search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடை மழை"

    சத்தியமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் 2  ஆயிரம் வாழைகள் சூறை காற்றால் முற்றிலும் அடியோடு சாய்ந்து விழுந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் விடிய-விடிய பலத்த சூறை காற்றுடன் இடி- மின்னலுடன் மழை கொட்டியது.

    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 9.30 மணிக்கு பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து 1½ மணி நேரம் விடாமல் பெய்தது. இதனால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பல இடங்களில் ரோட்டோரம் உள்ள மரங்கள் பலத்த காற்றால் பேயாட்டம் ஆடியது. சட... சட.. வென மரக்கிளைகள் முறிந்தது.

    சத்தி-கோவை ரோட்டில் ஒருவேப்ப மரமும் இதேபோல் மேட்டுப் பாளையம் ரோட்டில் ஒரு வேப்ப மரமும் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சத்தியில் பலத்த காற்றால் 3 மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் சத்தியில் மின்தடை ஏற்பட்டது.

    நேற்று இரவு 9 மணிக்கு நகரில் தடைப்பட்ட மின்சாரம் இன்று அதிகாலை 5 மணிக்குதான் வந்தது. விடிய... விடிய... மின்சாரம் இல்லாததால் மக்கள் தூக்கமின்றி மிகவும் அவதிப்பட்டனர்.

    கோவை ரோட்டில் சோமசுந்தரம் என்பவரது தோட்டம் உள்ளது. சூறாவளி காற்றால் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த சுமார் 2 ஆயிரம் செவ்வாழை மரங்கள் சூறை காற்றால் முற்றிலும் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதன் சேதமதிப்பு ரூ.2லட்சம் ஆகும்.

    பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேபோல் சத்தி அருகே உள்ள திம்மையன் புதூரில் பலத்த காற்றால் முகுந்தன் என்பவரது வீட்டின்மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் வீடு சேதம் அடைந்தது.

    கூடலூர் மற்றும் பந்தலூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூரில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏற்பட்ட வறட்சியால், வனப்பகுதிகள் பசுமையை இழந்தன. நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. ஆனால் கடந்த சில நாட்களாக மாலை அல்லது இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளன. மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இருப்பினும் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியதால், வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூரில் பலத்த மழை பெய்தது. ஆனால் நேற்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. இதற்கிடையில் மதியம் 12.45 மணியளவில் கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து முதுமலை வனப்பகுதி வழியாக கூடலூருக்கு வரும் உயர் கோபுர மின் அழுத்த கம்பிகள் பலத்த மழை காரணமாக பல இடங்களில் அறுந்து விழுந்துள்ளன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கோடை மழை பெய்தாலும் கூடலூர் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று பந்தலூர், மேங்கோரேஞ்சு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் கொளப்பள்ளியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையிலும், பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையிலும், கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள மேங்கோரேஞ்சு பகுதியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார துறையினர் விரைந்து வந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஆயிஷா என்பவரது வீட்டில் மின்னல் தாக்கி மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. 
    குலசேகரம் அருகே நேற்று மாலை இடி, மின்னலுடன் பெய்த மழையில் மரம் விழுந்து வீடு சேதமானது.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும், மலையோர கிராமங்களிலும் கோடை மழை பெய்கிறது. நேற்று மாலையிலும் குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    மழை காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்கள், சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    குலசேகரம் பகுதியில் பெய்த மழையில் மரம் விழுந்து குடிசை வீடு ஒன்று சேதமானது. குலசேகரத்தை அடுத்த வெண்டலிக் கோட்டில் இச்சம்பவம் நடந்தது.

    வீட்டில் கூலித்தொழிலாளி ராஜன் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். அவருடன் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் ராஜனின் தாயார் ஆகியோர் இருந்தனர்.

    குலசேகரம் பகுதியில் நேற்று மாலை மழை பெய்த போது வீட்டில் ராஜனும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். அப்போது வீட்டின் அருகே நின்ற மரம் பலத்த மழையால் சரிந்து விழுந்தது.

