என் மலர்
திருப்பூர்
- அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மணலால் ஓரளவிற்கு ஆழம் அதிகரித்து நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
- அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
உடுமலை:
உடுமலை திருமூர்த்தி அணை கட்டப்பட்ட பிறகு முறையாக தூர்வாரப்படாததால் அதன் நீர்ப்பரப்பில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பருவமழை குறுக்கிட்ட காரணத்தினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதி ஓரளவிற்கு ஆழமானது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
இதையடுத்து கோடை காலத்தில் அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பெருத்த போராட்டத்துக்குப்பிறகு அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து அனுமதி அளித்து இருந்தால் அணையும் ஆழமாகி இருக்கும். அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கும்.
அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். வண்டல் மண் அள்ளும் பணியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
- குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
- சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
குண்டடம்:
குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
இது குறித்து மேட்டுக்கடையை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது;-
குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.
இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களைஅதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகிறது.
இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அதிக விலைக்கு விற்பனையானதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்து ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தனர்.
நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர்.
அவர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நேற்று காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது.
- 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
திருப்பூர்
திருப்பூரில் கடந்த 4 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனாலும் மதிய நேரத்தில் வெயிலின் அளவு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது.
இதனால் நேற்று காலை மற்றும் மதிய நேரங்களில் திருப்பூர், சிறுபூலுவபட்டி, 15 வேலம்பாளையம், பெரியார்காலனி உள்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவிதாவின் செல்போனுக்கு ஒரு கடன் செயலி நிறுவனத்தில் இருந்து லிங்க் வந்தது.
- கவிதா அந்த கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30) பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருப்பூரில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவிதாவின் செல்போனுக்கு ஒரு கடன் செயலி நிறுவனத்தில் இருந்து லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்தபோது , குறைந்த வட்டியில் ரூ.5ஆயிரம் கடன் வாங்கி கொள்ளலாம் என்ற தகவல் இருந்தது. இதையடுத்து கவிதா அந்த கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார். இதற்காக அவரது புகைப்படம், ஆதார் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை கடன் செயலியில் பதிவேற்றினார்.
இதைத்தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5ஆயிரத்திற்கான தவணை தொகையை செலுத்தி வந்தார். 8 மாதங்களில் அசல், வட்டியுடன் பணத்தை முழுவதுமாக செலுத்தி முடித்தார்.
இந்தநிலையில் கடன் செயலியை சேர்ந்த கும்பல் கவிதாவின் செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பினர். அதனை கவிதா பார்த்தபோது அவரது ஆபாச புகைப்படங்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடன் செயலியை சேர்ந்த கும்பலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியது உள்ளது. அதனை செலுத்துங்கள். இல்லையென்றால் உங்களது ஆபாச புகைப்படங்களை இணையதளம் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கவிதா, கடன் செயலி மோசடி கும்பல் கேட்கும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். 8 மாதங்களாக மிரட்டி கவிதாவிடம் இருந்து ரூ.26 லட்சம் வரை பறித்துள்ளனர். பணம் இல்லாதபட்சத்தில் கவிதா வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தி வந்துள்ளார்.
தொடர்ந்து மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பணம் இல்லாததால் இதுபற்றி தனது கணவர் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார்.
உடனே இதுகுறித்து அவர் திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கவிதாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கடன் செயலி மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். மேலும் கவிதா, மோசடி கும்பலுக்கு செலுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கணக்குகள் குஜராத், மேற்கு வங்காளம், அசாம், புதுடெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்குகள் என தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். மேலும் இந்த மோசடி செயலில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி திருப்பூர் பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடன் செயலி மூலம் கடன் பெறும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் கடன் செயலி மூலம் பணம் பெற்று மோசடி கும்பல் வலையில் சிக்கி விடுகின்றனர். எனவே கடன் செயலி மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தாங்களே கணினிமூலம் விண்ணப்பிக்க https://tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம்.
தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 855 வரையும், மற்ற விவசாயிகளுக்கு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் மானியம் பெறலாம்.
