என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடி விருதம்பட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் அங்குள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காட்பாடி- வேலூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்ககோரி தாலுக்கா அலுவலகம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இது தொடர்பாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    ராணிப்பேட்டை புதிய மாவட்டத்திற்கு அரக்கோணம், ஆற்காடு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரக்கோணத்தை தலைமையிடமாககொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவை நடைபெற்றது.

    இந்த நிலையில் அரக்கோணம் அனைத்து கூட்டமைப்பு சார்பில் இன்று தாலுக்கா அலுவலகம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தேவராஜ், ரெயில் பயணிகள் சங்க தலைவர் நையினா மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 22-க்கும் மேற்பட்ட அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள் அரக்கோணத்தை புதிய மாவட்டமாக உருவாக்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

    அரக்கோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    காட்பாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    பொன்னை அடுத்த பழைய வசூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (32). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.

    நேற்றிரவு பொன்னையில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்றார். பின்னர் பொன்னைக்கு மீண்டும் ஆட்டோவில் திரும்பினார்.

    அவர் ஓட்டி வந்த ஆட்டோ ரெண்டாடி கூட் ரோட்டில் வந்தபோது பீகார் வாலிபர் சிக்கந்தர் என்பவர் சாலையை கடக்க முயன்றர். இதனால் தேவராஜ் திடீர் என பிரேக் போட்டார். ஆட்டோ சிக்கந்தர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் தேவராஜ் ஆட்டோவின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த சிக்கந்தரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஒரே நாளில் நடந்த சோதனையில் 20 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களது முறையற்ற சிகிச்சையால் பலருக்கு நோயின் தன்மை அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோருக்கு புகார்கள் சென்றன. புகார்களில் தொடர்புடைய போலி டாக்டர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து போலி டாக்டர்களை பிடிக்க கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் 35 குழுக்கள் அமைக்கப்பட்டன.

    அந்த குழுக்களில் ஒரு டாக்டர், ஒரு மருந்தாளுனர், ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தலா ஒரு ஆண் பெண் காவலர்கள் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்பத்தூர், திம்மாம்பேட்டை, ராணிப்பேட்டை, வாலாஜா, பனப்பாக்கம், குடியாத்தம் போன்ற 50 இடங்களில் இக்குழுவினர் சம்மந்தப்பட்ட கிளினிக்குகள், மருத்துவமனைகளுக்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது டாக்டர் முறையாக மருத்துவம் படித்தவரா? என விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் திருப்பத்தூர் அவுசிங்போர்டு பகுதியில் மளிகைக்கடையுடன் கிளினிக் நடத்தி வந்த குலசேகரன் (வயது 42), ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சத்தியநாராயணன் (71), தோரணம்பதியில் கிளினிக் நடத்தும் பெருமாண்டபதியை சேர்ந்த மாது (49), பனப்பாக்கத்தை சேர்ந்த அருள்தாஸ் (48), ஜெயபால் (65), பரதராமியில் கிளினிக் நடத்தி வரும் ஆந்திர மாநிலம் காசிராலா பகுதியை சேர்ந்த துரைசாமி (69), பூஜாரிப்பல்லியை சேர்ந்த மோகன்சுப்பாகர் (69), சீனிவாசலு (57), ரமணப்பா (53), வாணியம்பாடி ஆவாரங்குப்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், யுவராஜ், மோகன்ராஜ், ஆம்பூர் மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (44), பேரணாம்பட்டு அருகே அழிஞ்சி குப்பத்தில் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்த குப்புசாமி (46) உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் சில மருத்துவசாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

    சோதனை நடப்பதை அறிந்த பல போலி டாக்டர்கள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை குழுவினர் தேடி வருகின்றனர்.


    முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இவர்களது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்ய நளினி பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு ஐகோர்ட்டு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

    கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி பரோலில் வந்த நளினி வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார்.

    கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நளினியின் ஒருமாத கால பரோல் முடிவடைய இருந்தது. இதற்கிடையே அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் பேரில் மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு மனு அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து அவரது வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

    மகள் திருமண ஏற்பாடுகளை செய்ய நளினி சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார். அவரது கணவர் முருகனும் தற்போது பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அவர் பிரம்மபுரத்தில் தங்கி திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்றார். 

    பள்ளி மாணவிக்கு காதல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபரை தாக்கியதாக மாணவியின் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் பாசனா பள்ளியை சேர்ந்தவர் 16 வயது பள்ளிமாணவி. இவர் ஆம்பூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவரை மோதகபள்ளியை சேர்ந்த பாரத்வர்மா (19) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பள்ளி மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.

