என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டது.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று காலை நாடராஜருக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

    அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 30-ந் தேதி முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • மகா தீப மை பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வணங்கினர்.

    இன்று நடராஜருக்கு சாத்தப்பட்ட மகா தீப மை பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும். மகா தீபத்திற்கு நெய் காணிக்கை அளித்த பக்தர்களுக்கும் மகா தீப மை பிரசாதம் வழங்கப்படும்.

    திருவண்ணாமலையில் இன்று 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து

    வேங்கிக்கால்:

    அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் என்பதால், கடந்த 3 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    அதன்படி, அதிகாலை கோவிலில் நடை திறக்கும்போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது.

    நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    அதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் திருவண்ணாமலை நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை சென்னையில் இருந்து வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடைகின்றது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப் பட்டு செல்கிறது.

    அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகின்றது.

    அதேபோல் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணா மலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திரு வண்ணாமலையில் இருந்து 27-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 6.07 மணி முதல் புதன்கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது.
    • கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி மார்கழி மாத பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.07 மணிக்கு தொடங்கி புதன் கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். மேலும் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ் மில் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர்.

    இங்குள்ள பூனை, நாயுடன் ஒன்றாக சேர்ந்து கொஞ்சி விளையாடி வருகிறது.

    அந்த நாயும் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது.

    இதனால் பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது. சில நாய்கள் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. ஆனால் இங்குள்ள நாய் பூனைக்கு பால் கொடுப்பதை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
    • திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மார்கழி மாத பிறப்பு மற்றும் விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

     வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாமி தாிசனம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை விழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில், அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்களில் மார்கழி மாத திருப்பாவை விழா நடந்தது.

    ஆரணி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை வளர்பிறை பஞ்சமி விழாவையொட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேத்துப்பட்டு இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடுங்குளிரிலும் அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கினர். இஞ்சிமேடு பெரிய மலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ஆவணியாபுரம் சிம்மமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தேசூர் ஆதிகேசவபெருமாள் கோவில், சேத்துப்பட்டு வரத சஞ்சீவிராய பெருமாள் கோவில், பெரிய கொழப்பலூர் காரக தூஷணபெருமாள் கோவில், திருக்குராயீஸ்வரர், திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு போளூர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போளூர் மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில், வெண்மணியில் அமைந்துள்ள விநாயகர் கோவில், குன்னத்தூரில் அமைந்துள்ள பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன.

    அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது.

    இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர்.

    பின்னர் சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் இது போன்ற செயல்களில் பஸ் டிரைவர்கள், பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    • 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ்சில் திருப்பதிக்கு சென்றனர்.
    • போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆரணி:

    மதுரையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ்சில் திருப்பதிக்கு சென்றனர். பஸ்சை தஞ்சாவூரை சேர்ந்த விக்டர் என்பவர் ஓட்டி சென்றார்.

    சாமி தரிசனம் முடிந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலை நெசல் கூட்ரோடு அருகே வரும்போது சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.

    இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக 4 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டராக ஷாபுதீன் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிகின்றனர்.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பைக்குகளை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு பாதுகாப்பு பணிக்காக இங்குள்ளபோலீசார் சென்றனர்.

    ஒரு சில போலீசார் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட, பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு' தப்பித்து சென்றனர்.

    சிறிது நேரத்தில் பைக்குகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. திடீரென உள்ளே பைக்குகள் தீப்பற்றி எரிவதை கண்ட போலீசார் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் பல பைக்குகள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார்.
    • குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம்

    திருவண்ணாமலை:

    கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

    அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் உள்ள 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான இன்று குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இன்று அதிகாலையில் இருந்தே உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர். மாலை 6 மணியளவில் குபேர லிங்க கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை நடக்கிறது.

    குபேர கிரிவலத்தை யொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்தனர். அவர்களுடன் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் ஒன்று திரண்டனர். பொது தரிசன பாதையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ×