என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அரசு ஊழியர் பெறும் குடும்ப நல நிதி 5லட்சம் ரூபாயை, மின்வாரிய பணியாளருக்கும் வழங்க வேண்டும்.
    • மின் விபத்தில் பலியாகும் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) திருப்பூர் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் பி.என். ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மின்சார துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்துக்கு எதிராக வெளியிட்ட உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை களைந்து, புதிய ஒப்பந்தம் உருவாக்க வேண்டும். பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.

    அரசு ஊழியர் பெறும் குடும்ப நல நிதி 5லட்சம் ரூபாயை, மின்வாரிய பணியாளருக்கும் வழங்க வேண்டும். மின் விபத்தில் பலியாகும் ஊழியர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2019 டிசம்பர் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, 6 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும். கேங் மேன்களுக்கு, இடமாற்றம் மற்றும் கள உதவியாளர் பணிமாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    • அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து வழியை கம்பிவேலி போட்டு அடைக்க முற்படுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டு வஞ்சி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அடுக்குமாடி குடியிருப்பு வழியாக 40 அடி வழித்தடம் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அதை குடிசைமாற்று வாரியம் அடைத்து கம்பிவேலி போடுவதால் பல கிலோ மீட்டர் சுற்றி வஞ்சிநகர் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே பொதுமக்கள் செல்ல ஒதுக்கப்பட்ட சாலையை ஆக்கிரமிக்கும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போக்குவரத்து வழியை கம்பிவேலி போட்டு அடைக்க முற்படுகின்றனர்.

    இதனை கண்டித்து வஞ்சிநகர் பகுதி பொது மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடைவீதிகளில் திடீரென அதிரடி சோதனையில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே திருப்பூர் அரிசி கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் இன்று காலை முதல் மாநகர நல அதிகாரி கௌரி சரவணன் மற்றும் உதவி ஆணையர் வினோத், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சின்னத்துரை, தங்கமுத்து, ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரிசி கடை வீதியில் உள்ள கடைவீதிகளில் திடீரென அதிரடி சோதனையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனும், அவரது நண்பரும், புகைப்படம்எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்கு செல்வார்கள். அப்போது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் திரும்பி போ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.

    இதனை பார்க்கும் கதாநாயகனின் நண்பர், அங்குள்ள ஊர் பெரியவரிடம், பெரியவரே ஏன் வீட்டின் கதவுகளில் திரும்பி போ என்று எழுதி வைத்துள்ளீர்கள் என கேட்பார்.

    அதற்கு, எங்கள் ஊரில் இரவு நேரங்களில் ரத்தக்காட்டேரி ஒன்று சுற்றி வருவதாகவும், அது வீட்டின் கதவை வந்து தட்டுவதாகவும், அப்படி அது தட்டாமல் இருப்பதற்காக இதனை எழுதி இருப்பதாகவும், அதனை பார்க்கும் அவை திரும்பி போய்விடும் எனவும் ஊர் பெரியவர் தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த காட்சியை நாம் அனைவரும் பார்த்து ரசித்து வாய் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் இதுபோன்று ஒரு சம்பவம் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தங்கள் கிராமத்தில் இரவு நேரங்களில் குட்டிச்சாத்தான்கள் சுற்றி திரிவதாக தெரிவிக்கின்றனர் அங்கு வசித்து வரக்கூடிய மக்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாளையம் காலனி தான் குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாகவும், கற்கள் வீசப்படுவதாகவும் கூறப்படும் மர்ம கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கூலித்தொழில், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தானாகவே வீடுகளின் மீது மழை பெய்வது போன்று கற்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றனவாம்.

    இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். அத்துடன் இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான் என்றும் அடித்து கூறுகிறார்கள்.

    தங்கள் கிராமத்தில் குட்டிசாத்தான்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரியும் அவை தான், வீடுகளின் மீது கற்களை எறிவதாகவும் நம்பும் மக்கள், அதற்கான ஆதாரமாக கற்களையும் சேமித்து வைத்துள்ளனர்.

    வீட்டின் கூரை மீது, மக்கள் இளைப்பாற அமரக்கூடிய மரத்தின் மீது இருந்தும், தெருவில் நடந்து செல்லும் போதும் தானாகவே கற்கள் வந்து விழுகின்றனவாம்.


    இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    வீடுகளில் இருந்தால் தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். பகல் நேரங்களிலேயே வெளியில் தனியாக செல்வதற்கு குழந்தைகள் அச்சப்படுகிறார்கள்.

    இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும், பகலில் தங்கள் வீடுகளிலும், இரவு நேரத்தில் தங்கள் ஊரில் உள்ள கருப்பராயன் கோவிலிலும் தங்குகின்றனர். மாலை 6 மணியானதும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கருப்பராயன் கோவிலுக்கு வந்து விடுகின்றனர்.

    அங்கு வைத்து அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு, அங்கேயே தங்கள் நேரத்தை கழிக்கின்றனர். அப்போதும், இன்று என்ன நடக்க இருக்கிறதோ, குட்டி சாத்தான் நம் வீட்டை என்ன பாடு படுத்துகிறதோ என ஒவ்வொரு நாளும் அச்சத்தில் அதனை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

    கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த பயத்தில் உள்ளனர். அவர்களும் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தூங்க வைப்பதற்காக பெற்றோர்கள் இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து வருகின்றனர். இப்படி இரவு முழுவதும் கண்விழித்து விட்டு, மறுநாள் காலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் அந்த கிராம மக்கள்.

    உண்மையிலேயே இது குட்டிச்சாத்தான் தானா? அல்லது குட்டிச்சாத்தான் வேடத்தில் சுற்றும் குள்ளநரிகளா? என்பதிலும் கிராமத்தினரிடையே ஒருவித குழப்பமாகவே இருக்கிறது. கற்கள் வீசப்படுவதற்கு யார் காரணம் என்பதை அறிய அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இரவு நேரங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களிடம் பிடிபட்டது என்னவோ கற்கள் தானே தவிர. வேறு எதுவும் இல்லை. இதன் பின்னரே குட்டிச்சாத்தான் தான் நடமாடுவதாக மக்கள் நம்ப தொடங்கி, குடும்பத்துடன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்கள் நாள் பொழுது முழுவதையும் கோவிலிலேயே கழித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் வீடுகளின் மீது கற்கள் விழுந்து வருகின்றன. இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான். இரவு நேரங்களில் அவை கற்களை தூக்கி வீடுகளின் மீது போட்டு வருகின்றன.கடந்த 4 வருடங்களுக்கு முன்பும் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வீட்டின் மீது தினமும் கற்கள் விழவே, அவர்கள், தங்கள் நிலம், தோட்டம் உள்ளிட்டவற்றை விட்டு விட்டு இங்கிருந்து காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடியேறிவிட்டனர்.

    தற்போது மீண்டும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள் மீது கற்கள் மழை போல பொழிந்து வருகிறது. இதனால் நாங்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், நான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அப்போது திடீரென மேலே இருந்து ஒரு கல் என் காலில் விழுந்தது. சுற்றி பார்த்தால் யாரும் இல்லை. இதனால் எங்களுக்கு பயம் ஏற்பட்டு, அங்கிருந்து ஓடினோம்.

    நாங்கள் சென்ற பின்பும், கற்கள் விழுந்து கொண்டே இருந்தன. அதில் சில கற்கள் வீட்டின் கூரைகள் மீது விழுந்து சிக்கி கொண்டன. அப்படி இருக்கும் போது இதனை நம்பாமல் இருக்க முடியுமா என ஒருவித பயத்துடனேயே தெரிவித்தார்.

    ஆனால் கிராமத்தில் உள்ள ஒரு சிலர் இது குட்டிச்சாத்தான் இல்லை. குட்டிச்சாத்தான் வேடத்தில் மர்மநபர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் இது தொடர்பாக அந்த கிராமத்திற்கு சென்று தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாக ஒரு கிராமமே அச்சத்தில் உறைந்து போய், வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரங்களில் கோவிலில் தஞ்சம் அடைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

    தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2 டப்பாக்களில் புதிய வகை ஈக்களை பிடித்துக்கொண்டு மனு கொடுக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையை அகற்றும்படி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது கோழிப்பண்ணையில் இருந்து புதிய வகை ஈக்கள் உற்பத்தியாகி காற்றின் மூலம் பரவி வருகிறது.

    மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து உணவுகளில் விழுவதால் உணவை உண்ண முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் தூங்கும்போது காதில் ஈக்கள் புகுந்து விடுகிறது. கடிப்பதால் அரிப்பு ஏற்படுகிறது. காய்கள் மற்றும் கீரைகளை சேதம் செய்கிறது.

    கால்நடைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கோழிப்பண்ணையால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கோழி இறகுகள் காற்றில் அதிகமாக வருகிறது.

    சின்னக்காம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் மனுக்களை கண்டு கொள்வதில்லை. எனவே இந்த கோழிப்பண்ணையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஈக்களை பரவலை கட்டுப்படுத்த வேண்டும் .

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர்.
    • மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணி (வயது 83). இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு இறுதி சடங்குகளுக்காக மூதாட்டியின் உடலை மின் மயானத்திற்கு எடுத்து செல்வதற்காக தயாராகினர். இதையடுத்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மின் மயானத்தில் இருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து எரியூட்டும் மையம் வரை எடுத்துச்சென்று மின் மயானத்தில் உடலை வைத்து எரியூட்டினர். வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வார்கள். ஆனால் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை கொண்டு சென்றதுடன், இறுதி சடங்குகள் செய்து, மின்மயானத்தில் எரியூட்டும் வரை காத்திருந்து ஆண்கள் செய்யும் நடைமுறை வழக்கத்தை மாற்றி உள்ளனர்.

    இது குறித்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டோம். ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    • பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    டாலர் சிட்டியான திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக மத்திய-மாநில அரசுகளுக்கு அன்னியசெலவாணி அதிகம் கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கு சரக்குகளை கப்பல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக விமானம் மூலம் சரக்கு அனுப்பி வைக்கிறார்கள். குறித்த காலத்தில் ஆர்டர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதே இந்த தொழிலில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி, கொச்சி, சென்னை துறைமுகம் வழியாக இவை கொண்டு செல்லப்படுகிறது.

    சீனாவில் உள்ள ஷாங்காய், நிங்போ மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் அதிக நெருக்கடி காரணமாக இந்தியாவில் இருந்து சரக்குகளை கப்பலில் அனுப்புவதற்கு கூடுதல் தாமதம் ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி சரக்கு ஏற்றி வரும் கப்பல்கள் வந்தால் மட்டுமே ஏற்றுமதிக்கு தொடர்ச்சியாக கண்டெய்னர் கிடைக்கும்.

    சர்வதேச துறைமுகங்களில் நெருக்கடி, செங்கடல் கடல் கொள்ளை, கப்பல் போக்குவரத்தில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சரக்கு கப்பல் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கண்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து நியூயார்க் செல்லும் கப்பலில் 20 அடி உயர கண்டெய்னர் கட்டணம் கடந்த மே மாதம் ரூ.2 லட்சத்து 73 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு ஜூன் மாதம் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம், ஜூலை மாதம் 1-ந் தேதி ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் என உயர்ந்து இந்த மாதம் ரூ.5 லட்சத்து 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதுபோல் 40 அடி உயர ஹைகியூப் கண்டெய்னர் கட்டணம் கடந்த மே மாதம் ரூ.3 லட்சத்து 55 ஆயிரமாக இருந்தது. ஜூன் மாதம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரமாகவும், ஜூலை மாதம் 1-ந் தேதி ரூ.6 லட்சத்து 14 ஆயிரமாக இருந்தது. இந்த மாதம் ரூ.7 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இந்த கட்டண உயர்வால் திருப்பூரில் இருந்து பின்னலாடைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது திருப்பூரில் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் உள்ளன. ஆர்டர்களை முடித்து உரிய காலத்துக்குள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கண்டெய்னர் கட்டணம் ஒருபுறம், தாமதம் மறுபுறம் என ஏற்றுமதியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, சர்வதேச துறைமுகங்களில் ஒரேநாளில் சரக்கை இறக்கி செல்லும் கம்பல்கள், 2 வாரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்பு துறைமுகத்துக்கு வாரம் ஒரு முறை வரும் பெரிய சரக்கு கப்பல் இப்போது மாதத்துக்கு 2 முறை மட்டுமே வந்து செல்கிறது.

