என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர்.
    • வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர்.

    உடுமலை:

    மலைவாழ் மக்கள்தான் மரங்களில் வீடு போல் அமைத்து வசிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த 22ம் நூற்றாண்டிலும், இயற்கையோடு இயற்கையாக மரங்களில் மரங்களால் விவசாயிகள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கொழுமத்திற்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அப்போது இந்த பகுதியில் மரத்தில் அமைக்கப்பட்ட வீடானது கொழுமம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டிக்கும் கொழுமத்திற்கும் இடையிலும், கொழுமத்திற்கும் இரட்டையம்பாடிக்கும் இடையிலுமாக உள்ள ராயர் குளம் பகுதியில் உள்ளது.

    இங்கிருக்கும் விவசாயிகள் பூர்வகுடிகளாக இருந்து வருவதால் காட்டு விலங்குகளைக் கண்டு அச்சம் கொள்வதில்லை. மேலும், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த விலங்குகள் வரும் என்பதனையும் தெளிவாக அறிந்துணர்ந்து வைத்துள்ளனர்.

    மலையில் இருந்து தண்ணீர் குடிக்க வரும் யானைகள் தென்னை மரங்களை மட்டுமே சாய்ப்பதையும் மற்ற மரங்களை எதுவும் செய்யாமல் செல்வதையும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். மேலும், இங்கு வேப்பமரத்தில் தாங்கள் கட்டியிருக்கும் மரக்குச்சிகளால் ஆன வீடு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மழைக்காலங்களிலும், வெயில்காலங்களிலும் தாங்கள் வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

    மரத்தின் மேல் உள்ள கிளைகளை ஒதுக்கி மரக்கிளைகளைக் கொண்டே இடைவெளியை ஏற்படுத்தி, மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுக்கிக் கட்டி விடுகின்றனர். இந்த மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர். குச்சிகளின் உயரமும், தடிமனும் ஒரே போன்று இருக்கிறது.

    வீடுகளின் மேல் பனை ஓலைகளை மேய்ந்து அதன் மேல் பிளாஸ்டிக் காகிதங்களை போட்டுக்கொள்கின்றனர். எந்த மழை வந்தாலும் இவர்களுக்கு எதுவும் ஆவதில்லை. மரம் ஒடிந்து விழாத வரை அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்கின்றனர். மேலும் இதனை நிரந்தரமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மேலே ஏறி இறங்கி வருகின்றனர். இவர்கள் நிலத்தில் கல்,மண் கொண்டு கட்டுவதைக் காட்டிலும் இது மிகவும் எளிமையாகவும், சிக்கனமாகவும் இந்த மர வீடுகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

    ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் குறைந்தது 3 முதல் 6 பேர் வரை இதனுள் ஒரே சமயத்தில் படுத்து தூங்கலாம். அந்த அளவிற்கு உறுதியாகவும், வசதியாகவும் இந்த மரக்குச்சி வீட்டினை அமைத்துள்ளனர்.

    மேலும் இரண்டு மரக்குச்சி வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு மரக்குச்சி வீடும் ஒரே மரத்தில் இருப்பதுதான் வியப்பு. இந்த மரக்குச்சி வீடுகளை மரக்குச்சிகளின் நீள அகலங்களை பொறுத்து 10-க்கு எட்டடியாகவும், 8-க்கு ஆறடியாகவும் அமைந்திருக்கின்றனர். இந்த வீட்டினை அமைத்த பெருமாள் என்பவரிடம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் அருட்செல்வன். சிவகுமார் நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளனர்.

    • 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்குமெயின் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே சுதந்திர தினமான நேற்று மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அனில் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் நல்லதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

    போலீசார் சோதனையில் மதுபான கடையில் 500 மது பாட்டில்களும் அருகாமையில் உள்ள அறை ஒன்றில் 1000 மதுபாட்டில்களும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தினவிழா விடுமுறையை கொண்டாட அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.

    அவர்கள் ஒன்றாக ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் தங்களுடன் வந்த தாராபுரம் ராம்நகரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் ஜெரோமியா (வயது 16) என்பவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

    உடனடியாக இதுபற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவனை சுமார் 2 மணிநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மீட்பு பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஜெரோமியா தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மிதந்தது. இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதந்திர தின விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்.
    • மாநகரம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை மறுநாள் (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கிறார்.