    மரம் விழும் சத்தம் கேட்டதும், ராஜனும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ராஜனின் வீடு மழையால் இடிந்த தகவல் வருவாய் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொன்மனை கிராம நிர்வாக அதிகாரி ரவி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் அந்த பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுத்தார். அதனை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

    பானி புயலின் கோரத்தாண்டவத்தால் சின்னாபின்னமான ஒடிசா மாநிலத்தில் புயலின் தாக்கத்தினால் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.

    நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன் எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். விழுந்த மரங்களுக்கு பதிலாக போர்க்கால அடிப்படையில் புதிய மரங்கள் நடப்படும் என அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பானி புயலின் தாக்கத்துக்கு  மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய பானி புயல், புவனேஸ்வரில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் சாய்த்துவிட்டது.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 3-ம் தேதி பானி புயல் தாக்கியது. புயலின் வேகம் மற்றும் புயல் கரை கடக்கும் பகுதிகளை முன்கூட்டியே கணித்து வானிலை மையம் எச்சரித்ததால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் புயல் கரை கடந்தபோது, பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 

    ஆனால், அசுர வேகத்தில் வீசிய காற்று கடலோர பகுதிகளை துவம்சம் செய்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் புவனேஸ்வரில் மட்டும் பச்சைப் பசேல் என வளர்ந்து, தூய காற்றை வழங்கி வந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துவிட்டன. நகரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. அவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன. 

    20 வருடங்களுக்கும் மேலாக பராமரித்து வளர்த்த மரங்களுடன் கொண்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பு, இப்போது சுக்கு நூறாக நொறுங்கிப்போய் உள்ளது. அந்த இடத்தில் மீண்டும் மரங்களை வளர்த்து, அவற்றின் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கும் பாக்கியத்தை பெறுவதற்கு இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும். சாலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. 

    இதுபற்றி வனத்துறை அதிகாரி அசோக் மிஸ்ரா கூறுகையில், “சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மரங்களை எங்கள் குழந்தைகள் போன்று வளர்த்து பராமரித்தோம். புயலால் கிளைகள் முறிந்து சேதமடைந்த மரங்களை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். 40 பேர் கொண்ட எங்கள் குழுவினர், கடந்த 4 நாட்களில் மட்டும் 800 மரக்கன்றுகள் நட்டுள்ளனர். புயலில் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை இப்போது மதிப்பிட இயலாது. ஒட்டுமொத்த பசுமையும் அழிந்துவிட்டது” என்றார். 
    மீன்சுருட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதில் 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய பருவத்தில் இருந்தன.
    மீன்சுருட்டி:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து, வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது.

    பலத்த காற்றின் காரணமாக, மீன்சுருட்டி அருகே மாதாபுரம் கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய பருவத்தில் இருந்தன.

    இது குறித்து வாழை விவசாயி குழந்தைசாமி கூறுகையில், இந்த பகுதியில் அவ்வவ்போது ஏற்படும் மின் தடையை பொருட்படுத்தாமல் ஜெனரேட்டர் வைத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தேன். இதுவரை வாழை சாகுபடிக்கு ரூ.9 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் பலத்த காற்றில் வாழைகள் எல்லாம் சாய்ந்தன. வாழை சாகுபடி செய்வதற்காக நகையை அடகு வைத்துள்ளேன். தற்போது வாழைகள் சாய்ந்ததால், நிர்க்கதியாக நிற்கிறேன். எனவே வேளாண் அதிகாரிகள் வாழை சாய்ந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
    தாராபுரத்தில் நேந்று இரவு 3 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அன்னூரில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூரில் கடந்த திங்கட்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரெயில் நிலைய மேற்கூரை காற்றில் பறந்தது. இதில் மரங்கள், மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இரவு 11.30 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை மூன்றரை மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தாராபுரத்தை சுற்றி உள்ள மூலனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீடித்தது. தாராபுரத்தில் 16 மில்லி மீட்டரும், மூலனூரில் 41 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நேற்று மாலை கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஒன்னக்கரசம்பாளையம், குரும்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, பாசக்குட்டை ஆகிய கிராமங்களில் சூறை காற்றுக்கு வாழை மரங்கள் பாதியில் முறிந்து விழுந்தது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது வாழை பயிரிட்டு 6 மாதம் முதல் 7 மாதங்கள் வரை ஆகிறது.