இந்த திட்டத்துக்கான நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நில ஆவணங்களை சிட்டா, இ அடங்கல், புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு உள்ளதற்கான சான்று, ரேஷன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து நேரில் பதிவு செய்யலாம்.
தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பை அதிகரித்து அதிக வருவாய் பெறலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
தமிழகத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்தில் 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- நீர்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன.
- மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
திருப்பூர்:
பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூா் பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இதன் நீா்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன. தற்போது மான்களின் இனப்பெருக்கக் காலமாக உள்ளது.
இந்நிலையில், உப்பாறு ஓடையில் காணப்படும் மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.மேலும் இப்பகுதியில் காணப்படும் மான்களை பாதுகாக்க மான் வேட்டையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
- பல்லடத்தை அடுத்த பொங்கலூர், வெள்ளநத்தம் பகுதியில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
- கோழிப் பண்ணைகளில் இருந்து புதுவிதமான பூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பரவுகின்றன.
திருப்பூர்:
பொங்கலூா் பகுதியில் கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
பல்லடத்தை அடுத்த பொங்கலூர், வெள்ளநத்தம் பகுதியில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோழிப் பண்ணைகளில் காணப்படும் ஈக்கள் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பரவியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியதையடுத்து கோழிப் பண்ணை உரிமையாளா்கள் ஈக்கள் பரவுவதை கட்டுப்படுத்தினா்.
இந்நிலையில், மீண்டும் கோழிப் பண்ணைகளில் இருந்து புதுவிதமான பூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பரவுகின்றன. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனா்.
- ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பக்தர்கள் ஆண்டவர் பாடல்கள் பாடி கோவிலை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரரட்சிக்குட்பட்ட சுமார் 350 வருடங்களுக்கு மேலான புகழ்வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், நெய் பழங்கள், நலங்கு பொடி, போன்ற பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
ஸ்ரீ கோதாநாயகி ஆண்டாள்- ரங்கமன்னார் திருக்கோலத்தில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் ஆண்டவர் பாடல்கள் பாடி கோவிலை சுற்றி வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
- வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது
உடுமலை:
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு ஈட்டி,சந்தனம், வெள்வெல்,வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. அது தவிர வனச்சரகங்களை வாழ்விடமாக கொண்டு யானை, புலி,சிறுத்தை, காட்டெருமை,கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்குக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
ஆனால் கோடைகாலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விடுவதுடன் அங்கு வளர்ந்துள்ள மரங்கள், புற்கள், செடிகள் உள்ளிட்டவை காய்ந்து விடுகின்றன. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரப் பகுதிக்கு வந்து விடுகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து அமராவதி அணை அடைக்கலம் அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை காலத்தின் போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதையடுத்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அமராவதி அணைக்கு வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.அத்துடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளதுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.மேலும் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனால் வன விலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடையும் வாய்ப்பு உள்ளது.
ஆனாலும் பருவமழை தீவிரமடைந்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் மட்டுமே வனப்பகுதி முழுமையாக பசுமைக்கு திரும்பும். வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையும் நிவர்த்தி ஆகும்.அப்போதுதான் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
- தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
- ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம்.
அவினாசி:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், சூரியஒளி மின் விளக்குடன் பசுமை வீடுகள், பெண்களுக்கு இலவச ஆடு மாடுகள், கிரைண்டர், மின்விசிறி, மிக்சி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் என எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றுகிறது. சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், சாலை வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதை தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதாதான்.
தி.மு.க., அரசு வந்தால் சட்டம் ஒழுங்கு சரி இருக்காது. கள்ள சாராயம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை மற்றும் சந்தன மரம் நிறைய கடத்துவதாக பல பேர் சொல்கிறார்கள். இதை அரசு கவனிக்க வேண்டும்.
தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும்.வலிமையோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.. மக்களுக்காகவே இயங்கும் என்று சொன்ன ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
- பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை முதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர்:
பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்நாளை 24-ந்தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூா்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், ஆமந்தகடவு, கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா் மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும்.






