என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலுமணி. இவர் இடுவம்பாளையம் செல்லும் வழியில் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பின்னலாடை துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதற்காக பின்னலாடை உற்பத்திக்கு பயன்படக்கூடிய சிங்கர், ஓவர்லாக், பேட்லாக் தையல் எந்திரங்கள் மற்றும் பின்னலாடை துணிகள் வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் நிறுவனம் பூட்டப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்தில் தீ பற்றி எரிந்துள்ளது. நிறுவனம் முழுவதும் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பின்னலாடை நிறுவன உரிமையாளருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.


    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த 200 தையல் எந்திரங்கள், நூல் பண்டல்கள், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த டீசர்ட்டுகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
    • தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    திருப்பூர்:

    அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கி மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக்கு ஏன் வாக்களித்தோம் என்று பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தேர்தலுக்கு பின்பு நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.

    தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இது தான் தி.மு.க.வின் பரிசாக உள்ளது. திருப்பூரில் தொழில் மிகவும் நசிந்து விட்டது. இதனை சரிசெய்ய தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


    தனது திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரிலீசாக வேண்டும் என்பதற்காகவே ரஜினி, தி.மு.க.வை பாராட்டி பேசி வருகிறார். தி.மு.க.,-பா.ஜ.க., இடையே ரகசிய கூட்டணி உருவாகியுள்ளது. 2 கட்சிகளும் நெருங்கி வரத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்கா செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசின் உதவிகள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ் உள்ள காவல்துறை செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரவு ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது.
    • அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் தனலட்சுமி மில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த இந்த மில் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பூட்டி இருக்கும் இந்த மில் காம்பவுண்டில் ஏராளமான மரங்கள்,செடிகள் வளர்ந்து புதர்க்காடாக மாறி உள்ளது.

    காம்பவுண்டில் உள்ள கட்டிடங்களும் பாழடைந்து கிடக்கின்றன. திருப்பூர் மாநகரின் மத்தியில் உள்ள போதும், இந்த மில் காம்பவுண்ட் மட்டும் முழு காடாகவே இருக்கிறது. இதனால் இங்குள்ள மரங்களில் ஏராளமான வவ்வால்கள் கூடுகட்டி வசிக்கின்றன.

    பல்லாயிரக்கணக்கான ராட்சத வவ்வால்கள் பகல் முழுக்க இங்குள்ள மரங்களிலும், கட்டிடங்களிலும் தலைகீழாக அமைதியாக தொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன.

    ஆனால் இரவு தொடங்கினால் ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது. இரவாக தொடங்கும் போதே பெருங்கூச்சலுடன் கூட்டம் கூட்டமாக கிளம்பும் இந்த ராட்சத வவ்வால்கள் அருகில் உள்ள கொங்கு மெயின்ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், கே.பி.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு படையெடுத்து விடுகின்றன.

    வீடுகளில் உள்ள அறைகள், பார்க்கிங் பகுதிகள், வளாகங்கள் என அனைத்துப்பகுதிகளிலும் சாரைசாரையாக பறந்து வட்டமிடும் இந்த வவ்வால்கள் இந்த பகுதி வீடுகளை எச்சங்களால் நிரப்பி துர்நாற்றம் வீசச் செய்கின்றன.

    மேலும் பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன. மாலை மங்கினாலே பெண்கள், குழந்தைகள் வீடுகளை விட்டு வாசலுக்கு கூட வர அஞ்சும் அளவுக்கு இந்த பகுதிகளின் நிலை உள்ளது.

    எனவே வவ்வால்களில் எச்சத்தால் குடியிருப்பு பகுதிகள் துர்நாற்றம் வீசுவதுடன், வவ்வால்களால் பரவக்கூடிய நிபா உள்ளிட்ட கொடூரமான வைரஸ் நோய்கள் பரவக்கூடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வவ்வால்களை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை நீரில் சிறுவன் மூழ்கி பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 33). இவரது மனைவி சங்கீதா (28). இவர்களது மகன் சக்திவேல் (3). கிருஷ்ண குமார் அருகில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகுமார் வீட்டின் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. அந்த தண்ணீரில் சக்திவேல் விளையாட சென்றுள்ளான். மழைநீர் அதிகமாக தேங்கிக் கிடந்ததால் அதில் சக்திவேல் மூழ்கினான்.

    இதனிடையே சங்கீதா தனது மகனை காணாமல் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். தொடர்ந்து மழைநீர் தேங்கி நின்ற இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சக்திவேல் தண்ணீரில் மிதந்துள்ளான்.

    உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேங்கி கிடந்த மழை நீரில் சிறுவன் மூழ்கி பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
    • 26 கிலோ நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிக்கிளையில் மேலாளராக இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு வேலை பார்த்து வந்த ஜெயக்குமார், கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளம் பாலரிவட்டம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் இன்னும் அங்கு பொறுப்பேற்கவில்லை.

    இதற்கிடையே, கோழிக்கோட்டில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளைக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மறு மதிப்பீடு செய்தபோது, கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரியவந்தது.

    உடனே மேலாளர் இர்ஷாத், இதுகுறித்து வடகரை போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், கோழிக்கோடு கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்து இடமாற்றப்பட்ட ஜெயக்குமார், பாலரிவட்டம் கிளையில் பொறுப்பேற்காமல், இருக்குமிடமும் தெரியாமல் இருந்து வந்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் தெலுங்கானாவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெயக்குமார் திருப்பூரை சேர்ந்த அவரது நண்பரும் தனியார் வங்கி மேலாளருமான கார்த்திக் உதவியுடன், கோழிக்கோடு பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்புள்ள 26 கிலோ நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது. அந்த நகைகளை கார்த்திக் உதவியுடன், திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள தனியார் வங்கியில் 17 நபர்களின் பெயரில் வைத்து பணம் பெற்றுள்ளார். அதிகாரிகளை நம்ப வைக்க ஜெயக்குமார் கோழிக்கோடு வங்கியில் போலி நகைகளை வைத்துள்ளார். புதிய மேலாளரின் தணிக்கையில் அவர் சிக்கிக்கொண்டார்.

    இதையடுத்து கேரள போலீசார் ஜெயக்குமாரை திருப்பூர் அழைத்து வந்து தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 496 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் பல்வேறு வங்கிகளில் கையாடல் செய்த நகைகளை அடகு வைத்துள்ளார். அதனை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் தனியார் வங்கி மேலாளர் கார்த்திக்கையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையொட்டி இன்று காலை முதல் திருப்பூர் தனியார் வங்கியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கடந்த 19-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தையல் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி, இந்த ஆண்டுக்கு பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.

    ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர்.

    இதுவரை வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு கடந்த 19-ந் தேதி முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பனியன் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை வாங்குவதையும், தைத்து கொடுத்த பனியன் துணிகளை டெலிவரி கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்தி உள்ளனர். திருப்பூரில் 300-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இந்தநிலையில் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நிலை குறித்து நேற்று அறிவிப்பதாக தெரிவித்தனர். அதன்படி சங்கத்தின் செயலாளர் முருகேசன் கூறும்போது, '2 பெரிய நிறுவனங்கள் மட்டும் 7 சதவீத கூலி உயர்வை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் அந்த 2 நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்களை பெற்று செய்து கொடுக்கப்படும். அதேவேளையில் 7 சதவீதம் கூலி உயர்வு கொடுக்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பது, டெலிவரி கொடுப்பது இல்லை என்று முடிவு செய்து வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்கிறோம் என்றார். இதன் காரணமாக தையல் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

    • அவினாசி பகுதிகளில் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாலை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அவினாசி பகுதிகளில் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

    திருப்பூர் பலவஞ்சிப்பாளையத்தில் குறவர் சமூக மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்தன. மேலும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் கடும் சிரமம் அடைந்தனர். அப்பகுதி பெண்கள் கூறும்போது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். குடியிருப்புக்கு அருகே சமீபத்தில் தடுப்பு சுவர் கட்டியதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் விடிய விடிய தூங்காமல் தவித்தோம். மழைநீர் வடிந்து செல்ல அதிகாரிகள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் மழை பெய்தபோது, மின்னல் தாக்கியதில் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் இருந்த 70 வயது முதியவர் மீது சுவர் விழுந்து அமுக்கியது. வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று காயமடைந்த முதியவரை மீட்டு 108 ஆம்புலன்சு உதவியோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் ராயபுரத்தில் மரம் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வடக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினார்கள். இதுபோல் குமார் நகர் அவினாசி ரோட்டில் விழுந்த மரத்தையும் வடக்கு தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.


    உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தொடர் மழையால் கடந்த ஒரு மாதமாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. உபரி நீர் பிரதான கால்வாய், அமராவதி ஆறு சட்டர்கள் மற்றும் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.09 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1044 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    உடுமலைதிருமூர்த்தி அணை மூலமாக பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பிஏபி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு கடந்த 18-ந் தேதி முதல் 2- ம் மண்டல பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பாலாற்றின் மூலமாக அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடிக்கும் மேலாக நீர்வரத்து உள்ளது. இதனால் 60 அடி உயரம் கொண்ட அணையில் 57.02 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1122 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோவில் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் மழைநீரில் நனைந்தன. நனைந்த ரூபாய் நோட்டுகள் காய வைத்து எடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    மேலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது.
    • அமராவதி அணையும் கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்கிறது. நேற்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் இடி தாக்கியது. இதில் 5-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது. திருப்பூர் அங்கேரிபாளையம் பாலு இன்னோவேஷன் பகுதியில் மழைநீர் சாலையில் முழங்கால் அளவுக்கு சென்றது. இதனால் அப்பகுதியில் இருந்த மின்மாற்றி மற்றும் அந்த வழியாக வந்த சைக்கிள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் தண்ணீரில் பாதிஅளவிற்கு மூழ்கின.

    அவினாசி பச்சாம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பழமை வாய்ந்த புங்கன், இச்சிவேம்பு உள்ளிட்ட 5 மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்ததில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பச்சாம்பாளையம் பகுதி இருளில் மூழ்கியது.

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அங்கு வந்திருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பி வேலிகள் மீது மோதியது. இதில் பல இரும்பு தூண்கள் வளைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    அமணலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மொடக்குப்பட்டி ரவி தலைமையில் கோவில் ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை திருமூர்த்தி மலை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாலாறு, தோனி ஆறு உள்ளிட்ட வற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகள் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பாலாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    இன்று காலை 6 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 58.71அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மற்றும் பாலாற்றின் மூலமாக 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போன்று அமராவதி அணையும் கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழை பெய்வதற்கான சூழல் நிலவி வருவதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    • லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
    • லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    திருப்பூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் திருச்செங்கோட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி இன்று அதிகாலை தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    கேரளாவை சேர்ந்த அஜய் என்பவர் மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி லாரியில் வந்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் திருச்சி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் லாரியின் பின் சக்கரம் முழுவதுமாக கழன்று ஓடியதால் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் லாரி டிரைவர் பலத்த காயங்களுடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருச்சி -கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பொங்கலூர் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும்.
    • 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

    அவினாசி:

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து நீரேற்றத்துக்கான மோட்டார் இயக்கப்பட்டு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் குழாய்கள் மூலம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ள ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்ல ப்படுகிறது. இதனால் 3 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் ஏரிக்கு வந்த தண்ணீரை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்றாா்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் ஈரோடு பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை விநாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாள்களுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

    அந்த தண்ணீர் 1065 கிமீ., நீளத்துக்கு நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதன் மூலம் நீா்வளத் துறை சாா்பில் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும். 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

    குறிப்பாக திருப்பூா் மாவட்டத்தில் 32 நீா்வளத் துறை ஏரிகள், 22 ஒன்றிய ஏரிகள், 385 குட்டைகள் என மொத்தமாக 429 நீா்நிலைகளில் நீா்நிரப்பப்படுகிறது. இதன்மூலம் 8151 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இத்திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சாா்பாக வும், திருப்பூா் மாவட்ட மக்களின் சாா்பாகவும் நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன் என்றாா்.

    அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட மருத்துவ அலுவலா் முரளி சங்கா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • மகளிர் உரிமைத்தொகை குறித்து வதந்தியால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர்.

    திருப்பூர்:

    தமிழக அரசு பொறுப்பேற்ற பின்பு மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கும் திட்டம் 2023ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நவம்பர் மாதம் 2-ம் கட்டமாக விடுபட்ட பெண்களுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று , திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உரிமைத்தொகைக்காக விடுபட்ட பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், பெறப்படும் விண்ணப்பங்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.

    இதனை உண்மையென நம்பிய திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கேயம், பெருமாநல்லூர், கே.வி.ஆர். நகர், அவிநாசி, முதலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர். அது போன்ற முகாம்கள் எதுவும் இன்று நடைபெறவில்லை என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறினாலும் கூட பெண்கள் தொடர்ந்து காத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வேண்டுகோண் விடுத்துள்ளது அதில்,

    மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.

    இதனையடுத்து மகளிர் உரிமைத்தொகை வதந்திகளை நம்பம் வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறியதன் மூலம் எங்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியுள்ளது.
    • விடுபட்ட குளம், குட்டைகளையும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    அவினாசி:

    திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விவசாயிகள், பொதுமக்கள், போராட்டக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேறியதன் மூலம் எங்களின் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியுள்ளது. இதற்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி உள்ளோம். தற்போது அந்த திட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ளதன் மூலம் ஏதோ 2-வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றது போல் உள்ளது. இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    இந்த திட்டம் நிறைவேற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளித்தனர். இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    மேலும் விடுபட்ட குளம், குட்டைகளையும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டும் என்றனர்.

    ×