என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை படத்தில் காணலாம்.

    பல்லடம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • கவுன்சிலர்களில் 11 பேர் குப்பை எடுப்பதற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • டெண்டரில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் கவிதாமணி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர்முத்துசாமி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களில் 11 பேர் குப்பை எடுப்பதற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் எடுப்பதற்காக ரூ.4 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. எந்தவித தகவலும் தெரிவிக்காமல் டெண்டர் விடப்பட்டதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சிலர்கள் முன் வைத்தனர்.

    நகராட்சி தலைவர் இதை ஏற்காத நிலையில், டெண்டரை ரத்து செய்யாமல்தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று கூறி 7 தி.மு.க. கவுன்சிலர்கள், 2 பா.ஜனதா கவுன்சிலர்கள், அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தலா ஒருவர் என மொத்தம் 11 நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இது குறித்து கூட்டத்தில் தெரிவித்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட டெண்டர் குறித்து கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த டெண்டரில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இந்த டெண்டர் விவகாரத்தால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறோம் என்றனர்.

    முன்னதாக டெண்டரை ரத்து செய்யக்கோரி கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால், நகராட்சி கூட்ட அரங்கில் இருந்து தலைவர் கவிதாமணி எழுந்து சென்றார். கவுன்சிலர்கள் 11 பேரும் கூட்ட அரங்கில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்ட அரங்கின் விளக்குகள் அனைக்கப்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து டெண்டரை ரத்து செய்ய பரிந்துரை செய்வதாக நகராட்சி கமிஷனர் முத்துசாமி கவுன்சிலர்களிடம் தெரிவித்தார்.

    Next Story
    ×