என் மலர்
திருவள்ளூர்
- 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைத்திருந்தார்.
இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை உணவில் இட்லி, பொங்கல், கிச்சடி போன்றவையும், மதியம் கலவை சாதம், ரசம், சாம்பார், கூட்டு, பொரியல். இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவு கலன்களை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். விழா மேடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர், மதிவேந்தன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு துறை செயலாளர் சத்தியபிரதா சாகு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திருவேற்காடு:
திருவேற்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்களின் தாகத்தை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தின் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தில் அட்டைப்பூச்சி, பல்லி, பாசிகள் இருப்பதை கண்ட பக்தர் ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவியது.
சுகாதாரமற்ற நிலையில் உள்ள அந்த தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் குடிப்பதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அதனை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
- நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.
- பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுகிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் திருத்தணி கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி தரிசனம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், மலர் காவடி, மயில் காவடி சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபட உள்ளனர். மேலும் சண்முக கடவுளுக்கு காவடி மண்டபத்தில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
தைப்பூச நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வருவார்கள் என்பதால் மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதையடுத்து வாகன நெரிசலை தடுக்கும் வகையில் தைப்பூசத்தன்று ஆட்டோக்கள் மற்றும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மலைக்கு சென்று வர அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி நாளில் திருப்படி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் ஒரு ஆண்டை குறிக்கும் வகையில் உள்ள 365 படிக்கட்டுகளில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான படித்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருத்தணி மலையடிவாரத்தில் உள்ள முதல் படிக்கட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தி விழா தொடங்கப்பட்டது.
திருப்புகழ், தேவாரம், திருவாசகம் மற்றும் பக்தி பாடல்கள் பாடியபடி பக்தர்கள் ஒவ்வொரு படிகட்டுகளின் வழியாக நடந்து சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.
திருப்படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும். நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் விடியவிடிய சாமி தரிசனம் செய்யலாம்.
இன்று காலை உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார்.
- சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தனது பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கிய மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.
சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த சிறுணியம், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். மணியம் மயங்கி விழுந்ததும், பழனிச்சாமி பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
- தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.
- மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, 3 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகத் தனது தந்தையைப் பாம்பைக் கடிக்க வைத்துக் கொலை செய்த இரண்டு மகன்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம், இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மகன் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
கணேசன் இறந்த பிறகு, அவரது மகன்கள் மோகன்ராஜ் (29) மற்றும் ஹரிஹரன் ஆகியோர் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரினர்.
ஆனால், கணேசன் பெயரில் வருமானத்திற்கு மீறிய வகையில் பல காப்பீட்டு பாலிசிகள் இருப்பதையும், அந்த குடும்பத்திற்குப் பல இடங்களில் கடன் இருப்பதையும் கவனித்த காப்பீட்டு நிறுவனம், காவல்துறையிடம் புகார் அளித்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தந்தையைக் கொன்று விபத்து மரணமாகக் காட்டினால் பெரிய தொகையை ஈட்டலாம் என மகன்கள் திட்டமிட்டுள்ளனர்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே, தினகரன் என்பவரிடம் இருந்து ஒரு பாம்பை வாங்கி தந்தையின் காலில் கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அப்போது கணேசன் உயிர் தப்பிவிட்டார்.
மீண்டும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை வரவழைத்து, அக்டோபர் 22 அதிகாலையில் கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்துள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.
பாம்பு கடித்தவுடன், அது தானாக வீட்டிற்குள் வந்தது போலக் காட்ட அந்தப் பாம்பை அங்கேயே அடித்துக் கொன்றுள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் மற்றும் அவர்களுக்குப் பாம்பை ஏற்பாடு செய்தும் உதவி புரிந்தும் வந்த பாலாஜி, பிரசாந்த், தினகரன், நவீன்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது.
- புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழையாக கொட்டியது. மேலும் டிட்வா புயலின் தாக்கத்தாலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டின.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 750 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீராக 500 கனஅடி தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மழை கொட்டியது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அதன் கரையோரப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.

செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியில் ஏரியின் கரையோரத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் குன்றத்தூர் அருகே புதுப்பேடு, தாராவூர், குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் சென்று உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏரியில் 23 அடிவரை தண்ணீர் தேக்கினால் பாதிப்பு இருக்காது. தற்போது ஏரியில் 24 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது என்றனர்.
இதேபோல் புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரிக்கு 270 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரிக்கு 850 கன அடியும் தண்ணீர்வருகிறது. 500 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் 18.86 அடியில் 12.72 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 45 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 461 மி.கன அடி தண்ணீர் உள்ளது.ஏரிக்கு நீர் வரத்து இல்லை.
- மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
- பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மக்கள் தொடர்பு கொள்ள, அவசர உதவிக்கு 7299004456, மருத்துவ தேவை 9384814050, கால்நடை பாதிப்பு 1962 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு.
- மருத்துவ உதவிக்கு 93848 14050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
டிட்வா புயுல் நெருங்கி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்.
அதன்படி, அவசர உதவிக்கு 72990 04456 என்ற எண்ணிற்கும், கால்நடை பாதிப்பிற்கு 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ உதவிக்கு 93848 14050 என்ற எண்ணிற்கும், அவசர தேவைக்கு கட்டுப்பாட்டு அறை 1077 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனிடையே, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து இன்று காலை விநாடிக்கு 1000 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது விநாடிக்கு 1500 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மேட்டுப்பாளையம், முடுச்சம்பேடு, சாணார்பாளையம்,
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டிதுணை மின் நிலையத்தில் நாளை (8-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பஞ்செட்டி, அத்திப்பேடு, தச்சூர், பெரவள்ளூர், போராக்ஸ், கீழ்மேனி, சின்னப்பம்பட்டி, தச்சூர் கூட்டுச்சாலை, வேலம்மாள்நகர், பொன்னேரி நகரம், ஹரிஹரன் கடைவீதி, என்.ஜி.ஓ. நகர், மூகாம்பிகை நகர், தாலுகா ஆபீஸ் ரோடு, பாலாஜி நகர், திருவார்பாடி, ஆண்டார்குப்பம், கிருஷ்ணபுரம், கேபி கே.நகர், ஆமூர், வடக்குப்பட்டு, சின்னவேன்பாக்கம், தேவதானம், கே.எஸ்.பாக்கம், அனுப்பம்பட்டு, அக்கரம்பேடு, பாலாஜி நகர், திருவாயர்பாடி, கல்மேடு, சின்னக்காவனம், பரிக்கப்பட்டு, உப்பளம், வேண்பாக்கம், தடபெரும்பாக்கம், சிங்கிலி மேடு, புலிக்குளம், உதன்டி கண்டிகை, இலவம்பேடு, மேட்டுப்பாளையம், முடுச்சம்பேடு, சாணார்பாளையம் பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பஞ்செட்டி துணை மின் நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.






