என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர், வாலாஜாவில் பலூன் விற்பதுபோல நோட்டமிட்டு திருடிய வடமாநில கும்பல்
    X

    வேலூர், வாலாஜாவில் பலூன் விற்பதுபோல நோட்டமிட்டு திருடிய வடமாநில கும்பல்

    வேலூர், வாலாஜாவில் பலூன் விற்பதுபோல நோட்டமிட்டு திருடிய வடமாநில கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி 12-வது குறுக்குத்தெருவில் 4 வீடுகளில் அமாவாசை தினமான 3-ந் தேதி நள்ளிரவு மர்மகும்பல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றது.

    இதுதொடர்பாக, சத்துவாச்சாரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் அடிப்படையில் வடமாநில வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    ஆனால் துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை சத்துவாச்சாரி கோர்ட்டு பின்புறத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த வடமாநில் வாலிபர்கள் 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    அவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காலிசரன் (34), சுனில் (23), மகேந்திரா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வாலாஜா மற்றும் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வீடுகளில் இவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    வீடுகளில் திருடியது குறித்து கைதான 3 பேரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    மத்திய பிரதேசத்தில் இருந்து 20 குடும்பத்தினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். பகல்நேரத்தில் பலூன், டார்ச்லைட் போன்ற பொருட்கள் விற்பனை செய்வது போல் வீடுகளை நோட்டமிடுவது இவர்களது வழக்கம்.

    இதில் புதர் மண்டியுள்ள பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள வீடுகளாக தேர்வு செய்வார்கள். பின்னர் இரவு உண்டிகோல் மூலம் ஜன்னலை குறிவைத்து அடித்து, அந்த அறையில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்றால் உடனே வீட்டின் மெயின் கதவினை முன்பக்கமாக பூட்டிவிடுவார்கள். பின்னர் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகின்றனர்.

    அந்த வீட்டில் உள்ளவர்கள் எந்த அறையில் உள்ளார்கள் என்று கண்டுபிடித்து, அதனையும் தாழ்போட்டு, நகை, பணம் போன்றவற்றை திருடுகின்றனர். இப்படி தமிழகத்தில் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ள கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×