என் மலர்
திருப்பூர்
- வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை மங்கலம் அருகே உள்ள குடோனுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மங்கலத்தை சேர்ந்த பக்ருதீன் (வயது 47) , அப்துல் ரஹீம்(43). பொல்லி காளிபாளையத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், 1100 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன.
- சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர்.
திருப்பூர்:
வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 'ஹர்கர் திரங்கா எனப்படும் இல்லம்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ் மூவர்ண கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி https://harghartiranga.com என்ற இணையதளத்தில் தங்கள் சுய புகைப்படங்களைப் (செல்பி) பதிவேற்Independence Day, National Flag, சுதந்திர தினவிழா, தேசிய கொடிகள்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை எழுச்சியாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் தயாராகி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பட்டொளி வீசி பறக்க தேவையான தேசியக்கொடி தயாரிக்கும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன. தற்போது சுதந்திர தினத்திற்காக திருப்பூர், கோவையில் தேசியக்கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் மோகன் கூறியதாவது:-
சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாட உள்ளது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரியவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி அளித்ததால் ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேசியக்கொடிகளை விற்பனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம். 9-ந்தேதி முதல் தேசியக்கொடிகளை ஏற்றலாம் என்பதால் ஆர்டர் பெற்ற தேசியக்கொடிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
பல பின்னலாடை நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தேசியக்கொடியை தைத்து வருகின்றன. 10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.25 முதல் ரூ.250 வரை தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.
- குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே.
திருப்பூர்:
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு குடும்பம் ஒரு கதம்பம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் இந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை அடைந்ததற்கான பெருமை என்னுடைய ஆசிரியர்களையே சாரும். நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை. அதேநேரம் வாத்தியார்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே வாத்தியார்கள் என்றாலே எனக்கு தனி மரியாதை உண்டு.
பொதுவாக மனிதன் வலியை தாங்கக்கூடியது 10 பாயிண்ட் என்றால் ஆண்கள் 7 பாயிண்டிலேயே உயிரிழக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது என்றும், ஆனால் பிரசவ வலியில் பெண்கள் 7.6 பாயிண்ட் வரை வலியை தாங்குகிறார்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது.
எனவே தாய்மை என்பது பெண்களுக்கு மரியாதைக்குரிய சமாச்சாரம் ஆகும். குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே. அந்த அளவிற்கு நாம் அந்நியோன்யமாக இருக்கும்போது, அதை பார்க்கும் குழந்தைகளும் நல்ல முறையில் வளருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
- 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
அமணலிங்கேஸ்வரர் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.
அத்துடன் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.
அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி கொள்கின்றனர். பின்னர் காலையில் எழுந்து அருவிக்கு சென்று குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.
அந்த வகையில் இன்று திருமூர்த்தி மலையில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு வழிபாடு மற்றும் நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். களைப்படைந்த மாடுகளுக்கு பெருமாள் கோவில் அருகில் வண்டிகளுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் மாட்டு வண்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது.
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அதிக அளவில் திருமூர்த்திமலைக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் திருமூர்த்திமலை பகுதியில் 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் உடுமலை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
- விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.
- வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்.
தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள் போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். இதில் இந்தியாவை கட்டியாண்ட ஆங்கிலேயரை அதிர செய்த விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.
'தீர்த்தகிரி கவுண்டர்' என்றும், 'தீர்த்தகிரி சர்க்கரை' என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை , வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.
பல்வேறு போர்க் கலைகளை கற்று தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளை தனது படைகளுக்கு கற்று தந்து, இந்திய விடுதலைப்போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார்.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் 3 முறை வெற்றியும் கண்டார்.
கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 -ந்தேதி, 1756-ம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றை கற்று தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார்.
பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளை தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.
தீரன் சின்னமலை பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.
ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீரன் சின்னமலை, அவ்வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார்.
இதை தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.
தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார்.
அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7-ந் தேதி, 1782ம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.
ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையை திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், தீரன் சின்னமலையுடன் கூட்டணி அமைத்தார்.
அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த 3 மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து வெற்றிவாகை சூடியது.
3 மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளை கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம் நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார்.
என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரதிருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் , நான்காம் மைசூர் போரில் மே மாதம் 4 ந் தேதி, 1799 ம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
திப்பு சுல்தான் வீரமரணத்திற்குப் பின்னர், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலை தங்கியிருந்தார். திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை பட்டாலிக்காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார்.
பின்னர், கி.பி 1799ல் தனது படைகளை பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்.
லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ந் தேதி, 1800 ம் ஆண்டில், கோவை க்கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
1801ல் பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த சின்னமலை வெற்றிக் கண்டார். அந்த வெற்றியை தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கு மிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறி குண்டுகள் வீசி வெற்றிக்கண்டார்.
