என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
    • பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புண்ணியவதி சாலையில் அமைந்துள்ள கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி செயலாளர் நிவேதிகா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே. செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு உறுப்பினர் ஜெயசுதா பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கராத்தே, பிரமிட் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    மேலும் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் சுவை குறையாத அளவில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.விழாவின் ஒரு நிகழ்வாக கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் சென்ற கல்வி ஆண்டிற்கான சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    விழாவில் கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைவர் மோகன் கே.கார்த்திக், பள்ளியின் இயக்குநர் கே.ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், பள்ளியின் முதல்வர் தீபாவதி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்ததோடு அவர்களை பாராட்டினர்.

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.
    • மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.

    திருப்பூர்:

    மாநில முதல்வர் கோப்பைக்கான போட்டி சென்னையில் ஜூன் 30-ந்தேதி துவங்கியது. ஜூலை, 25 வரை ஒரு மாதம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் உட்பட 608 பேர் பங்கேற்றனர்.

    துவக்கத்தில் வெற்றி புள்ளிகளை பெற்று முதல் 10 மாவட்டங்களுக்குள் இருந்த திருப்பூர் பின்னர் பின்தங்கியது. இருப்பினும் போட்டி நிறைவில் 38 மாவட்டங்கள் பட்டியலில் 20வது இடத்தை தக்க வைத்துள்ளது.

    டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் ஸ்ரீ சைலேஸ்வரி, ஸ்ரீ சாஸ்தாயினி ஜோடி தங்கம், தனிநபர் பிரிவில் ஸ்ரீ சைலீஸ்வரி வெள்ளி வென்றார். பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பிரவந்திகா தங்கம், இரட்டை பிரிவில் பிரவந்திகா - பிரசித்தா ஜோடி தங்கம் வென்றனர். தனிநபர் பிரிவில் சுதன் வெள்ளி வென்றார்.

    ஒற்றை சுருள்வாள் சிலம்பம் போட்டியில் சபரிநாதன் வெண்கலம், 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வைஷாலி வெண்கலம், அரசு ஊழியர் பிரிவில் சதுரங்க போட்டியில் நித்யா, பாஸ்கர் இருவரும் வெண்கலம் வென்றனர். மாநில போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றிய திருப்பூர் மாவட்டம் 20வது இடம் பெற்றது.

    • மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
    • கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை சரமாரியாக வெட்டி உள்ளார்.

    சென்னிமலை:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள புதூர், நஞ்சியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 பெண்கள், அனைவரும் திருமணமாகி தாராபுரம் மற்றும் தர்மபுரியில் அவர்களது கணவருடன் வசித்து வருகின்றனர்.

    பாலுவும், ஈஸ்வரியும் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை, நாமக்கல் பாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தனர். பாலு, அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ஈஸ்வரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் மது போதையில் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்த பாலு மனைவி ஈஸ்வரியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். ஏற்கனவே கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை சரமாரியாக வெட்டி உள்ளார்.

    இதில் சம்பவ இடத்திலேயே பாலு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் ஈஸ்வரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஈஸ்வரியை தேடி வருகின்றனர்.

    கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 437 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 217 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விரும்புவோருக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 73 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

    கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 28 பேருக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு மற்றும் பி.டி.எஸ்.பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

    • பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் சீராக விநியோகிக்கப்படாத நிலையில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2 மற்றும் 3 வது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அம்ரூத் திட்டத்தில் 4-வது குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை அடிப்படையில் பெரும்பாலான பகுதிகளில் சப்ளை தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, 2வது குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் பிரதான குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற இடங்களில் சீரமைப்பு பணிகள் செய்தும், அதற்கு வழியில்லாத இடங்களில் குழாய்கள் மாற்றியும் குடிநீர் வினியோகம் தொடர்ந்து நடக்கிறது.