    ஒரு சில விவசாய நிலத்தில் பயிரிட்டு உள்ள வாழை மரங்கள் 2, 3 மாதத்திற்கு பிறகு வெட்ட தயார் நிலைக்கு வரும். ஒரு சில தோட்டத்தில் பூக்கள் வெளிப்பட்டு 3 மாதம் கழித்து காய் முற்றி வெட்டுக்கு வரும் நிலையிலேயே ஏற்பட்ட சூறாவளி காற்றினால் வாழை மரம் பாதியில் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னூர்கிராம நிர்வாக அலுவலரும் சேத மதிப்பு குறித்து மதிப்பீடு செய்து வருகிறார்.

    சூளகிரி பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது.
    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆங்காங்கே மழையும் பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலினால் இரவு நேரங்களில் வீடுகளில் தூங்குவோர் கடும் புழுக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் தெருக்கள் மற்றும் வீட்டு தின்னைகளை நோக்கியே சென்றனர். மேலும், சூளகிரி பகுதி ஏரி, குளங்களில் போதியஅளவு தண்ணீர் இன்றி பல ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கினறுகள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ், சாமுவேல், ரங்கராஜன் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கிவந்த நிலையில் நேற்று மாலை சூளகிரி பகுதிகளில் சுமார் மாலை 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இதில் சூளகிரி, மாரண்டபள்ளி, தியாகரசன பள்ளி, சென்னபள்ளி, பஸ்த்தள பள்ளி, சின்னார் மற்றும் பல பகுதியில் பரவலான மழை பெய்தது. மழையினால் நள்ளிரவு நேரத்தில் சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு உள்ள வேப்பமரம் வேரோடு சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்களுக்கு எந்தவித விபத்து மற்றும் சேதங்கள் இல்லாமல் இருந்தது.
    சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தர்மபுரி நகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதமாக மழை பெய்யாமல் வரண்ட வானிலையே காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. எனவே தருமபுரி மாவட்ட பொது மக்கள் குடிநீர் இன்றி தவித்து வந்தனர். மேலும் கோடைகால கத்திரி வெயில் ஆரம்பித்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் பாலக்கோட்டில் லேசான மழை பெய்தது. 

    பாப்பிரெட்டி பகுதியில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை தொடர்ந்து தருமபுரி நகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிக்கு மேல் மழைபெய்ய தொடங்கியது. இந்த மழை இடியுடன் கூடிய மழையாக தொடர்ந்து காலை 3 மணி வரை விடாமல் பெய்தது. 

    இது போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் தென்னை, மாமரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்தது. கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான செண்பகத்தோப்பு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் தாக்கம் அதிகரித்தது.

    சூறாவளியின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் செண்பகத் தோப்பு பகுதியில் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மாமரங்கள் சாய்ந்து மாங்காய்கள் உதிர்ந்தன.

    ஏராளமான மாமரங்கள் வேரோடு சாய்ந்தன. இதே போல் அந்தப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களும் முறிந்து விழுந்தன.

    வத்ராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மாங்காய் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தோம்.

    தற்போது சூறாவளியில் மாங்காய்கள் உதிர்ந்து விட்டதால் கிலோ 5 ரூபாய்க்கு விலை போகுமா என்பது சந்தேகம் தான் என்று தங்களது வேதனையை தெரிவித்தனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இன்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குன்னூரில் இடி தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். #TamilNaduRains #Rainfall #IMD
    சென்னை:

    தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

    இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. 

    விருதுநகர், சாத்தூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.  தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

    நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் இடி தாக்கியதில் கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால், அந்த கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், போலீசார் 16 மணிநேர போராட்டத்திற்கு பின், அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #TamilNaduRains #Rainfall #IMD
    ×