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனிய செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர்.
கைது செய்து அவர்களை சங்ககிரிக் கோட்டைக்கு கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள் ஆடி 18-ம் பெருக்கு நாளான 1805ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன் தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.
அவரது நினைவை போற்றும் வகையில் தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 'தீரன் சின்னமலை மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 31 -ந்தேதி 2005 ம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 'தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.
விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று நினைவு நாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தீரன் சின்னமலையின் 219-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- வினாடிக்கு 3ஆயிரத்து 673 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.
- கடல் போல் காட்சி அளிக்கும் அமராவதி அணை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் அணையின் நீர் இருப்பு கிடு கிடுவென உயர்ந்து, அதன் முழு கொள்ளளவை எட்டியதுள்ளது.
அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 18-ந்தேதி அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்பு பலத்த மழையின் காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் உபரி நீரும் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை முன்னிட்டு அணையின் நீர் பிடிப்பு பகுதியான கேரளாவில் பலத்த மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் நிலவுகிறது.
இதனால் அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரிநீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அமராவதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் பதற்றமும் ஏற்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.78 அடி உயரத்திற்கு எட்டியது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3ஆயிரத்து 673 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மேலும் உடுமலை பகுதியில் அவ்வப்போது சாரல்மழையும் பெய்து வருவதால் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடல் போல் காட்சி அளிக்கும் அமராவதி அணை.
- 66 மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
- தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி வெளிநாடு செல்கிறார். அதற்கு முன்னதாக நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ஆகஸ்ட் 11-ந் தேதி திருப்பூரில் பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் பங்கேற்கும்படி 66 மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சி சார்பிலான சுதந்திர தினக் கொண்டாட்டம், கட்சி வளர்ச்சி, மத்திய பட்ஜெட் பற்றி மக்கள் மத்தியில் உண்மை நிலையை விளக்குவது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
- 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
- மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார்.
இதனால் வேனில் இருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பினர். நெஞ்சு வலியால் துடித்த போதும் தனது உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய சேமலையப்பனின் செயல் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், காங்கயம் சத்யாநகரில் உள்ள சேமலையப்பன் வீட்டிற்கு சென்றார்.அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ. 5 லட்சம் நிதிக்கான காசோலையை சேமலையப்பன் பெற்றோரிடம் வழங்கினார் .
அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் உயிரிழந்த சேமலையப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடை பெற்றது. இதில் ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சேமலையப்பன் குடும்ப த்தினர் கூறுகையில், 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி எங்களது குடும்பத்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளார் என்றனர்.
இறந்துபோன சேமலையப்பனுக்கு லலிதா என்ற மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். லலிதா சேமலையப்பன் வேலை பார்த்த தனியார் பள்ளியிலேயே வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
- மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார். இதனால் வேனில் இருந்த குழந்தைகள் பத்திரமாக இருந்தனர்.
இறந்து போன மலையப்பனுக்கு மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
இச்சம்பவம் பற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இறக்கும் தருவாயிலும், இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
- அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
- காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில் ஆவின் பால் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் பேபி (வயது 45). இவரது மகள் ரஞ்சனி பிரியா (25). கல்லூரி படிப்பு முடித்து விட்டு அரசு வேலை தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் பேபி , மகள் ரஞ்சனி பிரியா மற்றும் உறவினர் சிவக்குமார், பால்பண்ணையில் டிரைவராக பணிபுரியும் பெரியசாமி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்றிரவு திருச்செந்தூரில் இருந்து காங்கயத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பெரியசாமி ஓட்டினார்.
இன்று காலை காங்கயம் கருக்கம்பாளையம் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது.
காரில் இருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ரஞ்சனி பிரியா மற்றும் டிரைவர் பெரியசாமி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பேபி, சிவக்குமார் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர்.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே காந்திநகரில் உள்ள ஒரு ஏ. டி.எம். மையத்தில் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 28) என்பவர் பணம் எடுக்க சென்றிருந்தார். எதிர்பாராதமாக பணம் வராததால் ஏ.டி.எம். கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு பணத்தை எடுக்காமல் சென்று விட்டார். அதன் பின்னர் அங்கு பணம் எடுக்கச் சென்ற 12-ம் வகுப்பு மாணவர்களான முகிலன், கவுஷிக் இருவரும் பணம் எடுத்த போது கூடுதலாக ரூ.10 ஆயிரம் வந்திருந்தது. இதனால் அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை அலங்கியம் போலீஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து ஹரிபிரசாரத்தை வரவழைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர். மேலும் கூடுதல் பணத்தை ஒப்படைத்த அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.