    அவ்வகையில் பெத்திச்செட்டிபுரம் பகுதியில் 2வது குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்துள்ளது. இதில் இருந்து அதிக அளவு குடிநீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் சென்று கலந்து வீணாகிறது. சமீபத்தில் இந்த குழாய் சேதமான இடத்தில் அதன் மீது இரும்பு தகடு பொருத்தி குடிநீர் கசிவது தடுக்கப்பட்டது.இருப்பினும் சேதமான குழாயில் இருந்து குடிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. எனவே சேதமான குழாயில் நிரந்தரமாக முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் உடுமலை- திருமூர்த்திமலை பிரதான சாலையில் வெளியேறி வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.அது மட்டுமின்றி உடைப்பின் வழியாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து சென்று பொதுமக்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியின் காரணமாக திருமூர்த்தி அணையில் குறைவான நீர் இருப்பே உள்ளது.தென்மேற்கு பருவமழையும் கைகொடுத்து உதவாததால் அணையின் நீர் இருப்பும் உயரவில்லை. காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் அணையில் உள்ள நீர் இருப்பை வீணாகாமல் பாதுகாத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் குடிநீர் யாருக்கும் உபயோகமில்லாமல் சாலையில் வீணாகி வருகிறது.

    பொதுமக்களும் தண்ணீர் பற்றாக்குறையால் போராட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து சீரான முறையில் தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மேலும் சாலையில் ஆறாக ஓடும் குடிநீரால் அப்பகுதி சாலைகள் சேதமடைகின்றன.இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    இதே போன்று தளி பேரூராட்சியின் நுழைவுப்பகுதியில் பஸ் நிறுத்தத்தின் அருகே சாலை சேதமடைந்து மழை நீர் தேங்கி உள்ளது.இதனால் ஆனைமலை சாலை வழியாக உடுமலைக்கு வருகை தருகின்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தின் அருகே தண்ணீர் தேங்காதவாறு சாலையை சீரமைப்பதற்கு முன்வர வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இயலும் என்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்து சீராக குடிநீர்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

    திருப்பூர்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.

    பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர்ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணபதிபாளையம் வி.ஏ.டி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பார்க் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார்ஜெ ய்சிங் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • வசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்
    • ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.120, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.30 சின்ன வெங்காயம் ரூ. 100. உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, புடலை காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.80,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.250, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 60, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.100,சுரைக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அவினாசிபாளையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த 5- ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் தொடர் காத்திருப்பு போராட்டம் 26 வது நாளாக நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று விவசாயிகளின் இந்த காத்திருப்பு போராட்டம் நிறைவு பெறுகிறது.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் அடுத்த கட்டமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய போராட்டத்திற்கு பேபி ராமசாமி தலைமை தாங்கினார். கவிதா முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் திருஞானசம்பந்தன், களஞ்சியம் பொன்னுசாமி, நஞ்ச ராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தேங்காய்க்கு விலை வேண்டும் என்று தேங்காய்க்கு பூஜை செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது.
    • மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி(வயது 51). இவர் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று இவரது வீட்டில் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்று வந்து விழுந்தது. அதன் கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மயிலுக்கு உணவு கொடுத்து தண்ணீர் கொடுத்து பராமரிப்பு செய்தனர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வன காவலர் வெங்கடேஸை அனுப்பி காயம்பட்ட அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.மேலும் மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    தேசிய பறவையான மயிலை காப்பாற்றி உணவு கொடுத்து பராமரித்த முத்துக்குமாரசாமி குடும்பத்தாருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து மயிலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
    • வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. பலமுறை போலீசார் நடவடிக்கை எடுத்தும் இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை .

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை சோதனை சாவடியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்யம் பத்ரா என்பவரது மகன் பிஸ்வாம்பர் பத்ரா(23) மற்றும் ஹோட்டாக்கர்மி என்பவரது மகன் ரஞ்சன் கர்மி(31) என தெரியவந்தது.

    2 பேரும் திருப்பூர் அருகே உள்ள இடுவம்பாளையம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரது மகன் ஆகாஷ்(வயது 17). சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாலை வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவனது தாயார் ஆஷிகா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×