    ஆனாலும் பாரத்வர்மா மாணவி பள்ளிக்கு வந்து செல்லும் போது தனது நண்பர்களுடன் வந்து கிண்டல் செய்து காதல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

    நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது பாரத்வர்மா மாணவியை மறித்து காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் மாணவி செய்வதறியாமல் அழுதார். இதனை கண்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாரத்வர்மாவை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

    இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பாரத்வர்மா மாணவிக்கு காதல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபரை தாக்கியதாக மாணவியின் உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஏலகிரி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28) எலக்ட்ரீசியன். இவருக்கும் புதூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த திவ்யா (24) என்பவருக்கும் கடந்த 1-ந் தேதி வாணியம்பாடியில் திருமணம் நடந்தது.

    புதுமணத் தம்பதி மோட்டார் சைக்கிளில் ஏலகிரி மலைக்கு வந்தனர். அங்கு உள்ள பூங்கா படகு குழாம் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு மாலை 6 மணிக்கு மலைப்பாதையில் வந்துகொண்டிருந்தனர். ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க மணிகண்டன் திடீரென பிரேக் போட்டு பைக்கை நிறுத்த முயன்றார். அந்த நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் மலைப்பாதை தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த புதுப்பெண் திவ்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுமாப்பிள்ளை மணிகண்டன் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் திவ்யா உடலை பார்த்து கதறி அழுதார். ஏலகிரிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புதுப்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான நான்கு நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி தொடங்கிய குடிநீர் ரெயில் இயக்கம் நேற்றுடன் 100-வது முறையாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் ஜூலை 12-ந் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது.

    50 வேகன்கள் கொண்ட இந்த ரெயிலில் 25 லட்சம் (2.5 மில்லியன்) லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கூடுதலாக மற்றொரு ரெயில் இயக்கப்பட்டு மேலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டது. அதன்படி 2 ரெயில்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஒரு தடவை ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல ரூ.8.6 லட்சம் செலவாகிறது.

    ஜூலை 12-ந்தேதி தொடங்கிய குடிநீர் ரெயில் இயக்கம் நேற்றுடன் 100-வது முறையாகும். நேற்று காலையில் ஒரு ரெயிலிலும் மாலையில் ஒரு ரெயிலிலும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.

    100 தடவை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டதில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் வெற்றிகரமாக சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    12-ந் தேதியில் இருந்து நேற்று வரை 250 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த குடிநீர் சென்னை மாநகர மேற்கு பகுதிகளில் சப்ளை செய்யபடுகிறது.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. ஆபீசில் தஞ்சமடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கேதாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 21). வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். அஸ்வினியும் அதே பகுதியை சேர்ந்த பிரிதிப்குமார் (25) என்கிற வாலிபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அஸ்வினிக்கு வேரு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

    இதனால் கடந்த வாரம் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியே சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி வேலூர் எஸ்.பி. ஆபீசில் இன்று தஞ்சமடைந்தனர்.
    வேலூரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கனி (வயது 54). இவருக்கும் அரக்கோணத்தில் அரசியல் கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் கனி அரக்கோணத்தில் இருந்து வேலூர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரோடு அரக்கோணம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய போலீசாரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் இன்ஸ்பெக்டர் கனி மிகவும் விரக்தி அடைந்தார்.

    இது பற்றி சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுமுறை கேட்டும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மருத்துவ விடுப்பில் சென்ற அவர் வேலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்தார்.

    மனமுடைந்து காணப்பட்ட அவர் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணியிட மாற்றத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கே.வி.குப்பம் அருகே ராணுவ வீரர் மனைவியிடம் நகையை மர்ம கும்பல் பறித்து சென்றனர்.
    குடியாத்தம்:

    கே.வி.குப்பம் அருகே வடுகந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், ராணுவவீரர். இவரது மனைவி வசந்தி (வயது35). இவர்களது வீடு விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது. வீட்டை ஒட்டியபடி உள்ள பங்க்கடையை வசந்தி கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வசந்தி கடையை அடைத்து கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். 

    அவர்கள் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நோட்டமிட்டனர். பின்னர் திடீரென ஒருவன் வசந்தியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளான். அப்போது வசந்தி செயினை விடமாமல் போராடினார். இருப்பினும் அந்த நபர் தங்க செயினை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாவில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாலாஜா:

    அம்மூர் அடுத்த கல்புதூர் பெரிய தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சங்கர் (வயது 18). கட்டிட மேஸ்திரி. நேற்று மாலை ஆற்காடு அருகே உள்ள ஒரு ஊரில் கட்டிட வேலை முடித்து கல்புதூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    ராணிப்பேட்டை- சோளிங்கர் சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற லாரி திடீரென வலது பக்கம் திரும்பியது. இதனால் லாரியின் பின்னால் சென்ற சங்கரின் பைக் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சங்கரின் சகோதரி சவுந்தர்யா ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×