என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. வனிதா பதவி உயர்வு பெற்று சென்னை ரெயில்வே ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. வனிதா பதவி உயர்வு பெற்று சென்னை ரெயில்வே ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் டி.ஐ.ஜி. காமினி வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

    விரைவில் அவர் பொறுப்பேற்பார் என போலீசார் தெரிவித்தனர்.

    ஒடுகத்தூர் அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    அணைகட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கொல்லையை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 48) விவசாயி. இவரது மனைவி சித்ரா (40), இவர்களுக்கு மோகன்தாஸ், பாலாஜி என்கிற 2 மகன்களும் லோகேஸ்வரி என்ற 1 மகளும் உள்ளனர்.

    ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெய்சங்கர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜெய்சங்கர் வீடு திரும்பாததால் அவரது மனைவி சித்ரா சந்தேகத்துடன் பல இடங்களில் தேடினார். எங்கும் அவர் இல்லை.

    தனது விவசாய நிலத்திற்கு சென்று இருக்கலாம் என்று அங்கு சென்று பார்த்தார்.

    அங்கு ஜெய்சங்கர் கிணற்று பகுதியில் உள்ள பம்பு செட்டில் துப்பாக்கியால் தன்னை தானே தொண்டை பகுதியில் சுட்டு தற்கொலை செய்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனை கண்ட சித்ரா கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஜெய்சங்கர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவரிடம் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் அடுக்கம்பாறை பேருந்தில் மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை வள்ளலார் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் மார்க்கெட் கமிட்டியில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி செல்வி (வயது 69). நேற்று மாலை வேலூரில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று புதிதாக 5 பவுன் தங்க செயின் வாங்கினார்.

    அதனை ஒரு பேக்கில் எடுத்து கொண்டு டவுன் பஸ்சில் அடுக்கம்பாறை சென்றார். அப்போது அவரது பையில் இருந்த தங்க செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். பஸ்சை விட்டு இறங்கிய பிறகுதான் நகை திருடு போனது தெரியவந்தது.

    இதுபற்றி வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்வி நகை கடையில் இருந்து வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்து கும்பல் நகை திருடி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    நகை எடுத்து செல்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    அரக்கோணம் அருகே நிலத்தை வரன்முறைப்படுத்தி அறிக்கை அளிக்க லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    அரக்கோணம்:

    சென்னை அய்யம்பாக்கம், எழில்நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 29). இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் அரக்கோணம் அருகே மோசூர் கிராமத்தில் உள்ளது.

    நிலத்தை மனைகளாக பிரித்து வரன்முறைப்படுத்தி சான்றிதழ் பெற அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா(57) என்பவரிடம் கேட்டுள்ளார்.

    நிலத்தை வரன்முறைப்படுத்தி அறிக்கை அளிக்க ரூ.56 ஆயிரத்து 600 லஞ்சமாக தரவேண்டும் என்று ஜீவா கேட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து முத்துராஜ் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் முத்துராஜிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.56 ஆயிரத்து 600-ஐ போலீசார் கொடுத்து அனுப்பினர்.

    பின்னர் முத்துராஜ், ஜீவாவிடம் பணம் தயாராக உள்ளது. எங்கு வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே வந்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

    அரக்கோணம் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகில் ஜீவாவிடம் முத்துராஜ் பணத்தை கொடுத்தார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி, மற்றொரு விஜயலட்சுமி மற்றும் போலீசார் கையும் களவுமாக ஜீவாவை பிடித்து கைது செய்தனர்.

    அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜீவா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை சென்னை செல்லும் பஸ்சில் பயணிகள் கூட்டமாக ஏற முயன்றனர். இந்த கூட்டத்தில் புகுந்த 3 பேர் பயணிகளிடம் செல்போன் திருட முயன்றனர். அப்போது ஒரு வாலிபரை கவனித்த பயணிகளில் ஒருவர் கூச்சலிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் வாலிபரை மடக்கி பிடித்தனர். இதை பார்த்த கூட்டாளிகள் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களையும் பொதுமக்கள் விரட்டி சென்றனர். ஆனால், அவர்கள் அருகிலுள்ள பாலாற்றின் சுடுகாட்டு பகுதிக்கு ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார், அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அசம்பா விதங்களை தவிர்க்க குறிப்பிட்ட நாளில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதேபோல் பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் உட்பட பெரும்பாலான மின்விளக்குகள் பழுதாகி கிடக்கிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே புதிய பஸ்நிலையத்தில் பழுதான மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    வேலூர் போலீஸ் நிலையத்தில் வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் அரசமர பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 50). பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடையில் பூ வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர்.

    இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:- 

    பழைய பஸ் நிலையத்தில் வைத்திருந்த பூ கடையை பெண் வியாபாரி ஒருவரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறினேன். அந்த கடைக்கு அவரது பெயரில் மாநகராட்சிக்கு வரி செலுத்திவிட்டு கடைக்கு உரிமை கொண்டாடினார்.

    இதுபற்றி மாநகராட்சி அலுவலகம், வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் என்னை அலைக்கழித்தனர். அவரிடமிருந்து கடையை மீட்டுதர கோரி போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றேன் என்றார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மேட்டுபாளையம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (வயது 25). இவருக்கும் நெட்டு குந்தி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் கடந்த 2 வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    தீபிகா நேற்று தனது தாய் வீடான மேட்டுபாளையத்திற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டிக்கு வந்த பெற்றோர் கதறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருமணமாகி 2 வாரங்களே ஆகிய நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாலாஜா:

    வாலாஜா அருகேயுள்ள மருதம்பாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை ராணிப்பேட்டை-பொன்னை சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில் எங்கள் ஊரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. பொன்னை ஆற்றில் இருந்து பைப் மூலம் டேங்கிற்கு தண்ணீர் கொண்டு வரபட்டு சப்ளை செய்துவந்தனர்.

    தற்போது குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டாரை இயக்கபட முடியவில்லை. இது குறித்து மேல்பாடி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்த போது புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகிறோம் என்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தாசில்தார் பூமா, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ராணிப்பேட்டை பொன்னை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    ஆம்பூர் அருகே அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் கூட்ரோட்டில் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள், ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தல் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று இரவு நடந்தது.

    இதில் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, எம்.எல்.ஏ.க்கள் வில்வநாதன், காத்தவராயன் ஆகியோர் பேசினர். அப்போது அ.தி.மு.க. ஆட்சியை பற்றி பேசினர். இரவு 10 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் 10 மணி கடந்தும் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது வெங்கட சமுத்திரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சிதம்பரம் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அங்கு வந்தனர். இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்த கூடாது உடனே நிறுத்த வேண்டும். என அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் பொதுக்கூட்டத்தை நிறுத்துமாறு கூறினர்.

    அப்போது போலீசாருக்கும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க.வினருடன் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானபடுத்தினர்.

    இதையடுத்து அ.தி.மு.க.வினர் உமராபாத் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    அதே நேரத்தில் வெங்கடசமுத்திரம் கூட்ரோட்டில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர். இதனால் இரவு 12 மணிவரை பதட்டம் நீடித்தது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    2 கட்சிகள் சார்பில் தனி தனியே புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூரில் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கோடை வெயிலை குளிர்விக்கும் வகையில் மழை பெய்யுமா? என்று பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வேலூரில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்தது.

    மாலையில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மிதமான மழை பெய்தது. அரக்கோணத்தில் மாலை 3 மணியளவில் திடீரென்று பெய்த மழை சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மிதமான மழையாக தொடங்கிய பின்னர் பலத்த மழையாக மாறியது.

    பலத்த மழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காந்திரோடு, பழனிப்பேட்டை பகுதிகள் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றனர். அதேபோல் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

    மேலும் காட்பாடி, குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலை நேரத்தில் திடீரென்று பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், வியாபாரிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர்.

    கோடை வெயிலை குளிர்விக்கும் வகையிலும், சொற்ப அளவிலாவது குடிநீர் தேவை ஈடு செய்யும் வகையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் பஜார் தெருவில் உள்ள நகை கடையில் நேற்று ஒரு வாலிபர் நகை அடகு வைக்க வந்தார். அவர் மீது சந்தேகமடைந்த கடை உரிமையாளர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் மற்றும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பது தெரியவந்தது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருத்தணியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் வந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராணியம்மாள். என்பவரிடம் 6 பவுன் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மேலும் ஏதேனும் திருட்டில் சம்பந்தபட்டுள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா அருகே பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை தெருவில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் ஐ.ஓ.பி. நகரில் இன்று காலை நாய்கள் குரைத்த படியும் காகங்கள் கரைந்தபடி இருந்தன. மேலும் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கபடாத நிலையில் கிடந்தது.

    இது குறித்து பொதுமக்கள் சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை வீசி சென்றது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும், கடந்த 2 வாரங்களில் குழந்தையை ஆஸ்பத்திரியில் பெற்றேடுத்தவர்கள் விபரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×