என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்தன. வேலூர் ஆற்காடு அம்மூண்டி, சோளிங்கர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வேலூரில் தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை பெய்தது. மற்ற இடங்களில் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக வேலூர் மாநகர சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் தொரப்பாடி அரியூர் சாலை, லட்சுமி தியேட்டர், தெற்கு போலீஸ் நிலையம் கிரீன்சர்க்கிள் பகுதிகளில் சாலைகளில் அதிகளவு மழை வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
லட்சுமி தியேட்டர் சிக்னலில் இருந்து கண்ணா ஓட்டல் சந்திப்பு வரை குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட இடத்தில் தார்சாலை அமைக்கவில்லை. அங்கு குண்டும் குழியுமான மண் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.
நேற்று மாலை 5 மணிமுதல் இரவு 7.30 மணி வரை அந்த சாலையில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. இதேபோல் கிரீன்சர்க்கிள் பகுதியில் மழை வெள்ளத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேஷனல் சிக்னல்வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுபோன்ற நெரிசலை தவிர்க்க மாநகர சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால் வியாபாரத்திற்கு தரையில் வைத்து இருந்த காய்கறிகள் வெள்ளத்தில் மிதந்தன. அவற்றை சேரிக்கும் முயற்சியில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில் மழை வலுத்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 6 மணியளவில் மழையின் வேகம் குறைந்த நிலையில் இரவு 7 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இதேபோல செங்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. செங்கம், பரமனந்தல், கரியமங்கலம், பக்கிரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பனப்பாக்கம்:
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் திருமண வரவேற்பு பேனர் சென்னை- பெங்களூ தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டிருந்தது.
நெமிலியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பைக்கில் காவேரிப்பாக்கத்துக்கு வந்தார். காவேரிப்பாக்கம் பஸ்நிலையம் எதிரே சாலையை கடக்க காத்திருந்தார்.
அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் சரிந்து டாஸ்மாக் ஊழியர் தலையில் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று பேனர் விழுந்து பெண் என்ஜினியர் பலியான சம்பவம் நடந்துள்ள நிலையில் காவேரிப்பாக்கத்தில் பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே பேனர் வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது முறையாக பின்பற்றப்படுகிறதா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்று பொதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர்:
வேலூர் வேலப்பாடியில் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு இணை பதிவாளராக சிவலங்கம் பணியாற்றி வருகிறார். மேலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் சங்கங்கள் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், இடைத் தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாகவும் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடைத் தரகர்களின் நடமாட்டத்தை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி, பிரியா உள்பட 10 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 6 மணியளவில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திடீரென சென்றனர். அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியே உள்ளவர்கள் உள்ளே வராதபடியும் பார்த்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இணை பதிவாளர் அறை, அலுவலர்களின் அறை, கழிவறை, பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், மேசையின் அடியில் என பலப்பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கழிவறையில் மற்றும் பீரோவின் அடியில் என தூக்கி வீசப்பட்ட கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் சிக்கியது.
இதுதொடர்பாக இணை பதிவாளர் சிவலிங்கம், அதிகாரிகள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 5 மணி நேரம் இரவு 11 மணி வரை நீடித்தது. தொடர்ந்து இன்று காலையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு தனியார் பஸ் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பஸ்சை பாஸ்கர் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு இறங்கி ஓடினர். அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்கள் தீயணைக்கும் சிலிண்டரை எடுத்து வந்து தீயை அணைத்தனர். தீயை உடனடியாக அணைக்காமல் விட்டிருந்தால் அருகிலிருந்த பெட்ரோல் பங்க்கிலும் பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் என்ஜின் மற்றும் பஸ்சின் முன்புற பகுதியில் தொடர்ந்து புகை வந்தது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து பஸ்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் கட்டாயம் வைக்க வேண்டும். ஆனால் விபத்து நடந்த பஸ்சில் இதுபோன்று உபகரணங்கள் ஏதும் இல்லை. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பஸ் உள்ளிட்ட வாகனங்களை முறையாக ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரக்கோணம் நேருஜி நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரீட்டா (வயது 32). இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்தார். இதனால் இந்த நாய்கள் அனைத்தும் இவர் வீட்டு முன்பே படுத்திருக்கும்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் நாய்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தின்ற 10 நாய்கள் தெருவில் கிடந்து துடித்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்தனர்.
இதில் மூன்று நாய்கள் உயிர் பிழைத்தன. 7 நாய்கள் துடிதுடித்து இறந்தன. இதனைக் கண்ட அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர். அரக்கோணம் நகராட்சி ஊழியர்கள் மூலம் இறந்த நாய்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
நாய்களுக்கு விஷம் கொடுத்த நபர் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேலும் இது தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
காட்பாடி விருதம்பட்டு பால் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 53). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்தி ரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிரேசி மில்டன். வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை நிபுணராக உள்ளார். இவர் மகள் சென்னையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு கிரேசி மற்றும் அவரது மகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். கிரேசி, அவரது மகன் தூங்கிக்கொண்டு இருந்த அறையை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டினர்.
