என் மலர்
திருப்பூர்
- மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
- அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் சாலையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என 2 முறை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஒரு சில கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திருப்பூர்:
தமிழகத்தில் தி.மு.க., அரசு 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவசாமி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, என்.எஸ்.என்.நடராஜன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், துணைச்செயலாளர் புதுப்பட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோக நாதன், வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிசாமி,எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாணவரணி செயலாளர் சதீஷ், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், முன்னாள் கவுன்சிலர் ஆண்டிபாளையம் ஆனந்த், பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், குமார், கண்ணன், கருணாகரன், ஹரிஹரசுதன், பி.கே.முத்து, நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் தனபால், ஆண்டவர் பழனிச்சாமி, கவுன்சிலர் தங்கராஜ், மற்றும் சூர்யா செந்தில், நல்லூர் சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை.
- ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2¾ கோடி நிதி உள்ளது. அந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டுகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நிர்வாக அனுமதிக்காக நிதியை விடுவிக்க கோரி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு (கிராம ஊராட்சி) பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு உரிய அனுமதியளிக்கப்படவில்லை.
இதையடுத்து கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் நேற்று மதியம் முதல் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2.75 கோடி வளர்ச்சி நிதிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை. எனவே அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றிய அலுவலக மேலாளர், கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என தெரிவித்தார். இதை பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் ஏற்கவில்லை.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
நேற்றிரவும் அவர் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கும் வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்வி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது.
இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.
மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
- பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
- விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை நகரான திருப்பூரில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் , உலக கால்பந்து போட்டி உள்பட சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அப்போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்கள் அணிவதற்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்தியா நிறுவனம் 10 லட்சம் டீ-சர்ட் பனியன்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கூறியதாவது:-
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக எங்களது நிறுவனம் மூலம் பெற்ற ஆர்டர்களில் இதுவரை 70 சதவீத ஆர்டர்களை முடித்து அனுப்பி வைத்துவிட்டோம். மீதமுள்ள 30 சதவீத ஆர்டர்களை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலக கோப்பைக்கான போட்டிக்கும் பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தோம். ஐ.ஓ.சி.யின் அதிகாரபூர்வ உரிம திட்டத்தின் மூலம் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு தயாரித்து அனுப்புகிறோம். ஜவுளி உற்பத்தியில் பல நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நம்பகத்தன்மையின் மூலம் நாங்கள் சுமூகமாக இயங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கபாளையம் பிரிவில் ஜி.என். கார்டன் பகுதி உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தெருவிளக்கு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நிறைவேற்றி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென ஒன்று திரண்டு நாச்சிப்பாளையம் திருப்பூர்- காங்கயம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி பாளையம் போலீசார் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி நிர்வாகத்துடன் பேசி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது.
- கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை.
திருப்பூா்:
கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தடையை மீறி நடத்தியதால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அப்போது சிறுவர்கள் பலர் சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில்களின் வருமானம், கோவில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.
இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது. கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. எனவே, கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.
- நாட்டின் வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
- சென்னையில் தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவினாசி:
பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட மத்திய தகவல், ஒளிபரப்புதுறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் எல்.முருகன் தொகுதிக்குட்பட்ட அவினாசி பகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு சரித்திர நிகழ்வாகும். நாட்டின் வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால்தான் தொடர்ந்து 3-வது முறையாக மக்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவிநாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது .ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அதை கிடப்பில் போட்டுவிட்டது. பவானியில் தண்ணீர் இல்லை என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால் இன்று பவானியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பவானி ஆற்று தண்ணீரை அவிநாசி- அத்திக்கடவுக்கு கொண்டு வர வேண்டும்.
நீண்ட நாள் கோரிக்கையான மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய தேயிலை உள்ளிட்ட மற்ற பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
நாம் இந்த பகுதியில் வெற்றி வாய்ப்பை தவற விட்டு இருக்கலாம். ஆனால் மக்கள் மனதில் என்றும் இடம் பிடித்துள்ளோம். அதனால்தான் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரிய செய்தியாகும். தமிழகத்தில் இன்று சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. சென்னையில் தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று தமிழகத்தில் ஏராளமான கொலைகள் சமீபகாலமாக நடந்து வருகிறது. ஆகையால் தி.மு.க.வை நாம் தூக்கி எறிய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டும்தான் இங்கு நிரந்தரமான தீர்வை கொடுக்க முடியும். அவிநாசி பகுதியில் ஏராளமான சிறு, குறு நெசவாளர்கள் இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தி.மு.க.வினர் தொடர்ந்து மின்சார கட்டண உயர்வை செய்து வருகின்றனர். இதன் மூலம் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மக்களை தி.மு.க. ஆட்சியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
- மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி கவுண்டம்பாளையத்தில் உள்ள தேவேந்திர சுவாமி திடலில் இருந்து பெண்கள் கோபித்துக் கொண்டு மழை இல்லாததால் நாங்கள் ஊரை விட்டு செல்கிறோம் என வெங்கமேடு பகுதிக்கு சென்றனர்.
அவர்களை அந்த ஊரை சேர்ந்த கன்னிப்பெண்கள் கலசம், நவதானியங்களை எடுத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு படையிலிட்டு இனிமேல் பஞ்சம் வராது, ஊருக்கு திரும்பி வாருங்கள் என அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் ஒவ்வொரு வீடாக மழைச்சோறு பிச்சை எடுக்கும் நிகழ்வும், மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் அந்த மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்த ஊரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஊருக்கு வெளியே உருவ பொம்மை கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.
- வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள் (வயது 56) என்பவர் குடியிருப்பு அருகில் செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென பறந்து வந்த மர்ம பொருள் ஒன்று காலின் மீது விழுந்து காயம் ஏற்படுத்தியது. வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பறந்து வந்து விழுந்த பொருள் எதுவென தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
குடியிருப்பு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சுந்தராம்பாள் மீது பறந்து வந்து விழுந்த கருப்பு நிற பொருள் எதுவென்று தெரியவந்தது.
அப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் நிறுவனத்தின் கியாஸ் திட்டத்தில் எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு ள்ளது. வாவிபாளையம் பகுதியில் அதற்கான செக்கிங் பாயிண்ட் அமைந்துள்ளது. செக்கிங் பாயிண்டில் அதிக அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் குழாய் பதிப்பில் இருந்த உபகரணம் பறந்து வந்து மூதாட்டியின் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து எரிவாயு குழாய் பராமரிப்பு பணியில் உள்ள ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பாள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கியாஸ் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி., காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியிருப்புக்கு அருகாமையில் இது போன்ற தரை வழியாக எரிவாயு கொண்டு செல்லும்போது அதற்காக பதிக்கப்படும் குழாய்களைச் சுற்றி பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாததே விபத்திற்கு காரணம் . எனவே செக்கிங் பாயிண்ட் பகுதியை சுற்றி கம்பி வேலி அல்லது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
- பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு,சிறு ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 84.20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
- நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம் கடந்து திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 180 கிலோ மீட்டர் வந்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

இதனால் திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்கிறது.
ஆனாலும் தரைப்பாலத்தையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஈஸ்வரன் கோவில் வீதியில் பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்ல ம்மன் கோவில் உள்ளது. நல்லம்மண் தடுப்பணை கட்டும்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக தன் உயிரை தியாகம் செய்ததால் நல்லம்மன் என்ற சிறுமிக்கு அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் பலருக்கும் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் திருப்பூரில் பெய்து வரும் சாரல் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






