என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

    திருப்பூர்:

    திருப்பூர் அலகுமலை துணை மின் நிைலய முத்தணம்பாளையம் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பெருந்தொழுவு, கவுண்டம்பாளையம், நொச்சிபாளையம், அமராவதிபாளையம், ராமேகவுண்டம்பாளையம், கிருஷ்ணா நகர், பிள்ளையார் நகர், அமராவதி நகர், சரணம் அய்யப்பா நகர், ரங்கேகவுண்டம்பாளையம், கோவில் வழி, விவேகானந்தா பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 பேர் பூர்த்தி செய்து அதனை முகாம்களில் வழங்கி உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரூ.20.86 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி மற்றும் ரூ.18 கோடி மதிப்பில் உயர் மின் கோபுர தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    இதில் தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக 1,135 முகாம்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 பேர் பூர்த்தி செய்து அதனை முகாம்களில் வழங்கி உள்ளனர் என்றார்.

    அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. பைல்ஸ்-2 வெளியிடுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியலைத்தான் வெளியிடுகிறாரே தவிர, ஊழல் பட்டியல் இல்லை. எனினும் அதனை சட்டப்படி சந்திப்போம் என்றார்.

    அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , கலெக்டர் கிறிஸ்துராஜ் , ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டது.
    • பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி பகுதியில் தார் சாலை மற்றும் உரக்கடங்கு உள்ளிட்ட ரூ.46 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாபபு கண்ணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் முன்னிலை வகித்தார். அப்போது திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்து கூறியதாவது:-தாராபுரம் நகராட்சி பகுதியில் சுமார் 40ஆண்டு காலமாக முடிக்கப்படாத குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை திமுக., அரசு பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பணியில் முழு முயற்சியில் இப்பணிகளை நிறைவேற்றியதுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    அதில் அலங்கியம் சாலை முதல் உடுமலை சாலைவரை ரூ.16 லட்சம் மதிப்பில் தார்சாலையும்,அரசமரம் பகுதியில் ரூ.6லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பித்தல்,நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.இதன் அனைத்து பணிகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    நிகழ்ச்சியின் போது தி.மு.க., நகர செயலாளர் எஸ். முருகானந்தம், பொறியாளர் சண்முக வடிவு,மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர், நகரத் தலைவர் கதிரவன், நகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, புனிதா, கமலக்கண்ணன், துரை சந்திரசேகர், சீனிவாசன் முத்துலட்சுமி,தேவி அபிராமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு பேரணி வெள்ளகோவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மற்றும் டெங்கு எதிர்ப்பு மாத கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி வெள்ளகோவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    கருத்தரங்கில் ஆசிரியைகள், மாணவிகள் தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும்.

    சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கு ஏற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள், முதல் குழந்தைகளுக்கும் இரண்டாவது குழந்தைக்கும் தேவையான இடைவெளி, ஒருபெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்து கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் ஆரம்ப சுகாதார நிலைய புள்ளியல் அலுவலர் பெரியசாமி, சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன் மற்றும் விக்ரம் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். 

    • இலக்குகளை உள்ளூர் அளவில் அடைதல் குறித்த வெளியிட பயிற்சி நடைபெற்று வருகிறது.
    • மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்றுநர்கள் பயிற்சி வழங்கினர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், கிராம வார்டு உறுப்பினர்களுக்கு நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் அளவில் அடைதல் குறித்த வெளியிட பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இதில் வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்றுநர்கள் பயிற்சி வழங்கினர்.

    • வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் ரோட்டரி சங்க பட்டய தலைவர் எஸ்.ரகுநாதன் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர் வெங்கடசுப்பு தலைமையில், செயலாளர் அருண்குமார் முன்னிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் ரோட்டரி சங்க பட்டய தலைவர் எஸ்.ரகுநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது.
    • முத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் பஸ் நிலையம் அருகில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் நீர் மாசடைந்து கலர் மாறி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் கிணற்று நீரை கொண்டு குடிநீர் தேவையை பூர்த்திச் செய்து கொள்ளும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சில மாதங்களாக மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 புதிய மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
    • அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில் குடிநீர் விநியோக குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாகி வருகிறது.

    அதனால் குடியிருப்பு இணைப்புகளுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, தற்போது வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 142. 17 கிலோமீட்டர் நீளம் குடிநீர் விநியோக குழாய்கள், 16 ஆயிரத்து 462 வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு புதிய குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்கும் பணி மற்றும் 10 புதிய மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியானது 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டு, 2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

    • 163விவசாயிகள் கலந்து கொண்டு 86ஆயிரத்து 102 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • நேற்று மொத்த ரூ.60லட்சத்து 95ஆயிரத்து 967க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 163விவசாயிகள் கலந்து கொண்டு 86ஆயிரத்து 102 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 16 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 79.05 க்கும், குறைந்தபட்சம் ரூ.58.60க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்த ரூ.60லட்சத்து 95ஆயிரத்து 967க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • வீட்டுக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டிலுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • காயம் அடைந்த 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த கவுண்டம்பாளையம் நால் ரோட்டில் இருந்து மொரட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. சம்பவத்தன்று இங்குள்ள பாரில் ஊத்துக்குளி பாரதிநகரை சேர்ந்த சுரேந்தர் (வயது 23), வாசுதேவன் ( 23 ), ஆரியன் என்ற பழனிபாரதி (19) மற்றும் பல்லடம் பள்ளிவாசல் வீதியை சேர்ந்த சல்மான் கான் ( 24) ஆகியோர் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டிலுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை பாரில் வேலை செய்தவர்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து உள்ளூர் நண்பர்களை வரவழைத்து நாங்கள் அனைவரும் உள்ளூர்காரர்கள் தான் எங்களிடமே பணம் கேட்பாயா? என்று தகாத வார்த்தையில் பேசியதுடன், தொடர்ந்து கட்டை மற்றும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாரில் வேலை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை மற்றும் அய்யாதுரை, குணா ஆகிய 3 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேந்தர், வாசுதேவன், ஆரியன் என்ற பழனி பாரதி, சல்மான்கான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சில பேர் தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது. காயம் அடைந்த 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்டீல் டேப்பை இழுத்து விட்டு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
    • மேல்புறம் செல்லும் மின் கம்பியில் ஸ்டீல் டேப் பட்டு மின்சாரம் அவர்மேல் பாய்ந்துள்ளது.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் அருகேயுள்ள உள்ள முதலிபாளையம் அங்காள பரமேஸ்வரி நகரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் கவுடா (வயது 17) என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பிகாஷ் கவுடா கட்டிடத்தில் உள்ள ஜன்னல் பக்கத்தில் அருகே விட்டத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் ஸ்டீல் டேப்பை இழுத்து விட்டு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.

    அப்போது வீட்டிற்கு வெளியே மேல்புறம் செல்லும் மின் கம்பியில் ஸ்டீல் டேப் பட்டு மின்சாரம் அவர்மேல் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் தனித்தீவாக மாறியுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதளபரப்பிற்கு சென்று வரவேண்டி உள்ளது.

    ஒருசில மலைவாழ் குடியிருப்புகளை தவிர மற்ற பகுதியில் பாதை அமைக்கப்படவில்லை. இதனால் வன விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அமராவதி வனச்சரகத்தில் உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சம்பக்காட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் தனித்தீவாக மாறியுள்ளது. மேலும் இந்த பகுதி மக்கள் சமதள பரப்புக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ஆற்றைக் கடக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×