என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.

    திருப்பூர்:

    மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.

    பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    • 5 வயது குழந்தை தனது கையில் கிடைத்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டாள்.
    • குழந்தையின் பெற்றோர் உடனடியாக பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், பல்லகவுண்டம்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை தனது கையில் கிடைத்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டாள். நாணயம் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் அந்தக் குழந்தை தொண்டையைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டு அழுதாள்.

    குழந்தையின் பெற்றோர் உடனடியாக பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் உணவுக்குழாயில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

    அதனைத்தொடர்ந்து குடல் இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் நாணயத்தை வெளியே எடுத்தனர். அவர்களுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    • பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும்.
    • வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. விசைத்தறி தொழிற்சங்க தலைவர் வி.வி.தம்பிதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் திருவேங்கடம், திமுக., சுமைதூக்கும் சங்க செயலாளர் முருகேஷ் முன்னிலையில், மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க கோரியும், வேளாண் விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றக்கோரியும் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர். இதில் 50 பேர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும்.
    • குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்துள்ளது பள்ளபாளையம். இங்கு புதர்கள் மண்டி கிடந்த குளத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்னும் 25 சதவீத பணிகளை நிறைவு செய்தால், குளத்தில் அதிக அளவு நீரை தேக்க முடியும்.

    அத்திகடவு திட்டத்தால் இணைக்கப்பட்ட இக்குளத்தை சரியாக பராமரித்தால் இப்பகுதியில் அதிக விவசாயப் பணிகளை செய்ய முடியும். தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால் விரைவில் குளம் தூர்வாரும் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழிலாளர்களின் வயதை 18 ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    • .கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர்.

    உடுமலை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உடுமலை தாலுகா இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் நலச்சங்கம் , தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் சார்பில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெற்றது .கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர். பின்னர் தமிழ்நாடு இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் தலைமை நலச்சங்கம் பொதுச்செயலாளர் குமாரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பொதுத்துறை நிறுவன பெட்ரோல் பங்குகளில் சர்வீஸ் சென்டர் துவங்க இருப்பதால் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது. ஆகையால் சர்வீஸ் சென்டர் அமைக்க தடை விதிக்க வேண்டும். மற்றும் பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வயதை 18 ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் உடுமலை தாலுகா இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சௌந்தரராஜன், துணை செயலாளர் லட்சுமணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மதுசூதனன், பழனிச்சாமி, குமரவேல் ,தம்புராஜ், மணிகண்டன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

    உடுமலை:

    தமிழ்நாடு முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் தீரன் சின்னமலை 218 ம் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது. போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர்- முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்பதற்காக காங்கேயம்,பொள்ளாச்சி, தாராபுரம்,ஒட்டன்சத்திரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் பள்ளபாளையம் பகுதிக்கு சரக்கு வாகனத்தில் வருகை தந்தது.போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது.இதில் 200 மீட்டர் பிரிவில் 284 வண்டிகளும் 300 மீட்டர் பிரிவில் 79 வண்டிகளும் கலந்து கொண்டது.

    அதற்கு முன்பாக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்த உரிமையாளர்கள் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது.இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றது.போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது.

    சாரல் மழையிலும் அங்கு திரண்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அதன்படி 200 மீட்டரில் முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும்,2-ம் பரிசாக ¾ பவுன் தங்க நாணயமும் 3-ம் பரிசாக ½ பவுன் தங்க நாணயமும், நான்காம் பரிசாக ¼ பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 5 முதல் 25 இடங்களில் வந்த மாட்டு வண்டிகளுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டது.இதேபோன்று 300 மீட்டருக்கும் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    18 வினாடிகளுக்கும் குறைவாக வந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கினார்.இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக்அலி, உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போட்டி நடைபெறுவதை யொட்டி அமராவதிக்கு சென்ற வாகனங்கள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.மேலும் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
    • ரமேஷ் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் சேர்ந்த 16 வயது இளம்பெண் திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:- நான் எனது தாயுடன் திருப்பூரில் வசித்து வருகிறேன். பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

    இந்தநிலையில் சென்னையை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் (வயது 42) என்பவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது வந்த ரமேஷ் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அவரிடமிருந்து தப்பித்து ஓடிவந்தேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார்.

