என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் கிராமம் இடையன் கிணறு நால்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை தாராபுரம் திருப்பூர் சாலையில் மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சூரியநல்லூர் மற்றும் கொழுமங்குழி, இடையன் கிணறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்களை மறியலை கைவிடவில்லை. இதைய டுத்து டி.எஸ்.பி., கலையரசன், தாசில்தார் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைத்தால் விபத்துக்கள் அதிகம் நிகழும். எனவே கடை அமைக்கக்கூடாது என்றனர். தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சாராயம் வாங்கி வந்து குடித்ததும், அவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மதுவில் கொசு மருந்து கலந்த தண்ணீரை கலந்து குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இருப்பினும் அவர்களுக்கு சாராயம் விற்றது யார்? என்று ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. அவர் மீது ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
    • மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன்(40).இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 2பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து ரவிச்சந்திரன், மகேந்திரன் மட்டுமின்றி அதே ஊரை சேர்ந்த லட்சுமணன்(49), செந்தில்குமார்(48), ராமகிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) ஆகியோரும் சாராயம் வாங்கி வந்து கடந்த 27-ந்தேதி குடித்தது தெரியவந்தது. இதில் ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோரை தவிர மற்ற 4 பேருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் சாராயம் குடித்ததால் 2பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் மது குடித்த இடத்தில் ஆய்வு செய்ததில், அங்கு சுகாதாரமற்ற தண்ணீர் இருப்பது தெரியவந்தது. அந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்ததால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த தண்ணீரை போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

    இந்தநிலையில் சாராயம் வாங்கிய உடுமலை மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்துக்கு திருப்பூா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார், கோவை மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போலீசார், உடுமலை வனச்சரகா் மணிகண்டன் தலைமையிலான வன அலுவலா்கள் சென்று கள்ளச்சாராயம் ஏதும் விற்கப்படுகிறதா என்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    வாக்குவாதம் முற்றியதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் கிராமத்தில் தங்கி விசாரணையை தொடா்ந்தனா்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் மஞ்சநாயக்கனூா் கிராமத்தில் ஒரு சிலா் அருந்திய சாராயம் மாவடப்பு கிராமத்தில் இருந்துதான் சென்றுள்ளது என தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவடப்பு கிராமத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

    • அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு, சிலந்தையாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

    இந்த அணையை ஆதாரமாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 8 ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடந்த 25-ந்தேதி நிலவரப்படி 52.96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 58.17 அடியாக உயர்ந்தது. அதன்படி 3 நாளில் அணையின் நீர் இருப்பு 5.21 அடி உயர்ந்துள்ளது.அணைக்கு வினாடிக்கு 2070 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார்.
    • முருகேஸ்வரி, அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமாஅனிதா, கிரிஜா, ஏட்டுகள் சுரேஷ், முகமதுசபி, சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெயில் நிலையம் எதிரே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார். அவரையும் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 7 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ஆந்திராவில் இருந்து 3 பேரும் மொத்தமாக வாங்கி ரெயில் மூலமாக வந்து திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

    விசாரணையில் அவர்கள் தேனியை சேர்ந்த முருகேஸ்வரி (வயது 49), கேரள மாநிலம் ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்த அமீர் (38), கோழிக்கோட்டை சேர்ந்த முகமது சபிர் பாஷா (23) என்பது தெரியவந்தது. இவர்களில் முருகேஸ்வரி, அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரி, அமீர், முகமது சபிர் பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்ததுடன், 7 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வருகிற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இந்த பணி வருகின்ற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வசனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வன பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது முதல் மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்படும்.

    அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆன்லைனில் எவ்வளவு பணம் இழந்து உள்ளார் என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரகாஷ் (32). இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் வழங்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கும் பெண்கள் சரிவர கடனை கட்டாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் நிதி நிறுவனத்தில் பணம் கட்டாததால் பிரகாஷின் சம்பள பணத்தை பிடித்தம் செய்துள்ளனர். இதனால் குடும்ப செலவிற்கு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    கடனை அடைப்பதற்காக ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்து விடலாம் என எண்ணி இருக்கும் பணத்தையும் மீண்டும் கடன் வாங்கியும் ஆன்லைனில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அதிலும் தோல்வி ஏற்பட்டு மேலும் கடனாளியாக ஆனார்.

