search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்
    X

    திருமூர்த்திநகர் அருேக குழாய் உடைந்து சாலையில்  குடிநீர் வீணாக தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

    • பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் சீராக விநியோகிக்கப்படாத நிலையில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடி தண்ணீர் ஆறாக ஓடி வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2 மற்றும் 3 வது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அம்ரூத் திட்டத்தில் 4-வது குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை அடிப்படையில் பெரும்பாலான பகுதிகளில் சப்ளை தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, 2வது குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் பிரதான குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற இடங்களில் சீரமைப்பு பணிகள் செய்தும், அதற்கு வழியில்லாத இடங்களில் குழாய்கள் மாற்றியும் குடிநீர் வினியோகம் தொடர்ந்து நடக்கிறது.

    அவ்வகையில் பெத்திச்செட்டிபுரம் பகுதியில் 2வது குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய் சேதமடைந்துள்ளது. இதில் இருந்து அதிக அளவு குடிநீர் வெளியேறி கழிவுநீர் கால்வாயில் சென்று கலந்து வீணாகிறது. சமீபத்தில் இந்த குழாய் சேதமான இடத்தில் அதன் மீது இரும்பு தகடு பொருத்தி குடிநீர் கசிவது தடுக்கப்பட்டது.இருப்பினும் சேதமான குழாயில் இருந்து குடிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. எனவே சேதமான குழாயில் நிரந்தரமாக முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் உடுமலை- திருமூர்த்திமலை பிரதான சாலையில் வெளியேறி வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.அது மட்டுமின்றி உடைப்பின் வழியாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து சென்று பொதுமக்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியின் காரணமாக திருமூர்த்தி அணையில் குறைவான நீர் இருப்பே உள்ளது.தென்மேற்கு பருவமழையும் கைகொடுத்து உதவாததால் அணையின் நீர் இருப்பும் உயரவில்லை. காண்டூர் கால்வாயில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் அணையில் உள்ள நீர் இருப்பை வீணாகாமல் பாதுகாத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் குடிநீர் யாருக்கும் உபயோகமில்லாமல் சாலையில் வீணாகி வருகிறது.

    பொதுமக்களும் தண்ணீர் பற்றாக்குறையால் போராட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே திருமூர்த்தி நகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து சீரான முறையில் தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மேலும் சாலையில் ஆறாக ஓடும் குடிநீரால் அப்பகுதி சாலைகள் சேதமடைகின்றன.இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    இதே போன்று தளி பேரூராட்சியின் நுழைவுப்பகுதியில் பஸ் நிறுத்தத்தின் அருகே சாலை சேதமடைந்து மழை நீர் தேங்கி உள்ளது.இதனால் ஆனைமலை சாலை வழியாக உடுமலைக்கு வருகை தருகின்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தின் அருகே தண்ணீர் தேங்காதவாறு சாலையை சீரமைப்பதற்கு முன்வர வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இயலும் என்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்து சீராக குடிநீர்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×