    இதையடுத்து போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்த போது இளம்பெண்ணின் தாயுடன் ரமேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதனால் ரமேஷ் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். நேற்று ரமேஷ் வந்தபோது கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நிலையில் அவரது 16 வயதான மகள் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ரமேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான ரமேசை போலீசார் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.
    • ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேன்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

    விருதுகள் விவரம் வருமாறு:-

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு-முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள் இதற்கு தகுதியடையவர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-தனிநபர்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-நிறுவனம்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்.

    சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை, பரிசு தொகை ரூ.15000. சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் வருமாறு:-

    விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் கடந்த ஆண்டு 01-01-2022 முதல் 31-2-2022 வரை உள்ள தகுதி காலத்திற்குள் தனிநபர் -நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். தனிநபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப்படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையுடன் இணைத்தல் வேண்டும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர் சி நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட 1-1-2022 முதல் 31-12-2022 வரை உள்ள காலகட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச்சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள் , பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும். மேற்கண்ட களப்பணியை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் ,தேர்வுக் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் , நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட நான்கு பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தநபர்கள், நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மேற்கண்ட நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள்,நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.

    சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான தனி விதிகள்:-

    சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம் 2022-ம் ஆண்டு ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022-ம் வரை வெளியான, தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்டோர் இணைந்து உருவாக்கிய, சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரைக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு மடலும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழிலும் / ஆங்கிலத்திலும் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சி கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி ,அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்று விவரம் அளித்தல் வேண்டும்.இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும் / ஆங்கிலத்திலும்), அந்தபுத்தகம் முழுமையாக இணைத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பிரசுரம் செய்திருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.ஆராய்ச்சிக் கட்டுரையின் 6 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

    ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பிக்கும் முறை:-

    விண்ணப்பத்துடன் செயலாக்கத்தினை உறுதிபடுத்தும் வகையில், பிரசுரச்சீட்டுகள், ஊர்வலங்கள் மற்றும் நிழற்படங்கள்,மற்ற அவசிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புகள் நூலால் உறுதியாக தைக்கபட்டிருக்கவேண்டும்.ஸ்டேப்ளர்பின் கொண்டு இணைக்கப்படக்கூடாது.இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநரக வளையதளத்தில் (www.environment.tn.nic.in) இருந்து 15.8.2023பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். வலைதள முகவரி தொலைபேசி எண்-www.environment.tn.nic.in- 2433 6421.

    விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யும் கடைசி நாள் -15.8.2023.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வந்து சேர வேண்டிய கடைசி நாள்-21.8.2023.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 நகல்களில் இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை' (Director, Department of Environment and Climate Change)என்ற பெயரில் ரூ.100 க்கான கேட்புக் காசோலையுடன் 3 புகைப்படங்களையும் இணைத்து அனுப்பவேண்டும்.இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தரைதளம், பனகல்மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு 21.8.2023 அன்று மாலை 5 மணிக்குள்ளாக தபால் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது.
    • நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்து மேலும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.24-

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக திறப்பு விழாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா வந்திருந்தார். விழாவில், அனைத்து பனியன் தொழில் அமைப்புகள் சார்பில் பொது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    தொழில் அமைப்பினர் அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:-

    இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி சரிந்துள்ளது. கடந்த ஆண்டு நூல்விலை அபரிமிதமாக உயர்ந்ததால், பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டது.

    வங்கதேசம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியவில்லை. பின்னலாடை உற்பத்தி மட்டுமல்லாது, நிட்டிங், சாயத்தொழில், காம்பாக்டிங், ரைசிங் போன்ற சார்புடைய தொழில்களும் பாதித்தன.திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களில் 75 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

    சங்கிலி தொடர் போன்ற ஜாப் ஒர்க் சேவை கிடைத்தால் மட்டுமே தரமான ஆடைகளை தயாரிக்க முடியும். திருப்பூர் ஆடைத் தொழிலின் நிலைமை மாறுபட்டுள்ளதால் தேவையான உள்கட்டமைப்பு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும்.