    இந்த நிலையில் தனது நண்பர் ஒருவருக்கு கடன் அதிகமானதால் கடன் காரர்களில் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது இதனால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் விஷம் அருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் தான் இருக்கும் இடத்தையும் லொகேஷன் மூலமாக அனுப்பியும் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷின் நண்பர்கள் அவர் இருக்கும் இடத்தை தேடி சென்று பார்த்தனர். அங்கு அவர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியின் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

    பின்னர் இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே அவர் எவ்வளவு கடன் வாங்கி உள்ளார்? ஆன்லைனில் எவ்வளவு பணம் இழந்து உள்ளார் ?என்பது குறித்து தெரிய வரும் என தெரிவித்தனர்.

    • போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மொத்தம் 78 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த 78 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராபாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 50). தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு வேலைக்கு சென்று திரும்பும் போது மங்கலம் சாலையில் பாரப்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் புஷ்பலதா காயமடைந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புஷ்பலதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

    அதன் அடிப்படையில் 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது. அதில் ஒன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் , மற்றொன்று சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    உறுப்புகளை தானம் செய்த புஷ்பலதாவின் உடலுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் முதல்வர் முருகேசன் மற்றும் உயரதிகாரிகள் மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர். அரசு சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அங்கிருந்து வெளியே இழுத்து சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் மைதீன் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் நேற்று இரவு திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் கூச்சலிட்டவாறு நின்றார். அப்போது அந்த வழியாக குன்னத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பஸ்சின் முன் சக்கரத்தின் கீழ் தலை வைத்து படுத்தார். இதனால் பதற்றம் அடைந்த டிரைவர் உடனடியாக கீழே இறங்கி அந்த வாலிபரை நகர்ந்து செல்லுமாறு கூறினார்.

    பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் அங்கு சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் வாலிபரிடம் எவ்வளவு எடுத்து கூறியும் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. வீட்டில் படுப்பது போன்று 'ஹாயாக' காலுக்கு மேல் கால் போட்டபடி படுத்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அங்கிருந்து வெளியே இழுத்து சென்றனர்.

    அப்போது அவர் 'என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள். எப்படியாவது அவளுடன் என்னை சேர்த்து வையுங்கள். இப்போது இல்லை என்றால் எப்போதும் எனக்கு கிடைக்க மாட்டாள். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் உயிரை மாய்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்' என போலீசின் காலில் விழுந்து கெஞ்சினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி அதிகமுறை பயணமாகி வந்தார்.
    • 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    திருப்பூர்:

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் அதிக முறை பயணம் செய்யும் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து போக்குவரத்து கழகம் சார்பில் ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் திருப்பூரில் இருந்து இரவு புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் செல்லும் மார்த்தாண்டம் அரசு பஸ்சில், திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி (வயது 26) அதிகமுறை பயணம் செய்து வந்தார்.

    சமீபத்தில் நடந்த பரிசு போட்டி குலுக்கலில் இவர் தேர்வானார். இதையடுத்து அவருக்கு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசை, திருப்பூர் மண்டல மேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார், பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்திரன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோதிமணிகண்டன் உள்ளிட்ட கிளை மேலாளர்கள் வழங்கினர்.

    பயணி கஸ்தூரி கூறுகையில், பாதுகாப்பான பயணம். பெண் தனியாக பயணிக்கும் போது பாதுகாப்பு உள்ளது. அரசு பஸ்களை நம்பி, இரவில் பயணிக்கலாம். 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
    • மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர்:

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் 2 பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.

    அதன்படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

    திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் சார்பாக திருப்பூர் பெரிய கடை வீதி நொய்யல் வீதி அரசுப்பள்ளி வளாகத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தலைவர் நூர்தீன் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில், மாவட்ட ச்செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட பொருளாளர் சிராஜித், மாவட்ட துணை தலைவர் ஜாகீர் அப்பாஸ் , மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய் ஆகியோர் உரை யாற்றினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் தொழுகை நடைபெற்றது. இதே போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை உள்பட பல்வேறு இடங்க ளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    காலை 7 மணியில் இருந்து சிறப்பு தொழுகை தொடங்கியது. தொழுகை முடிந்த பிறகு பிரார்த்தனை செய்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்கப்பட்டது. ஆடுகள் தனி நபராகவும், மாடுகள் கூட்டு குர்பானியாகவும் கொடுக்கப்பட்டது.

    குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்து கொண்டனர். மற்ற 2 பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.

    சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றோம்.

    பின்னர் ஆட்டு கிடாய்களை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை-எளிய மக்களுக்கும், ஒரு பங்கை உற்றார், உறவினர்களுக்கும், ஒரு பங்கு எங்களுக்கும் என்று பிரித்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடினோம்.

    உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் வேண்டிக்கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×