search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூர் மாவட்டத்தில் 20 போலி டாக்டர்கள் கைது

    வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஒரே நாளில் நடந்த சோதனையில் 20 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களது முறையற்ற சிகிச்சையால் பலருக்கு நோயின் தன்மை அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோருக்கு புகார்கள் சென்றன. புகார்களில் தொடர்புடைய போலி டாக்டர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து போலி டாக்டர்களை பிடிக்க கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் 35 குழுக்கள் அமைக்கப்பட்டன.

    அந்த குழுக்களில் ஒரு டாக்டர், ஒரு மருந்தாளுனர், ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தலா ஒரு ஆண் பெண் காவலர்கள் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்பத்தூர், திம்மாம்பேட்டை, ராணிப்பேட்டை, வாலாஜா, பனப்பாக்கம், குடியாத்தம் போன்ற 50 இடங்களில் இக்குழுவினர் சம்மந்தப்பட்ட கிளினிக்குகள், மருத்துவமனைகளுக்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது டாக்டர் முறையாக மருத்துவம் படித்தவரா? என விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் திருப்பத்தூர் அவுசிங்போர்டு பகுதியில் மளிகைக்கடையுடன் கிளினிக் நடத்தி வந்த குலசேகரன் (வயது 42), ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் சத்தியநாராயணன் (71), தோரணம்பதியில் கிளினிக் நடத்தும் பெருமாண்டபதியை சேர்ந்த மாது (49), பனப்பாக்கத்தை சேர்ந்த அருள்தாஸ் (48), ஜெயபால் (65), பரதராமியில் கிளினிக் நடத்தி வரும் ஆந்திர மாநிலம் காசிராலா பகுதியை சேர்ந்த துரைசாமி (69), பூஜாரிப்பல்லியை சேர்ந்த மோகன்சுப்பாகர் (69), சீனிவாசலு (57), ரமணப்பா (53), வாணியம்பாடி ஆவாரங்குப்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், யுவராஜ், மோகன்ராஜ், ஆம்பூர் மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (44), பேரணாம்பட்டு அருகே அழிஞ்சி குப்பத்தில் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்த குப்புசாமி (46) உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் சில மருத்துவசாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

    சோதனை நடப்பதை அறிந்த பல போலி டாக்டர்கள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்களை குழுவினர் தேடி வருகின்றனர்.


    Next Story
    ×