என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன.
    • இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது.

    திருப்பூர்

    திருப்பூர்- நொய்யல் ஆற்றங்கரை பாலம் பகுதி முதல் சக்தி தியேட்டர், யூனியன் மில் ரோடு, வாலிப்பாளையம், ஊத்துக்குளி ரோடு, வாலிப்பாளையம் முருகன், சாய்பாபா கோவில் பகுதிகளில் பகல் நேரங்களில் கும்பலாக நின்று நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன. இதனால் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- தனியாக நடந்து செல்பவர்களை விரட்டி வந்து கடித்து விடுகிறது.

    இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது. கும்பலாக ஒன்று சேர்ந்து கடிக்க வருவதால் என்ன செய்வது யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் அச்சம் அடைகின்றனர். இது வரை கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் காலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள் நாய்களுக்கு பயந்து பொழுது விடிந்த பிறகு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி வயதானவர்கள் தான் நாய்கடிக்கு ஆளாகிறார்கள். ஆகவே இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாவட்ட குழு உறுப்பினர் கே.சரஸ்வதி தலைமை தாங்கினார்.
    • மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஊத்துக்குளி:

    மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளைகள் சார்பில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் கே.சரஸ்வதி தலைமை தாங்கினார்.

    தாலுகா கமிட்டி உறுப்பினரும், ஆர்.எஸ். கிளைச் செயலாளருமான கே.ஏ.சிவசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் கே.பாலமுரளி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் உள்பட கட்சி உறுப்பினர்கள், மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • ‘எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பலர் வசித்து வருகிறோம்.
    • கதிர்வீச்சினால் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் பிச்சம்பாளையம் வாழைத்தோட்டம் பாரதிநகர் வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் 'எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பலர் வசித்து வருகிறோம்.

    இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. காற்று அதிகமாக வீசும் காலம் என்பதால் இந்த கோபுரம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் அதிகப்படியான கதிர்வீச்சினால் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.

    தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் 48.17 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 50.20 அடியாக உயர்ந்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    குடிநீர் மற்றும் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இந்த சூழலில் மழை பெய்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு வினாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது.
    • மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா்

    அவிநாசி : 

    அவிநாசி அருகே சேவூரில் பழைமையான பத்ரகாளியம்மன் எனப் போற்றப்படும் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள் இரவு வெட்டிக் கடத்த முயன்றுள்ளனா்.அப்போது வெட்டிய சந்தன மரம் மின்கம்பி மீது விழுந்ததால், மா்ம நபா்கள் மரத்தை விட்டுச் சென்றனா். இதையடுத்து, சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
    • குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கென தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் செயல்படுவதால், உரிய நேரத்தில் விண்ணப்பங்களுக்கு முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கருக்கலைப்பு அனுமதி வழங்குவதற்கென தனி வாரியம், குழு அமைக்க சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில், மகப்பேறு மற்றும் பெண்கள் நல டாக்டர், பச்சிளம் குழந்தைகள் நலன் நிபுணர், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன் மற்றும் நரம்பியல் ஆகிய துறைத்தலைவர்கள், மனநல ஆலோசகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாரிய குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க., அரசு செயல்பட்டு வருவதாகவும்,10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அவினாசி நகரத்துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.

    அவினாசி:

    மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க., அரசு செயல்பட்டு வருவதாகவும்,10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் அவினாசி பழைய பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அவினாசி நகரத்துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், சண்முகம், மாவட்ட ஊடகப்பிரிவு துணைத்தலைவர் சந்துரு, ஒன்றிய பார்வையாளர் விஜயகுமார், நகர பொதுச்செயலாளர் மோகன்குமார் உட்பட மாவட்ட மண்டல, அணி, பிரிவு , நிர்வாகிகள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

    • உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 48 பேர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

     காங்கயம்

    காங்கயம் வட்டாரப் பகுதி உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவுப் பொருள் வணிகம் செய்வோருக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், டீ கடைகள், உணவகம், பேக்கரி, காய்கறி கடைகள், எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் மட்டன், சிக்கன் கடை நடத்துபவர்கள் உரிமம் பதிவு பெற்றுக்கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதையடுத்து காங்கயம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 48 பேர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

    விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என காங்கயம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

    • கீழ்பவானி பாசன திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சமச்சீரான தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர் மேலாண்மை செய்வதற்கு ரஸ்கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • பனை மரங்களை நடவு செய்து மண் கரையை பலப்படுத்த வேண்டும்.

    காங்கயம்:

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ் பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம், அஞ்சூர் வரை கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மேலும் கால்வாயில் சீரமைப்பு என்ற பெயரில் கால்வாயை சேதப்படுத்தியும், பழைய கட்டுமான பணிகளை தாமதப்படுத்தி, தாமதமாக சீரமைப்பு வேலைகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள், நீர்வளத் துறை அதிகாரிகளை கண்டித்தும், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ் பவானி பாசன இயக்கத்தின் சார்பில் நத்தக்காடையூர் அருகே உள்ள வெள்ளியங்காடு பஸ் நிறுத்தம் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமை தாங்கினார். இதில் பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்படுத்துதல், புதுப்பித்தல், விரிவாக்கம் என்ற திட்டத்தின் அரசு ஆணையை உடனடியாக ரத்து செய்ய கோரியும், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    மேலும் விவசாயிகள் அனைவருக்கும் கீழ்பவானி பாசன திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சமச்சீரான தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர் மேலாண்மை செய்வதற்கு ரஸ்கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கால்வாயை தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரங்களை நடவு செய்து மண் கரையை பலப்படுத்த வேண்டும்.

    கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு பணிக்கு நபார்டு வங்கியிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ரூ.750 கோடியை உடனடியாக திரும்பி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு)  11-ந் தேதி ஈரோடு கோண வாய்க்கால் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    • இந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா மற்றும் அறிமுக கூட்டம் உடுமலையில் நடைபெற்றது.
    • மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.

    உடுமலை:

    இந்து வியாபாரிகள் நலச்சங்க துவக்க விழா மற்றும் அறிமுக கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜெகன் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசினார்.

    மாவட்ட தலைவர் யு.கே.பி.பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி நன்றி கூறினார்.

    • அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
    • கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் ,கூலித்தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக இல்லை. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணித்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு பஸ்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது. அதன் மூலமாக பல்வேறு அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் அரசு பஸ்களை முறையாக முழுமையாக பராமரிப்பதற்கு உடுமலை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.

    அந்த வகையில் ஏராளமான பஸ்கள் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலும் உள்ளது. பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தரவேண்டிய அதிகாரிகள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாதது வேதனை அளிக்கிறது.

    இதனால் உடுமலைப் பகுதியில் இயங்குகின்ற அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்துவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பஸ்களை பராமரிப்பதற்காக அளிக்கப்படுகின்ற தொகை முழுமையாக செலவிடப்படுகிறதா என்றும் மாவட்டஅனைத்து பஸ்களும் முறையாக கிராமத்துக்கு இயக்கப்படுகிறதா என்றும் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். 

    • கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.

    திருப்பூர்:

    மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.

    பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×