என் மலர்
திருப்பூர்
- கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூலாங்கிணரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 77). இவர் கடந்த 12-ந் தேதி உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுப்பிரமணியத்தை கொலை செய்ததாக பூலாங்கிணர் பகுதியை சேர்ந்த தாமோதரன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான தாமோதரன் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நானும் சுப்பிரமணியமும், சில வருடங்களுக்கு முன்பு உடுமலையில் உள்ள தனியார் மில்லில் ஒன்றாக வேலை செய்தோம். அப்போது சுப்பிரமணியம் என்னை நல்ல முறையில் மரியாதையாக பேசி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு ஒருமையில் பேசி, தனக்கு தேவையானவைகளை கடைகளில் வாங்கி வர சொல்லியும் மிரட்டினான்.
இதனால் கோபமடைந்த நான் சுப்பிரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியம் முக்கோணத்தில் உள்ள ஒரு ஓட்டலின் முன்பு அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த கல்லை எடுத்து அவர் தலை மீது போட்டு கொலை செய்தேன் என்றார்.
கைதான தாமோதரனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகள்கள் கனிஷ்கா(வயது 11), சஷ்விகா(7). இவர்கள் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இவர்களை தினமும் அவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். அது போல் இன்று காலை 2பேரையும் அவரது தாத்தா மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். பல்லகவுண்டம்பாளையம் சாலையில் செல்லும் போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பள்ளி குழந்தைகள் கனிஷ்கா, சஷ்விகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான குழந்தைகள் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கணவர் இறந்த பின்பு மகேஸ்வரி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- ரம்யா மற்றும் அவரது கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நைலான் சேலையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர், முத்துசாமி கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ரம்யா (வயது 23) மற்றும் திவ்யா (17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ரம்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் இறந்த பின்பு மகேஸ்வரி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திவ்யா அவரது அக்கா ரம்யா வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது தாயார் மகேஸ்வரி 2-வது திருமணம் செய்தது பிடிக்காததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ரம்யா மற்றும் அவரது கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நைலான் சேலையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
- பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவிநாசி,ஜூலை.26-
அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
லாரியில் சென்ற எருமை மாடு கட்டப்பட்ட கயிறு துண்டாகி விட்டது. இதன் காரணமாக எருமை மாடு தடுமாறு ஓடும் லாரியிலிருந்து கீேழ விழுந்தது. மிகவும் வேகமாக சென்ற லாரியிலிருந்து கீழே விழந்த சமயம் பின்னால் லாரியை தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் எருமை மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதையறிந்த சமூக ஆா்வலா்கள், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
இதையடுத்து பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் எருமை உயிரிழந்தது.
- புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான படிவத்தினை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெறலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் வக்புநிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும் செம்மையாகவும்செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இரு சக்கரவாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான(எல்எல்ஆர்) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 63வக்பு நிறுவனத்தில் ஒரே பள்ளிவாசலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம் ,அராபி ஆசிரியர்கள் , மோதினார் , முஜாவர் என்றமுன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்பஅட்டை, வருமான சான்று, வயது சான்றிதழ், புகைப்படம், சாதிசான்று, புகைப்படம், மாற்று திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வங்கிகணக்கு எண் மற்றும் குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.மேலும் மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியரகம் திருப்பூர் (அறைஎண்:116) என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0421 - 2999130 என்ற தொலைபேசியிலும் அல்லது வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள வீட்டுமின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் வரை சிறப்பு பெயர் மாற்றம் முகாம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
- ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
உடுமலை:
உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள வீட்டுமின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் வரை சிறப்பு பெயர் மாற்றம் முகாம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் இந்த பெயர் மாற்ற முகாம்கள் ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
*வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள்*
ஆதார் அட்டை, நகராட்சி மற்றும் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்துவரி ரசீது நகல்(அல்லது) விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல்(அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்(பரிசு பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை) அல்லது நீதிமன்ற உத்தரவு, நகராட்சி மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது)ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்( பரிசு பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை)அல்லது நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
*இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள்*
செட்டில்மெண்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்த சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.ஆதார் அட்டை, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரிரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல், நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
*குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ஐடி.,) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள்*
பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவுச்சான்றிதழ் அல்லது வளாகம் அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே வீட்டு மின்இணைப்பு மற்றும் பொது மின்இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.
