என் மலர்
தமிழ்நாடு

அவினாசி அரசியல் சுற்றுப்பயணத்தில் வேனில் இருந்தபடி சசிகலா பேசிய காட்சி.
தி.மு.க.விடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்- அவினாசியில் சசிகலா பேச்சு

- தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
- ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம்.
அவினாசி:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், சூரியஒளி மின் விளக்குடன் பசுமை வீடுகள், பெண்களுக்கு இலவச ஆடு மாடுகள், கிரைண்டர், மின்விசிறி, மிக்சி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் என எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றுகிறது. சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், சாலை வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதை தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதாதான்.
தி.மு.க., அரசு வந்தால் சட்டம் ஒழுங்கு சரி இருக்காது. கள்ள சாராயம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை மற்றும் சந்தன மரம் நிறைய கடத்துவதாக பல பேர் சொல்கிறார்கள். இதை அரசு கவனிக்க வேண்டும்.
தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும்.வலிமையோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.. மக்களுக்காகவே இயங்கும் என்று சொன்ன ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.