    ரஷ்யா - -உக்ரைன் போர் காரணமாக ஜவுளி உற்பத்தி நடவடிக்கை மந்தமாகி விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இக்கட்டான இந்நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    தொழில்நிலை மந்தமாக இருக்கும் போது மின்கட்டணம் உயர்ந்தது ஸ்தம்பிக்க செய்துள்ளது. நிலை கட்டண உயர்வும், பீக் ஹவர் கட்டணமும், தொழிலை சரிவு நிலைக்கு தள்ளிவிடும். மின்சாரத்தை பயன்படுத்தாத நேரத்திலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைத்து தொழில் சீராக இயங்க உதவிட வேண்டும். தமிழக அரசு கோரிக்கையை பரிசீலித்து திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    விசைத்தறிகள்

    கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி அனைத்து வகை மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. இதில் விசைத்தறிகளுக்கு 3ஏ-2 பிரிவின் கீழ் யூனிட்டுக்கு 4.50 ரூபாயில் இருந்து 6.40 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த விசைத்தறியாளர்கள், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், அதுவரை மின்கட்டணம் செலுத்தப்போவதில்லை எனக்கூறி பல கட்ட போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுடன் விசைத்தறியாளர் சங்கத்தினர் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக கடந்த மார்ச் 3-ந்தேதி மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 1.10 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் விசைத்தறி யாளர்கள், மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக மாநில முதல்வருக்கு மனு வழங்கி வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக மனு ஒன்றையும் அச்சடித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் போக, அனைத்து சிலாப்களுக்கும் யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின் கட்டண பயன்பாடு அடிப்படையில் 70 பைசாவில் இருந்து 1.40 ரூபாய் வரை யூனிட்டுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் கடந்த மார்ச் முதல் தேதி வரை கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து சிலாப்களுக்கும், யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த வேண்டும். நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். நிலுவை மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    அவினாசி:

    அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பட்டு சேலை வியாபாரிகள் ஆர்டர் வழங்குவர்.தங்கள் தேவையின் அளவு பொருத்து, பாவு நூல் வழங்கி சேலையை நெய்து வாங்கிக் கொள்வர். அதற்கான கூலியை, நெசவாளர்களுக்கு வழங்குவர். சமீப காலமாக ஆர்டர் இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பமே நெசவு தொழிலில் ஈடுபட்டால் தான் ஒன்றரை நாளில் ஒரு சேலையை நெய்து முடிக்க முடியும். வாரத்துக்கு 3,4 சேலைகள் ஆர்டர் கிடைக்கும். ஒரு சேலைக்கு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது வாரத்துக்கு ஒரு சேலை மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. வருமான பற்றாக்குறையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆர்டர் வழங்கும் வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் இல்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.எனவே அரசின் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை அங்காடிகளுக்கு தேவையான சேலையை, எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    தத்தனூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-

    சாவக்கட்டுப்பாளையத்தில் நெசவாளர்களை உள்ளடக்கி 4 கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் அவை செயல்படாமல் போயின. தற்போது நெசவாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 100 நெசவாளர்களை உள்ளடக்கி புதிதாக கூட்டுறவு சங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேலை நெய்வதற்குரிய பாவு, நூல் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மாடுகளை தங்களது வீடு முன்பு கட்டி போடுவதால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ் .பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேலன்.தொழிலாளியான இவர் இன்று காலை மனைவி சுமதி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடத்தில் திடீரென மண்எண்ணையை மனைவி, குழந்தை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தாங்கள் குடியிருக்கும் வழிப்பாதையை பக்கத்தை வீட்டை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாங்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மாடுகளை தங்களது வீடு முன்பு கட்டி போடுவதால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு மற்றும் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடி க்கையும் எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மணலால் ஓரளவிற்கு ஆழம் அதிகரித்து நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
    • அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலை திருமூர்த்தி அணை கட்டப்பட்ட பிறகு முறையாக தூர்வாரப்படாததால் அதன் நீர்ப்பரப்பில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பருவமழை குறுக்கிட்ட காரணத்தினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதி ஓரளவிற்கு ஆழமானது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.

    இதையடுத்து கோடை காலத்தில் அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பெருத்த போராட்டத்துக்குப்பிறகு அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து அனுமதி அளித்து இருந்தால் அணையும் ஆழமாகி இருக்கும். அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கும்.

    அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். வண்டல் மண் அள்ளும் பணியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    ×