பின்னர் மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை எடுத்தனர். அதனுடன் மோட்டார் சைக்கிள் ஆர்.சி.புக் ஜெராக்ஸ் இருந்தது அதனை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த பைக்கை ஓட்டிசென்றுவிட்டனர்.
இன்று காலை கண் விழித்த கிரேசி தான் அறையில் பூட்டப்பட்டிருப்பதை அறிந்தார். அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் சென்று மீட்டனர்.
இதுபற்றி விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
அந்தப் பகுதியில் உள்ள வணிக வளாகம் மற்றும் வீடுகளில் உள்ள கேமராக்கள் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி ரெயில் நிலையம் உள்ளது.
இங்கு சாந்திநகர் குளிதிகை வடபுதுப்பட்டி உட்படபத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் வியாபாரிகள் அலுவலகம் செல்வோர் மேல்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு சென்று வந்தனர் இந்நிலையில் என்ஜின் பழுது காரணமாக மேல்பட்டி ரெயில் நிலையத்தில் கனிந்த பார் கடந்த 15 நாட்களாக சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சென்னையிலிருந்து மேல்பட்டி ரேயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ரெயில் நிற்க வேண்டிய இடத்தில் சரக்கு ரெயில் நிற்பதால் மாற்றுப்பாதையில் ரெயில் நிறுத்தப்படுகிறது.
இதனால் இரவில் ரெயிலில் வரும் பயணிகள் முதியவர்கள் ரெயிலில் இருந்து கீழே இறங்க மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரெயில் பயணிகள் இன்று காலை மேல்பட்டி ரேயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார் பேட்டையிலிருந்து அரக்கோணம் தெற்கு சென்ற பயணிகள் மின்சார ரெயிலை மறித்தனர்.
இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி ரெயில் நிலைய அலுவலர் கலைவாணன் மங்களூர் ரெயில் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் சென்னை சென்னையிலிருந்து இன்று மாலைக்குள் மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு கூட்ஸ் ரெயில் அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மேல்பட்டி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38) டெய்லர். இவரது மனைவி ராதிகா (33). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மனைவி ராதிகா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் ராதிகாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்காமல் ராதிகா அலறி கூச்சலிட்டார். ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ராதிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா நேற்று மாலை உயிரிழந்தார்.
இது குறித்து சுரேஷ் மீது கொலை வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு திப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன் ரவி. இவருக்கும் பலவன் சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இரு வீட்டாரும் திருமண பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்தனர்.
இன்று காலை வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது .நேற்று இரவு மணமகன், மணமகள் அழைப்பு போன்ற சடங்குகள் நடந்தன.
இன்று காலையில் திருமணத்திற்காக இருவீட்டாரும் சேண்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்த புதுமாப்பிள்ளை ரவி திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாலி கட்டாமல் சென்ற புதுமாப்பிள்ளை ரவி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். எனக்கு இன்று திருமணம். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் தாலி கட்ட மறுத்து வந்து விட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
ஆரணி களம்பூரை சேர்ந்தவர் கோதண்டராமன் (49), அரிசி வியாபாரி. இவர் திருவண்ணாமலை, வேலூரில் உள்ள கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்து வருகிறார். அவ்வப்போது வேலூருக்கு வந்து வியாபாரிகளிடம் அரிசிக்கான பணத்தை வசூலித்து செல்கிறார்.
கடந்த 4-ந் தேதி வேலூர் வந்த அவர் வேலப்பாடி பகுதியில் அரிசி வினியோகித்த வியாபாரிகளிடம் வசூலித்த ரூ.2 லட்சத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பைக்கில் வந்த 4 பேர் திடீரென கோதண்டராமனிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சேகர் (30) உள்பட 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சேகரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடன் இந்த வழிப்பறியில் ஈடுபட்டு தலைமைறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காட்பாடி அடுத்த கீழ் வடுகன் குட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி. காட்பாடியில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மகள் மதுமிதா (வயது12). குடியாத்தம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்தார். நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார். ஆட்டோவில் அதிக மாணவர்கள் இருந்ததால் மதுமிதா டிரைவர் சீட்டில் ஒரு ஓரத்தில் அமர வைக்கப்பட்டார்.
டிரைவர் சீட்டில் இருந்ததால் அவரால் சரியாக அமர முடியவில்லை. ஆட்டோ கீழ் வடுகன் குட்டையில் வந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியது. அப்போது டிரைவர் சீட்டில் இருந்த மாணவி மதுமிதா தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மாணவியை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
காட்பாடி போலீசார் மாணவி உடலை மீட்டு பழைய காட்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக வேலூர் மாநகர பகுதிகளில் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிக அளவில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






