என் மலர்
திருப்பூர்
- காட்பாடி - பெரம்பூர் மார்கத்தில் அரக்கோணம் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.
- 23, 30ந் தேதி ஆகிய 2நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயங்கும்.
திருப்பூர்:
காட்பாடி - பெரம்பூர் மார்கத்தில் அரக்கோணம் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12680) வருகிற 23, 30ந் தேதி ஆகிய 2நாட்கள் காட்பாடி வரை மட்டும் இயங்கும்.
காலை 6:20 மணிக்கு கோவையில் புறப்படும் ெரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, மொரப்பூர், சாமல்பட்டி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் வழியாக பயணித்து காலை 11:35 மணிக்கு காட்பாடி சென்று சேரும். அரக்கோணம் பெரம்பூர், சென்னைக்கு செல்லாது.
மறுமார்க்கமாக சென்னைக்கு பதில் காட்பாடியில் இருந்து மாலை 4:20மணிக்கு ெரயில் (எண்: 12679) புறப்படும். இரவு 10:15 மணிக்கு கோவை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி.
- வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி. கலந்தாய்வு முடிந்த பின் உருவாகும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் உடனடி துணை பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்தும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போது தான் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காது. பதவி உயர்வுக்கு பின் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் கடந்த முதல் தேதி அடிப்படையில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்துவதன் வாயிலாக வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
- ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.
திருப்பூர்:
கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில், கொங்கு மண்டலத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பேருதவியாக வுள்ளது.இதனால் எப்போதுமே இந்த ெரயிலில் இடம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். இந்த ெரயிலின் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை வழியாக திருப்பதிக்கு வாரம் இரு முறை ெரயில் புதிதாக இயக்கப்படவுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ெரயிலை இயக்குவதற்கு, ெரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள இந்த ரெயில் கொல்லத்தில் மதியம் புறப்பட்டு மாலை 6மணிக்கு கோவை வழியாக கடந்து செல்கிறது.கோவையில் இந்த ெரயிலில் ஏறினால் மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு திருப்பதி சென்று விடலாம். மறு மார்க்கத்தில் திருப்பதியிலிருந்து இந்த ெரயில், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புறப்பட்டு கோவையை கடந்து கேரளம் செல்லும். திருப்பதியில் மதியம் 2:40 மணிக்கு இந்த ெரயில் புறப்படும். கோவைக்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.
கேரளத்தில் கொல்லத்தில் புறப்படும் இந்த ெரயில், மாவேலிக்கரை, சங்கனாச்சேரி, காயம்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களிலும் , தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும். ஆந்திர மாநிலம் சித்தூரில் நிற்கும்.
இந்த ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது என்பது, பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.
இதில் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டத்திலுள்ள நகரங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென்பது கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது
- நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிலச்சீர்திருத்தம் நிலம் மற்றும் பூமிதான நிலங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தலைமையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தெரிவித்ததாவது:-
நிலச்சீர்திருத்த சட்டம் பிரிவு 37எ – ன் கீழ் அனுமதி பெற்ற தொழில் நிறுவனங்கள்,அனுமதி பெற்ற நிலங்களை உரிய பயன்பாட்டில் வைத்துள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நிபந்தனை மீறப்பட்டுள்ளதா என்பதை மாதந்தோறும் தணிக்கை செய்யவும், நீதிமன்ற வழக்குளில் உள்ள நிலங்கள் தொடர்பாக எதிர்வாதங்களை உடன் தாக்கல் செய்யவும், பூமி தானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுத்து நிலங்களை பாதுகாக்கவும், நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் ,உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த கண்ணன், உதவிஆணையர் (கலால்) ராம்குமார், உதவி இயக்குநர் (நிலஅளவை) சசிக்குமார் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
- வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சமூகநலத்துறை ஆணையர் அமுதவள்ளி தலைமையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சமூகநலத்துறை ஆணையர் அமுதவள்ளி தெரிவித்ததாவது:-
பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்து க்கொள்ளவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
25.8.2023 அன்று முதல் இரண்டாம் கட்டமாக மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளதை தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ,ஹேமா (திருப்பூர்), பாஸ்கர் (கோயம்புத்தூர்), ரமேஷ்(ஈரோடு), தேன்மொழி (கரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.344.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.344.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாநகராட்சி பாண்டியன் நகரில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி, சினேகா நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், டவுன்ஹாலில் ரூ.54.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநாட்டு அரங்கம் என மொத்தம் ரூ.389.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் , துணை ஆணையர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் கண்ணன், வாசு, திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் மற்றும் தொடர்புடைய அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசியல்வாதி ஒருவர் பேசியது அவரது சொந்த கருத்து. அவர்களுடைய மாநிலத்தில் விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இடையிடையே அவ்வப்போது அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து டெல்டா பகுதிகளில் பயிர்கள் பாதிக்காத வண்ணம் தண்ணீர் கிடைப்பதற்கு வழி வகை செய்வார். நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.
- விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவிநாசி,ஆக.19-
அவிநாசியில் தகுதிச் சான்று இல்லாமல் அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த ஆட்டோ, சொந்த காரை வாடகை உபயோகத்துக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் பறிமுதல் செய்தாா்.
அவிநாசி புனித தோமையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் பள்ளி மாணவா்களை அழைத்து வந்த பயணிகள் ஆட்டோ, அதேபோல, சொந்த காரை வாடகைக்குப் பயன்படுத்தி பள்ளி மாணவா்களை அழைத்து வந்த காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.
மேலும் இந்த வாகனங்களுக்கு ரூ. 17ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையாளர் முத்துசாமி மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் ,அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதுமே கவுன்சிலர்கள் ஏன் ரகசிய கூட்டம் போல் நடத்துகின்றனர். பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் இருந்தால் தானே பொதுமக்கள் பிரச்சனை குறித்து என்ன பேசுகிறோம் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரிய வரும். அதை விடுத்து ரகசியமாக கூட்டம் நடத்துவது தேவையா என ஆட்சேபித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 48 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டதாகவும் இதற்கு 3,7,10,11,12,13,17, ஆகிய 7 வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், தீர்மானங்களை எதிர்த்து1,2,4,6,8,9,14,15,16,18, ஆகிய 10 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.
இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
- விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
தேங்காய்க்கு உரிய விலை கேட்டு பல்லடம் அருகே உள்ள நாதகவுண்டம்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர்சண்முகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநிலகொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, மாநில பொருளாளர் தங்கராஜ்,மாநில அவைத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பிரச்சார குழுத் தலைவர் பூரண்டாம்பாளையம் மணி மற்றும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் திருப்பூர் ,கோயம்புத்தூர்,கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி, மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் என்.எஸ்.பி.நந்தகுமார் நன்றி கூறினார்.19-ம் நாளாக தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிப்பாதையில், எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
- கோவை நோக்கி சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
பல்லடம், ஆக.19-
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 44). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பகுதியில் வேலைக்குச் சென்றவர் பொருட்கள் வாங்குவதற்காக பல்லடம் நோக்கி வந்துள்ளார். கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வழிப்பாதையில், எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்களில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் காட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.
- சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
- அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.
பல்லடம்:
பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் பணிக்கம்பட்டி அருகே உள்ள இலந்த குட்டை என்ற பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் ரோட்டை விட்டு திடீரென கீழே இறங்கியதால், ஸ்கூட்டர் சரிந்ததாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த லாரி நிற்காமல் சென்றதால், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சிறைபிடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






