என் மலர்
திருப்பூர்
- சங்கமகுளம் அருகே 2 வயதுடைய ஆண் மான் ஒன்று உணவுத் தேடி வந்துள்ளது.
- தெரு நாய்கள் மானை பார்த்ததும் அதை துரத்தி சுற்றி வளைத்து கடித்து குதறி உள்ளது.
அவினாசி:
அவினாசி, புதுப்பாளையம், தெக்கலூர், கோதப்பாளையம், ராயபாளையம் , சங்கமகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை மான்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிக்கடி அவினாசி நகர்ப்புறங்களுக்கு அவ்வப்போது வருகின்றன. இந்த நிலையில் நேற்று அவினாசியை அடுத்து ராயம்பாளையம் சங்கமகுளம் அருகே 2 வயதுடைய ஆண் மான் ஒன்று உணவுத் தேடி வந்துள்ளது.
அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் மானை பார்த்ததும் அதை துரத்தி சுற்றி வளைத்து கடித்து குதறி உள்ளது.இதில் மானின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மானை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக உயிரிழந்தது. எனவே அச்சுறுத்தும் வகையில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் 90 வது குருபூஜை நிகழ்ச்சி நடந்தது.
- 8 மணி அளவில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது .
அவினாசி:
அவினாசியில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீகருணாம்பிகை உடனுறை அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் 90 வது குருபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் கரூர் குமாரசாமி தேசிகர் தலைமையில்சுந்தரமூர்த்தி நாயனார் அருள செய்த ஏழாம் திருமுறை, தெய்வ சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணம் வரலாறு பற்றி முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக நேற்று காலை 5 மணி அளவில் செல்வ வினாயகர், பாதிரி மரத்தம்மன், சிவகாமி அம்பாள், சுப்பிரமணியர், 63 நாயன்மார்கள், பஞ்சலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. 8 மணி அளவில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது .
இரவு 7 மணியளவில் யானை வாகனத்தில் சுந்தரரும், குதிரை வாகனத்தில் சேரமான் பெருமானும் திருக்கோவில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அவினாசி, திருப்பூர், திருமுருகன் பூண்டி, சேவூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் மற்றும் தனியார் பஸ்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.
- கணியாம்பூண்டியில் குப்பை மற்றும் சாக்கடை சுத்தம் செய்வதில்லை
அவினாசி:
அவினாசி ஒன்றியம் கணியம்பூண்டியில் ஏராளமான தொழிற்சாலைகள்,வணிக வளாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ளன. திருப்பூருக்கும் அவினாசிக்கும் மிக அருகில் இந்த கிராமம்அமைந்துள்ளதால் தினசரி போக்குவரத்து அதிகளவில் நடக்கிறது. அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்குள்ள பெரிய நிறுவனங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் மற்றும் தனியார் பஸ்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் இங்கிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் இருசக்கர வாகனத்திலும் பள்ளி வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கணியாம்பூண்டி மாரியம்மன் கோவில் அருகில் மூன்று ரோடு சந்திப்பு உள்ளது. இந்த ரோடு மிகவும் பழுதடைந்த நிலையில் இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து மாதகணக்கில் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கிறது.
இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தெரியாமல் அந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர். மேலும் கணியாம்பூண்டியில் குப்பை எடுப்பதில்லை. சாக்கடை சுத்தம் செய்வதில்லை, இதனால் குழந்தைகள் உள்ளிட்ட முதியோர்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. பழுதான ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
- கார் கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர்.
பல்லடம்:
பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில் இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் தலைமையில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா முன்னிலையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- போலீஸ் நிலையங்களில் விசாரணை நடைபெறும் போது அரசியல், பணம் உள்ளிட்ட சக்திகளின் இடையூறு இருக்கும். ஆனால் இந்த முகாமில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. மேலும் போலீசார் பொதுமக்களை கனிவுடன் நடத்தினர். இது போன்ற முகாம்களை அடிக்கடி நடத்த போலீசார் முன் வர வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் சரஸ்வதி, மங்கலம் கோபால கிருஷ்ணன்,காமநாயக்கன்பாளையம் ரவி, அவிநாசி பாளையம் விஜயா, மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் மதிமுக., நகரச் செயலாளர் வைகோ பாலு, ஆதித்தமிழர் பேரவை பவுத்தன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில் பல்லடம் நால்ரோடு சிக்னல், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிலர் கார் கண்ணாடிகளை தட்டி பிச்சை கேட்கின்றனர். கொடுக்க மறுத்தால் சாபம் இடுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கார் கண்ணாடிகளில் சோப்பு தண்ணீரை பீய்ச்சி அடித்து,கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர். எனவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
- மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
பல்லடம்:
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடைபெறும் மோதலால், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டுகொள்ளாத, மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து,பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், மாநில நிர்வாகி காட்டூர் வெங்கடாசலம், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் மணிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் நரேஷ் குமார், மற்றும் நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
- பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடியேற்று விழாவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் விழாவும் நடைபெற்றது. பின்னர் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாக்களில்,மாவட்ட தலைவர் கிரிஸ் சரவணன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வெற்றிச்செல்வன், நந்தகோபால், மாதப்பூர் சாமிநாதன்,புரட்சிமணி,பிரகாஷ், பூபதி, முன்னவன், மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி நிர்வாகம் மூலம் புதிய அங்கன்வாடி மையம் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
- தொழிற்சங்க கட்டிடத்தில் போதிய அடிப்படைகள் வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமி கவுண்டம்பாளையம் புதூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கன்வாடி மையக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதன் அருகே உள்ள தொழிற்சங்க அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் மூலம் புதிய அங்கன்வாடி மையம் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இன்னும் சில தினங்களில் அங்கன்வாடி கட்டிட பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சங்க கட்டிடத்தில் போதிய அடிப்படைகள் வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் சிலர் நேற்று அங்கன்வாடி மையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆகியோர் அங்கிருந்த பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
- தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், 22- வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதில் மத்தியஅரசு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே போராட்டத்தில், முருங்கைக்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் முருங்கை காய்களை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு காளிநாதம்பாளையம் சிவக்குமார் தலைமை தாங்கினார். உழவர் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் சின்னச்சாமி, பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மங்கை வள்ளி கும்மி கலைக்குழுவின் கும்மி ஆட்டம் நடைபெற்றது. ஆசிரியர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சியை நடத்தினார்.இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி, தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தை விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
- வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பல்லடம் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நிதி உதவுமாறு பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்திடம், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கண்காணிப்பு கேமராக்களுடன் அமைக்கப்பட்டது. அதனை கடந்த 20- ந்தேதி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களுக்கு நன்கொடை வழங்கிய வியாபாரிகளை கவுரவிக்கும் விழா பல்லடம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆனந்தா செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் கானியப்பா பரமசிவம், துணைத் தலைவர் பானு பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் விமல் பழனிச்சாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமரா அமைக்க உதவிய நன்கொடைகையாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கருப்பையா (வயது 41), மங்களம் இடுவம்பாளையத்தை சேர்ந்த தணிகைவேல் (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அருள்புரத்தில் பதுக்கி வைத்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர் என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுபாளையத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த "ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர்" என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பார்த்து வந்த அருள் என்பவரிடம் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் அவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.
இதனைதொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- இளம்பெண் ஒருவர், தான் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்ததாக பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- இளம்பெண் குளிப்பதை செல்போன் மூலம் வீடியோ எடுத்த பட்டீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்ததாக பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இளம்பெண் குளிப்பதை செல்போன் மூலம் வீடியோ எடுத்த பட்டீஸ்வரன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






