search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்- வாலிபரிடம் ரூ.46 லட்சம் மோசடி: வாட்ஸ்அப் குழு மோசடி
    X

    திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்- வாலிபரிடம் ரூ.46 லட்சம் மோசடி: வாட்ஸ்அப் குழு மோசடி

    • புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). இவர் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி வாட்ஸ்அப் மூலம் அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர் பங்குச்சந்தையில் லாபகரமான பங்குகளுக்கான பரிந்துரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    அந்த நபர் கூறியபடி வாட்ஸ்அப் லிங்க்குக்குள் சென்று உறுதி செய்துள்ளார். பின்னர் ராஜசேகரை வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த வாட்ஸ்அப் குழுவில் வந்த யாதவ் என்பவர், ராஜசேகரிடம் குறிப்பிட்ட பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    ராஜசேகரும் அவருடைய செல்போனில் யாதவ் அனுப்பிய இணைப்பை பதிவேற்றம் செய்துள்ளார். தொடர்ந்து யாதவ் கூறியபடி ராஜசேகர், பங்குச்சந்தை வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல பரிவர்த்தனைகள் மூலம் ரூ.41½ லட்சம் அனுப்பியுள்ளார். அந்த குழுவில் தனது லாப பணத்தை ராஜசேகர் கேட்ட போது எந்த பதிலும் வரவில்லை.

    அதன்பிறகே மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேப்போல் திருப்பூர், காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (29). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி குறுஞ்செய்தி வந்தது. அதில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஞானசுந்தரம் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரமும், திருப்பூரில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்துள்ளார்.

    பின்னர் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய ஞானசுந்தரம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரம் செலுத்திய பணத்திற்கு லாபம் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் குழுவில் கேட்க ஞானசுந்தரத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதன்பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஞானசுந்தரம் மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×