என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும்.
    • கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும்.

     திருப்பூர்:

    கோவை மண்டல அளவிலான மாஸ்டர் பிளான்-2047 திட்டம் தயாரிக்கும் பணியை நகர் ஊரமைப்புத்துறை தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யப்படுகிறது. திட்ட அறிக்கை தயாரிக்கும் முன்பு, திருப்பூர் பனியன் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் தொழில்துறையினருடன் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் புஷ்பராஜ் வரவேற்றார். சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சிக்குழு உறுப்பினர் சண்முகராஜ், திருப்பூர் வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திருக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்று, திருப்பூரின் எதிர்கால தேவைகள் குறித்து பேசினார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் சாலை வசதி செய்ய வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். கோவை கொடிசியா அரங்கு போல் திருப்பூரில் நிரந்தர வர்த்தக மையம் அமைக்க வேண்டும். திருப்பூரில் உள்ள ரெயில்வே கூட்ஷெட்டை விரைவில் வஞ்சிப்பாளையத்துக்கு மாற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி வேண்டும்.

    விளையாட்டு அரங்கம் பெரிய அளவில் அமைக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்துக்கு பின்னலாடைகளை எளிதில் கொண்டு செல்லும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    திருப்பூர் மாநகரை தொழில் நகருக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும்.
    • போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும்.

    திருப்பூர்,ஆக.21-

    கோவை ஈஷா யோகா மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை ஈஷா யோக மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக்கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி வருகிற 26-ந் தேதி காயத்ரி மஹாலில் நடைபெறுகிறது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் கபடி அணிகள் கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கேற்கலாம்.

    அகில இந்திய அமெச்சூா் கபடிக் கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும். ஆண்கள் 85 கிலோவுக்கு மிகாமலும், பெண்கள் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசு ஊழியா்கள், செட்டிங் அணி, நிறுவன அணிகள் பங்கேற்க இயலாது. போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும். இதில், பங்கேற்கவுள்ள அணிகள் ஈஷா யோக மையத்தின் இணையதளத்தில் ஆகஸ்ட் 23 ந் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பை, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரா், வீராங்கனைகள் தலா 12 போ் தோ்வு குழுவினரால் திருப்பூா் மாவட்ட அணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தி கோவையில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டிக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 83000-30999 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏற்கெனவே இணைப்பு உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை
    • புதிய இணைப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சியில் அம்ரூத் -2.0 திட்டத்தில் புதிதாக குடிநீா் இணைப்பும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்களை மாற்றிக்கொள்ளலாம் என ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    வெள்ளக்கோவில் நகராட்சியில் அம்ரூத் - 2.0 திட்டத்தில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் 142.17 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெயின், பகிா்மான குழாய்கள் அமைத்து 10 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் மூலம் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஏற்கெனவே இணைப்பு உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கு கட்டணம் இல்லை. புதிய இணைப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இதனை நான்கு தவணைகளில் செலுத்தும் வசதியும் உள்ளது.எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு புதிய குடிநீா் இணைப்புகள் பெறவும், ஏற்கெனவே இணைப்பு பெற்றவா்கள் குழாய்களை மாற்றியமைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலிபாளையம், பழவஞ்சிபாளையம் மற்றும் நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், இரெங்கே கவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தாம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினிேயாகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம்.
    • புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, இலவச எண்ணில் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனைச்சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் புலனாய்வு அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர்.
    • சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள், பிரிண்டிங், வாஷிங் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன் சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என பல விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    ஆனால் சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலே குடோன்கள் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் டிரம் மூலம் பட்டன், ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். பின்னர் சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர். அவ்வாறு திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் கலந்த சாயக்கழிவுநீரால் ஆற்றுநீர் நிறம் மாறி நுரையுடன் பாய்ந்தது.

    இதனால் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும்போது பயிர்கள் காய்கின்றன. இதனால் ஆற்றுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    எனவே மாசுக்கட்டுபாட்டு வாரியம் சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.

    வெள்ளகோவில்

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா்.

    இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4.9 டன் தேங்காய், 3.7 டன் கொப்பரை ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் கிலோ ரூ.17.65 முதல் ரூ. 22.70 வரையிலும், கொப்பரை கிலோ ரூ.59.00 முதல் ரூ.75.35 வரைக்கும் விற்பனையானது.

    ஏலத்தில் மொத்தமாக ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.

    • பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் இருந்தனர்.
    • 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை நிா்வாகத்தினா் துண்டித்தனா்.

    அவிநாசி

    அவிநாசி பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் உள்ளவா்களை உடனடியாக செலுத்தக் கோரி செயல் அலுவலா் ராமலிங்கம் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்தும் சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை பேரூராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை துண்டித்தனா்.

    மேலும் 2022, 2023-ம் ஆண்டு வரையிலான நிலுவையிலுள்ள சொத்துவரி, குடிநீா் உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    • காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • 21-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 21-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

    ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம். 

    • நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும்

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம் ஏ.இ.5-ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். உரிம கட்டணம் ரூ.1,200 ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட வேண்டும். அதில் மனுதாரர் தனது கையொப்பம் இட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது இணைக்க வேண்டும்.

    வாடகை கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டிட உரிமையாளருடன் ரூ.20 மதிப்புக்கு குறையாத முத்திரைத்தாளில் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தம் ஆவணம் இணைக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருந்தால் அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்க வேண்டும்.

    பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய கட்டிட உரிம கட்டணம் செலுத்திய ரசீது இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் அடுத்த மாதம் 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பெறாத விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு இன்றி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    • தெக்கலூர் புதுப்பாளையம் நத்தகாட்டுபிரிவில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
    • சிப்ஸ்கள் அடுக்கி வைத்துள்ள 128 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட குடோன் முழுவதும் தீ பரவியது.

    அவிநாசி

    அவிநாசி அருகே தெக்கலூர் புதுப்பாளையம் நத்தகாட்டுபிரிவில் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிப்ஸ்கள் அடுக்கி வைத்துள்ள 128 அடி நீளம் 80 அடி அகலம் கொண்ட குடோன் முழுவதும் தீ பரவியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சிப்ஸ்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

    இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.
    • நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இதில் பழைய ஆயக்கட்டு பாசனம் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.

    அமராவதி அணை 4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகவும், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் என ஆண்டுக்கு 10 டி.எம்.சி., நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.நடப்பாண்டு அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை தீவிரமடையவில்லை. பருவ மழை ஏமாற்றி வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து இல்லை.கடந்த ஆண்டு ஜூலை 15ல் அணை நிரம்பி 8 மாதம் வரை ததும்பிய நிலையில் காணப்பட்டது. நடப்பாண்டு கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.இதனால் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த 8ந் தேதி திறக்கப்பட்டு 10 நாட்கள் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

    அதே போல் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களும் பயன்பெற்று வருகின்றன. நடப்பாண்டு 10 நாட்கள் மட்டும் உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலங்களுக்கு வழக்கமாக ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் பாசனம் துவக்கப்பட்டு ஜனவரி வரை நீர் வழங்கப்படும்.நடப்பாண்டு அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் கரூர் வரை உள்ள வலது கரை கால்வாய் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நடப்பாண்டு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, இரண்டாம் போகம் சம்பா சாகுபடிக்கும் நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என்றனர்.

    அமராவதி அணையில் தற்போதையை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 56.66 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,528.66 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 740 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே நாளில், அமராவதி அணை நீர்மட்டம் 87.9 அடியாகவும், நீர்இருப்பு 3,857 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. நடப்பாண்டு நீர்இருப்பு பெருமளவு குறைந்து காணப்படுகிறது.

    ×