    மும்பை துறைமுகத்தில் சரக்கு முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் கப்பல் மற்றும் விமான சரக்கு கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

    • மக்களை அச்சுறுத்தி திசை திருப்பி திருட்டு நடைபெறவும் வாய்ப்புள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    • வெளியில் வந்து பார்த்தால் கற்கள் விழவில்லை. வீட்டிற்குள் சென்றதும் கற்கள் விழுகிறது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒட்டப்பாளையம் பகுதி மதுரை வீரன் கோவில் அருகே உள்ள காலனியில் இரவு 7 மணி முதல் இரவு 2 மணி வரை தொடர்ச்சியாக வீடுகளின் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்து வருகிறது. இதனால் வீடுகளின் ஓடுகள் உடைந்து சேதமடைவதுடன், குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர் வரை இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத நிலையும் உள்ளது. மக்களை அச்சுறுத்தி திசை திருப்பி திருட்டு நடைபெறவும் வாய்ப்புள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இரவு 7மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வீடுகளின் மேல் கற்கள் விழுகிறது. வெளியில் வந்து பார்த்தால் கற்கள் விழவில்லை. வீட்டிற்குள் சென்றதும் கற்கள் விழுகிறது. மர்மநபர்கள் யாராவது இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனரா என ஊர் முழுவதும் பல்வேறு இடங்களில் எங்கள் பகுதி இளைஞர்கள் பார்வையிட்டனர். ஆனால் மர்மநபர்கள் யாரும் சிக்கவில்லை.

    போலீசார், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் வந்து நிற்கும் போதே வீடுகளின் மேல் கற்கள் வந்து விழுந்தது. இது யாருடைய செயல் என்று தெரியவில்லை. எப்படி கற்கள் வந்து விழுகிறது என்று கண்டு பிடிக்க முடியாமல் உள்ளோம். இது குறித்து போலீசார், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • புதர் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் அருகிலுள்ள கருமஞ்சிரை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் உள்ள புதர் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குன்னத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

    இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருப்பூர் சிவன் தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 50) என்பதும் அவர் அப்பகுதியில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    அவர் எதற்காக குன்னத்தூர் வந்தார். அவரை கல்லால் தாக்கி கொலை செய்தவர்கள் யார்? டாஸ்மாக் கடை அருகில் கொலை நடைபெற்று இருப்பதால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது.
    • சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனு ப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் கலைவாணி தியேட்டர் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். 3 மாடி கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பின்னலாடை நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை பின்னலாடை நிறு வனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.

    இதனைப பார்த்து அதிர்ச்சி அடைந்த பனியன் நிறுவன ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    பின்னர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 2 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இருந்த போதிலும் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பி லான 3ஆயிரம் கிலோ பனியன் துணிகள், 100-க்கும் மேற்பட்ட தையல் எந்திர ங்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் எரிந்து நாசமானது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    • திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம், இந்தி மொழியில் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும், புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர்.கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள் மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் பூபேஷ் , திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரானந்தபுரம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் இளங்காமணி (வயது 47). பழைய இரும்பு கடைவைத்துள்ளார். தனது மனைவி மற்றும் 14 வயது, 9 வயது என இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இளங்காமணி, தனது மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் வைத்து பூட்டியதுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேச வேண்டும். இல்லையென்றால் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு பற்ற வைத்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்காமணியிடம் லாவகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அசம்பாவிதம் நிகழாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இளங்காமணியை கதவை திறக்க செய்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இளங்காமணியை வீட்டிலிருந்து வெளியே மீட்டு வரும்போது, சீமானை பார்க்க வேண்டும் என்று கூறி, காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் கிழித்துள்ளார்.

    இதில் லேசான காயமடைந்த அவரை போலீசார் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளங்காமணி கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மனைவி மற்றும் மகன்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து இவ்வாறு செய்துள்ளார். ஒரு வழியாக அவர்கள் செல்போன் மூலமாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன் காரணமாக போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்த்தனர்.

    ×