    அதன் பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து அதன்பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கிறார்கள். அதுபோல் பார்சல் பண்டல்களையும் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் ரெயில்வே பாதுகாப்புபடை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தலைவர்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விடுதிகள், லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை மேற்கொள்கிறார்கள். அதுபோல் ரெயில் தண்டவாள பாதை ரோந்துப்பணியையும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சுதந்திர தின விழா நடைபெறும் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானம், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். போலீசாருடன் ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்று கிறார்கள். மாநகரம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர்.
    • மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருக்குமரன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவிகள் நபிஷா, சுபிக்ஷா.இருவரும் வாவிபாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர். அதற்காக 2 பேரும், தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர். அவ்வாறு பெற்ற நிதியை இன்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினர். மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

    • சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • தற்போது அணைக்கு 627 கனஅடி நீர்வரத்து உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையின் காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    உடுமலை அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணை யில் தற்போது 88.88 அடியாக நீர்மட்டம் உயர்ந்து ள்ளது. முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் ஆற்றில் கூடுதலாக உபரிநீர் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது அணைக்கு 627 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 790 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-35, கலெக்டர் முகாம் அலு வலகம்-74, திருப்பூர் தெற்கு -43, கலெக்டர் அலுவ லகம்-23, அவினாசி -33, ஊத்துக்குளி-50, பல்லடம்-20,தாராபுரம்-19,உப்பாறு அணை-11, காங்கயம்-14,வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம்-3,வட்டமலை க்கரை ஓடை அணை-3.60, உடுமலைபேட்டை-7.20, அமராவதி அணை-18, திருமூர்த்தி அணை-2, மடத்துக்குளம்-10. மாவட்டம் முழுவதும் மொத்தம் 367.80 மி.மீ., மழை பெய்துள்ளது.

    • சி.பி.ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகை.
    • அவினாசி கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

    மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகை தந்த நிலையில், அவினாசி கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் வெளியே வந்த போது அந்த வழியாக காரில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வந்தார். இதையடுத்து இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிக்கொண்டனர்.

    • சட்டமன்ற தேர்தல்-கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை.
    • தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவ ராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாவிட்டாலும் பல இடங்களில் 2-வது இடத்தை பிடித்ததுடன், வாக்கு சதவீதமும் அதிகரித்தது. இது அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என பா.ஜ.க., நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக அடுத்த மாதம் செப்டம்பர் 1-ந்தேதி லண்டன் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

    இதற்கான ஆலோசனை கூட்டம் திருப்பூர் பெருமாநல்லூரில் உள்ள கிருஷ்ணா மகாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக பா.ஜ.க., மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், எம்.எல்.ஏ.க்கள் காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் 66 மாவட்ட தலைவர்கள் , மண்டல தலைவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நவம்பர் மாதத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான பணிகளை தொடங்குதல், கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குதல் , கட்சி வளர்ச்சி, சுதந்திர தின கொண்டாட்டம், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடத்தில் எடுத்து செல்வது, சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் வெற்றி பெற வியூகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் லண்டன் செல்லும் அண்ணாமலை அங்கு 3 மாதம் வரை தங்கி படிக்க உள்ளதால் அதன்பிறகான கட்சி ப்பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள ப்பட்டது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்க ப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி அண்ணாமலை தலைமை யில் திருப்பூர் குமரன் சிலை முன்பு இருந்து தொடங்கி காந்திநகரில் உள்ள காந்தி அஸ்தி நினைவிடம் வரை தேசிய கொடிகளுடன் இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த ஊர்வலத்துக்கு திருப்பூர் வடக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து திருப்பூரில் உள்ள குமரன் சிலைக்கு பா.ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா, மாநிலச் செயலாளர் மலர்கொடி மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றனர். அங்கு வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பும் அளித்தனர்.

    • கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் வினோத் கண்ணன் (வயது 29). இவரை கடந்த 8-ந்தேதி ஒரு மர்ம கும்பல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூரில் வைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுதப்பி சென்றது.

    முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு கொலையாளிகள் ஆக்ரோஷமாக வெட்டி சிதைத்தனர். கொலையாளிகளை பிடிக்க பல்லடம் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    கொலையான வினோத் கண்ணன் மீது மானாமதுரை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மானாமதுரையைச் சேர்ந்த மைனர் மணி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் சட்டக்கல்லூரி மாணவரான அக்னி ராஜ் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    இந்தநிலையில் அக்னிராஜ் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மைனர் மணி ஆதரவாளர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அக்னி ராஜின் நண்பர்கள் பழிக்கு பழி வாங்க துடித்தனர். அதற்கான நாளையும் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

    இதற்காகவே அக்னி ராஜ் என்ற வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்திக் கொண்டு மைனர் மணியின் நண்பர்களான பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி ஆகிய 3 பேரை ஏற்கனவே கொலை செய்தனர். அக்னி ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட வினோத் கண்ணன் தப்பிவிட்டார். அவரை தீர்த்துக் கட்ட அக்னிராஜ் நண்பர்கள் நேரம் பார்த்து காத்திருந்தனர்.

    பல்லடம் கரையாம்புதூரில் உள்ள நண்பரை பார்க்க வந்தபோது, அவர் வருவதை தெரிந்து கொண்ட அக்னிராஜ் கும்பல் துரத்தி வந்து வினோத் கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, திருப்பூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கொலையாளிகள் 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி இன்ஸ்டாகிராமில் குழு உருவாக்கி தகவல்களை பரிமாறிக் கொள்வதும், தொலைபேசி மூலம் இவர்கள் எந்தவித தகவல்களையும் பரிமாறி கொள்வதில்லை என்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தநிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நிதீஷ் குமார், காளீஸ்வரன் மற்றும் வினோத்கண்ணன் குறித்து தகவல் கொடுத்த சாமிநாதன், பிரபுதேவா ஆகிய 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி லண்டன் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.

    இதையடுத்து திருப்பூரில் நாளை 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பா.ஜ.க., மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. திருப்பூர் பெருமாநல்லூரில் உள்ள கிருஷ்ணா மஹாலில் காலை 11மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.

    கூட்டத்தில் தமிழக பா.ஜ.க., மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். மாநில நிர்வாகிகள், 66 மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில் நவம்பர் மாதத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான பணிகளை தொடங்குதல், கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குதல் , கட்சி வளர்ச்சி, சுதந்திர தின கொண்டாட்டம், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடத்தில் எடுத்து செல்வது, சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் வெற்றி பெற வியூகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    மேலும் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ள நிலையில் அதன்பிறகு கட்சியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எனவே நாளை நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக நாளை காலை 8-30 மணிக்கு சுதந்திரதினத்தையொட்டி அண்ணாமலை தலைமையில் திருப்பூரில் தேசிய கொடி இரு சக்கர வாகன ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலம் திருப்பூர் குமரன் சிலை முன்பு இருந்து தொடங்கி, காந்திநகரில் உள்ள காந்தி அஸ்தி நினை விடம் வரை நடக்கிறது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.மேலும் திருப்பூர் வரும் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்ட மிட்டுள்ளனர்.

    • பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொறுத்து அதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலங்களில் சராவன் விரதம் தொடங்கி உள்ளது. அதுமட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 26-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ கொள்முதல் விலை 104 ரூபாயாக இருந்தநிலையில் இன்று 74 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ. 90 வரை செலவாகும் நிலையில் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்,ஆக.8-

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பு களின் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம்.

    இதற்காக தற்போது முதலே விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவ ட்டம் அலகுமலை அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து ள்ளது. சுமார் ஒரு அடி முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த வருடம் கோமாதா விநாயகர் , சிவன் பார்வதி யுடன் கூடிய விநாயகர், முருகனோடு அமர்ந்துள்ள விநாயகர் , ஆஞ்சநேயர் தூக்கி செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட வடிவ ங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்து அமைப்புகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான விநாயகர் சிலைகளை பதிவு செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக இங்கிருந்து விநாயகர் சிலைகளை எடுத்து செல்வர்.

    விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு பின்பு ஆறு மற்றும் குளங்களில் கரை க்கும் போது மாசு ஏற்படு த்தாத வகையில் உற்பத்தி செய்ய வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாசு ஏற்படுத்தாத வகை யிலான பொருட்களை கொண்டு சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக சிலை வடிவ மைப்பாளர்கள் தெரிவி த்துள்ளனர்.* * * திருப்பூர் அலகுமலை பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    ×