search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலங்களில் தடுப்பு சுவர், மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×