search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணத்திற்கு மறுப்பு"

    குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    வேலூர்:

    குடியாத்தம் தாலுகா நல்லாகவணியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 22 வயது இளம்பெண்ணை தூக்கிச்சென்று அங்குள்ள மலையடிவாரத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி தொடர்ந்து 5 மாதம் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தபெண் கர்ப்பிணியானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 28.8.2013 அன்று இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய மோகனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் ரூ.5 ஆயிரம் அபராதத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும், இந்த தொகை போதாது என்பதால் உரிய இழப்பீடு வழங்க வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

    ஆரணி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை அடித்து கொன்று வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு காளிகாபுரம் கொண்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 55). விவசாயியான இவர், எலக்ட்ரீசியன் வேலையும் செய்கிறார். இவரது மனைவி சாமூண்டீஸ்வரி (45), மகள் நிர்மலா (24).

    நிர்மலா திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதிலேயே தங்கி இருந்தார். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு வந்து செல்வார்.

    அதே பகுதியை சேர்ந்த ராஜவேலு மகன் அன்பழகன் (30) லாரி டிரைவர். இவர் மாணவி நிர்மலாவை திருமணம் செய்ய ஆசைபட்டார். இதுப்பற்றி தனது பெற்றோரிடம் அன்பழகன் கூறினார்.

    அவர்களும், சமீபத்தில் மாணவி நிர்மலா வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர். மகள் படித்து முடிக்கட்டும் பிறகு திருமணம் குறித்து பேசலாம் என்று நிர்மலாவின் பெற்றோர் கூறினர்.

    இதனால் திருமண ஏக்கத்தில் இருந்த அன்பழகன், நிர்மலாவின் படிப்புக்கு பணம் கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிர்மலாவின் பெற்றோர் திடீரென அன்பழகனுக்கு பெண் கொடுக்க மறுத்தனர்.

    இதனால் அன்பழகன் ஆத்திரமடைந்து சண்டை போட்டார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மாணவி நிர்மலாவை குடும்பத்துடன் கொலை செய்ய அன்பழகன் திட்டம் தீட்டினார்.

    இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்றிரவு மாணவி நிர்மலா வீட்டிற்கு வந்தார். கொலை செய்ய சரியான நேரம் இது தான் என காத்திருந்த அன்பழகன் நள்ளிரவில் அரிவாளுடன் மாணவி வீட்டிற்கு சென்றார்.

    முதலில் வீட்டு வெளியே தூங்கிக்கொண்டிருந்த மாணவியின் தந்தை சிவராமனை கொடூரமாக வெட்டினார். அவர் பலத்த காயமடைந்தார்.

    சிவராமனை கொன்று விட்டதாக நினைத்து வீட்டிற்குள் புகுந்த அன்பழகன், மாணவி நிர்மலாவையும், அவரது தாய் சாமுண்டீஸ்வரியையும் அடித்தும், தலையணையால் அமுக்கியும் கொன்றார்.

    திருமணத்திற்கு மறுத்த மாணவி, அவரது தாயை கொன்ற வெறியில் இருந்த கொலையாளி அன்பழகன், கைது நடவடிக்கை பயந்து அதே வீட்டிலேயே மாடு கட்டும் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கம் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதில் மாணவியின் தந்தை சிவராமனுக்கு மட்டும் உயிர் இருந்தது. அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிவராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டி.எஸ்.பி. செந்தில் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி, அவரது தாய் மற்றும் கொலையாளியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    கொலையான சாமூண்டீஸ்வரி, அவரது வீட்டு முன்பு குவிந்திருந்த பொதுமக்கள்.

    ×