- 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:
தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நியமனம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வது,
வருகிற 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், பாலசுப்பிரமணியம், சசி என்கிற ஞானசிகாமணி, சசிக்குமார், லிங்கேஸ்வரன், ரவிச்சந்திரன், முகமது ஜூனைத், வடக்கு மாநகர துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பார்த்திபன், தியாகு, தெற்கு மாநகர துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், அரவிந்த், திருநாவுக்கரசு, சையது அபுதாஹிர், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
- அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி கமிஷனராக முகமது சம்சுதீன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு திருப்தி அளிக்காததால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அவர் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, பவானி கமிஷனராக இருந்த தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருசில நாட்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து காங்கயம் நகராட்சி பொறுப்பு கமிஷனராக இருந்த பன்னீர்செல்வமும், அதைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமாரும் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக பணியாற்றினர். வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே அவர்கள் வந்து சென்றதால் அலுவல் பணிகள் தடைபட்டது.
இதையடுத்து நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது. இதனால் கவுன்சிலர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள். இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ஹாரீஸ் சிவகங்கை மாவட்டத்திற்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக திட்டக்குடி நகராட்சி கமிஷனர் ஆண்டவன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
- சிபிஎஸ்இ., சகோதயா கூட்டமைப்பினை சேர்ந்த ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டுதல் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சுமார் 410 க்கும் அதிகமான பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சிபிஎஸ்இ., சகோதயா கூட்டமைப்பினை சேர்ந்த ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டுதல் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையுரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராகவும், கருத்தாளராகவும்பெங்களூரு யோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்ரமணியம் கலந்து கொண்டுஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துதல் என்னும் தலைப்பில் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.முன்னதாக சிறப்பு விருந்தினரை விவேகானந்தா அகாதெமி சிபிஎஸ்இ., பள்ளியின் முதல்வர் பத்மநாபன் அறிமுகப்படுத்தினார். திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் சிபிஎஸ்இ., பள்ளியின் முதல்வர் ராஜேந்திர பிரசாத் சிறப்பித்தார். ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். தி ஏர்னஸ்ட் அகாதெமி சிபிஎஸ்இ., பள்ளியின் முதல்வர் புவனேஷ்வரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சுமார் 410 க்கும் அதிகமான பல்வேறு துறைகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- கவுன்சிலர்களில் 11 பேர் குப்பை எடுப்பதற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- டெண்டரில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் உள்ளது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் கவிதாமணி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர்முத்துசாமி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களில் 11 பேர் குப்பை எடுப்பதற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் எடுப்பதற்காக ரூ.4 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. எந்தவித தகவலும் தெரிவிக்காமல் டெண்டர் விடப்பட்டதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சிலர்கள் முன் வைத்தனர்.
நகராட்சி தலைவர் இதை ஏற்காத நிலையில், டெண்டரை ரத்து செய்யாமல்தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று கூறி 7 தி.மு.க. கவுன்சிலர்கள், 2 பா.ஜனதா கவுன்சிலர்கள், அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தலா ஒருவர் என மொத்தம் 11 நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இது குறித்து கூட்டத்தில் தெரிவித்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட டெண்டர் குறித்து கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த டெண்டரில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இந்த டெண்டர் விவகாரத்தால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறோம் என்றனர்.
முன்னதாக டெண்டரை ரத்து செய்யக்கோரி கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால், நகராட்சி கூட்ட அரங்கில் இருந்து தலைவர் கவிதாமணி எழுந்து சென்றார். கவுன்சிலர்கள் 11 பேரும் கூட்ட அரங்கில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்ட அரங்கின் விளக்குகள் அனைக்கப்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து டெண்டரை ரத்து செய்ய பரிந்துரை செய்வதாக நகராட்சி கமிஷனர் முத்துசாமி கவுன்சிலர்களிடம் தெரிவித்தார்.
- விவசாயிகள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார், சூலூர் கந்தசாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரேஷன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். தேங்காய் கொப்பரை கிலோவுக்கு ரூ.140 விலை நிர்ணயம் செய்திட வேண்டும். உரித்த பச்சை தேங்காயை கிலோ ரூ. 50 க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
சத்துணவுத் திட்டத்தில் தேங்காய்பால் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும். தென்னை சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார், சூலூர் கந்தசாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன.
- இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது.
திருப்பூர்
திருப்பூர்- நொய்யல் ஆற்றங்கரை பாலம் பகுதி முதல் சக்தி தியேட்டர், யூனியன் மில் ரோடு, வாலிப்பாளையம், ஊத்துக்குளி ரோடு, வாலிப்பாளையம் முருகன், சாய்பாபா கோவில் பகுதிகளில் பகல் நேரங்களில் கும்பலாக நின்று நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன. இதனால் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- தனியாக நடந்து செல்பவர்களை விரட்டி வந்து கடித்து விடுகிறது.
இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது. கும்பலாக ஒன்று சேர்ந்து கடிக்க வருவதால் என்ன செய்வது யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் அச்சம் அடைகின்றனர். இது வரை கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் காலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள் நாய்களுக்கு பயந்து பொழுது விடிந்த பிறகு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி வயதானவர்கள் தான் நாய்கடிக்கு ஆளாகிறார்கள். ஆகவே இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






