது. மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர்களை கொண்டு கமிட்டி அமைக்க வேண்டும்.

    ராகுல்காந்தியை தவிர்த்து இன்னொருவர் காங்கிரஸ் கட்சியை இயக்கமுடியாது. அவர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். கோர்ட்டு எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் எத்தனையோ பேர் இருக்கையில் அவர்கள் 7 பேரை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உள்ளநோக்கம் இருக்கிறது.

    உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. குறிப்பாக அனைத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவோம். இது குறித்து வருகிற 21-ந் தேதி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பத்தூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 ஆடுகள் மின்சாரம் தாக்கி பலியானாது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட இளவம்பட்டி அம்மன்புரம் வட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. நடராஜ் (வயது 70). இவரது மனைவி கவரம்மாள் (56). இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அப்போது விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை தெரியாமல் ஆடு ஒன்றின் பின் ஒன்றாக சென்றன. 8 ஆடுகளும் மின்சாரம் தாக்கி பலியானது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் மற்றும் மின்சாரத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோளிங்கர் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் வெங்கபட்டு காலனி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை உல்லாசம் அனுபவித்தார்.

    கடந்த 8-ந் தேதி இரவு நவீன்குமார் இளம்பெண்ணை போன் செய்து அழைத்தார். பின்னர் அவரை உல்லாசத்திற்கு அழைத்து உள்ளார். அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாய படுத்தினார்.

    அப்போது நவீன்குமார் அருகே இருந்த கோவிலில் இருந்த மஞ்சல் கயிரை இளம் பெண்ணின் கழுத்தில் கட்டிவிட்டு பின்னர் விடியும் வரை இளம்பெண்ணிடம் உல்லாசத்தில் இருந்துள்ளார்.

    மறுநாள் காலை மகளை காணாமல் தேடிவந்த பெற்றோர் காதலர்கள் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் நவீன்குமாரிடம் தனது மகளை முறைப்படி திருமணம் செய்து கொள் என்று கேட்டனர்.

    அதற்கு நவீன்குமார் நான் உன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது. என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், வழக்குபதிந்து, நவீன்குமாரை கைது செய்தனர்.

    வேலூரை பசுமையாக்க 100 பள்ளி மாணவர்கள் விதை பந்து தயாரிக்கும் பணியை கலெக்டர் ராமன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையம் அருகே சாரணர் இயக்கம் சார்பில் 1 லட்சம் விதை பந்துகள் தயாரிக்கப்படுகிறது. 100 பள்ளி மாணவர்கள் விதைபந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கலெக்டர் ராமன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    மனித உயிரினங்கள் தோன்றி 2 அல்லது 3 லட்சம் ஆண்டுகள் இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 லட்சம் ஆண்டுக்கு முன்பு பூமி உருவான போதே மரங்கள், செடிகள் தோன்றியது.

    பூமியை சுற்றி இருந்த நச்சுகாற்றை மரங்கள் சுவாசித்து ஆக்சிஜனை வெளியிட்டதால் உயிரினங்கள் தோன்றியது.

    அடிப்படை தேவைக்காக இயற்கையை அழித்து வருகிறோம். இதுபெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் அடுத்த தலைமுறை வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.

    மழை குறைவு, வெப்பம், நீர் நிலைகள் மாசு ஏற்படும். இதனை தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். விதை பந்து தயாரிக்கும் மாணவர்களுக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விதை பந்துகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகள், சாலையோரங்களில் தூவி மரங்கள் வளர்க்கப்படும் என தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் சாரணர் இயக்க ஆணையர் பரிமளாகுமார், காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத் மற்றும் கிருஷ்ணன், மணிகண்டன், சுந்தரராஜன், மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக போனில் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் கூட்டரங்கில் குடிநீர் பற்றாக்குறை குறித்து கலெக்டர் ராமன் தலைமையில் சம்மந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்ட மக்களுக்கு காவேரிக்கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகம் செய்து வலரும் முதன்மை குழாய் பராமரிப்பு பணி மற்றும் மேட்டூர் செக்கானூர் பராமரிப்பும் கடந்த 8-ந்தேதி முதல் 26-ந்தேதிடி வரை 19 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பராமரிப்பு பணியின் போதும் வேலூர் மாநராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தேவையான அளவு சீராக வழங்கப்பட்டு வருகிறது. 26-ந்தேதிக்கு பிறகு வழக்கமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் நீரின் அளவு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    20 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 506 குடிநீர் திட்ட பணிகள் ரூ.1165.28 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 353 குடிநீர் பணிகள் தொகை ரூ.760.57 லட்சத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. நிலுவை பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

    ஒவ்வொரு கிராம ஊராட்சியிலிருந்தும் வழங்கப்படும் குடிநீரானது வறட்சியை கருத்தில் கொண்டு தனிநபருக்கும் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அளவை மட்டமே வீணாகாமல் பொதுமக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பிற தேவைகளுக்கு இதர உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் முறைகேடாக குடிநீரை இதர பயன்பாட்டிற்கு பயன் படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இயங்கும் 1800-425-4980 என்ற இலவச எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம்.

    மாம்பாக்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 18-ந் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

    வேலூர்:

    ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 18-ந் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிச் சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்விநியோம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள ஒழுகூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர். வாலாஜா- தலங்கை செல்லும் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாக கூறினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆற்காடு அருகே குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த சின்னதக்கை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அரக்கோணத்தை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருப்பதியில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் வர்சலா, கிராமநிர்வாக அலுவலர் மஞ்சுநாத், வருவாய் ஆய்வாளர் சத்யா மற்றும் திமிரி சமூக ஆர்வலர் தமிழரசன் தலைமையில் 3 குழுவினர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களுக்கு திருமண வயது 18.

    அதற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் நடத்தினால் சட்டபடி குற்றம் என பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

    ஆம்பூர் நகரில் தன்னார்வலர்களின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை ஆம்பூர் டவுன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கபடுகின்றனர்.

    மேலும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து விதிமீறல், போக்குவரத்து நெரிசல்களை சீரமைக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ஆம்பூர் டவுன் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என போலீசார் முடிசெய்தனர். அதற்காக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு ஆம்பூர் டவுன் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து ஆம்பூர் போலீசார் கூறுகையில்:-

    ரு.20 லட்சம் மதிப்பில் நகரின் 100 இடங்களில் முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்தவுடன் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்தே நகரில் நடப்பவைகள் கண்காணிக்கப்படும். அதன் மூலம் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தடுக்க முடியும்.

    போக்குவரத்து விதிமீறல் கண்டறியப்பட்டு, விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக கண்காணித்து சரிசெய்யப்படும். இதனால் குற்ற சம்பவங்கள் குறையும். ஆம்பூர் நகரம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றனர்.
    தனியார் பஸ்சில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து ரூ.75 ஆயிரம் ரொக்கம் பணத்தை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    வேலூர்:

    குடியாத்தத்தை சேர்ந்தவர் லால் (வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதி. கடந்த 7-ந் தேதி குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு தனியார் பஸ்சில் சென்றபோது இருக்கையின் அருகே ஒரு பை கிடந்துள்ளது.

    அதில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்துடன் கூடிய பையை லால், பஸ் உரிமையாளர் சக்கத் தலைவர் சுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தார்.

    இந்நிலையில், நேற்று லால், பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

    அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், பஸ் உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கோவிந்தராஜ், செயலர் நவீன் ஆகியோர் உடனிருந்தனர்.

    நேர்மையாக பணத்தை ஒப்படைத்த லாலை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர். தொடர்ந்து, பணத்தை விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×