என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வேலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    வேலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூரில் வெயில் கடுமையாக கொளுத்துவதால் நிலத்தடி நீர் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளன. ஆழ்துளை கிணற்றை நம்பியவர்களின் நிலை ஏமாற்றம் ஆகிவிட்டது.

    குடிநீரை காசு கொடுத்து வாங்க முடியாத ஏழை எளிய மக்கள் தற்போது காலிக்குடங்களை கையில் எடுத்து வீதியில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர். குடிநீர் பிரச்சனையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் கிணற்றை ஆழப்படுத்துதல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.

    வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.மாணியம் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.

    பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களடன் நேற்று மதியம் குட்டைமேடு-வேலப்பாடி செல்லும் சாலையில் ஆணைக்குளத்தம்மன் கோவில் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து முன்னாள் கவுன்சிலர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனால் சாலை மறியலை கைவிட்டு பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×