என் மலர்
திருப்பூர்
- பாபி சர்தாரிடமிருந்த ரூ. 5ஆயிரம் மற்றும் 20 இரும்பு ராடுகளை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
- இரவில் பாபி சர்தார் தங்கி இருந்த அறை கதவை 3 மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்து தட்டி உள்ளனர்.
அவினாசி:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பாபி சர்தார் (வயது 25). இவர் அவிநாசி மங்கலம் ரோட்டில் கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு இரவில் அவர் தங்கி இருந்த அறை கதவை 3 மர்ம நபர்கள் முகத்தை துணியால் மறைத்து தட்டி உள்ளனர்.
கதவை திறக்காததால் அந்த நபர்கள் சிமெண்ட் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து பாபி சர்தார் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடமிருந்த ரூ. 5ஆயிரம் மற்றும் 20 இரும்பு ராடுகளை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மூர்த்தி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
- வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பை என்ற இடத்தில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் மூர்த்தி(வயது 47) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வேதனை அடைந்த விவசாயி தனக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
- பெரியசாமி என்பவர் வளர்த்து வந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக்கொன்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டியில் பெரியசாமி என்பவர் வளர்த்து வந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக்கொன்றன. இதையடுத்து பெரியசாமி உடுமலை காவல்துறை , உடுமலை வட்டாட்சியர் மற்றும் கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார்.
வேதனை அடைந்த விவசாயி தனக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- 2 கால்களும் ரெயிலுக்கும், நடைமேம்பாலத்திற்கும் இடையே சிக்கியது.
- உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருப்பூர்:
சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 42). இவர் திருப்பூர் அவினாசியில் உள்ள சலூன்கடையில் முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை குடிபோதையில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தார். திடீரென ரெயில் நிலைய வளாகத்தில் படுத்து தூங்கினார். இதையடுத்து அங்கு ரோந்து சுற்றி வந்த திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் மாரி முத்துவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் சிரித்து கொண்டே முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்தார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.
இருப்பினும் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சுற்றியும் வளாகத்தில் படுத்தும் தூங்கினார்.
இந்நிலையில் பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் , திருப்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அதில் ஏறி இறங்கினர். பின்னர் ரெயில் புறப்பட்டு செல்லும் போது தூங்கி கொண்டிருந்த மாரிமுத்து திடீரென எழுந்து , புறப்பட்டு சென்ற ரெயிலில் ஏற முயன்றார். போதையில் இருந்ததால் தடுமாறிய அவர் நடைமேம்பாலம்- தண்டவாளத்தின் இடையே விழுந்தார். இதில் அவரது 2 கால்களும் ரெயிலுக்கும், நடைமேம்பாலத்திற்கும் இடையே சிக்கியது.
ரெயில் வேகமாக சென்றதால் அவரது 2 கால்களும் நசுங்கி துண்டாகின. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதை மயக்கத்தில் ரெயிலில் சிக்கி தொழிலாளியின் 2 கால்களும் துண்டான சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 20, 30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் மக்கள் அதிகம் உள்ள வார்டுகளாகும். அதனால் அந்த வார்டுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் பகுதி வாரியாக தொடங்கி நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது 60 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதாகும். வார்டு வாரியாக பகிர்மான குழாய்கள் இணைப்பு பணிகள் முடிந்து மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில வார்டுகளில் மட்டும் முழுமையான அளவில் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் 4-வது குடிநீர் திட்டத்தில் 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி 20,30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் அளவு குறைந்தாலும் உடனடியாக நிரப்பும் பணிகள், குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீரின் அளவை கண்டறியும் ஸ்கேடா கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.
20, 30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் மக்கள் அதிகம் உள்ள வார்டுகளாகும். அதனால் அந்த வார்டுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
- திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்
- மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளான்.
அவினாசி:
அவினாசி வ.உ.சி., காலனியில்வசித்து வருபவர் உமேஷ் (வயது 63). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜ பாளையம் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று பக்கத்துவீட்டுகாரர் இவருக்கு போன் மூலம் சமையல் அறை கதவு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார். எனவே வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு அவரிடம் உமேஷ் கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பீரோ, ரேக், ஆகியவற்றை திறந்து பணம், நகைகளை திருட முயன்றுள்ளதும், நகைகள் ஏதும் இல்லாததால் தப்பி சென்றுள்ளனர்.
மேலும் வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் தப்பியது.
இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சில மாதங்களாக நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்தது.
- பருத்தி ஆடை களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் வர்த்தக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது
திருப்பூர்:
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ஆயத்த ஆடை இறக்குமதி செய்யும் நாடுகளில், பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டன. இயல்புநிலை திரும்பாததால் அந்நாடு களின் ஆடை நுகர்வும் குறைந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டரும் குறைந்தது.சில மாதங்களாக நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்தது. கடந்த 2022 ஜூலையில் 10 ஆயிரத்து 994 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம் 9,375 கோடி ரூபாயாக குறைந்தது.
கடந்த 2022 ஏப்ரல் - ஜூலை வரையிலான 4 மாத ஏற்றுமதி 45 ஆயிரத்து 648 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு அதே காலத்தில் 39 ஆயிரத்து 746 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், சர்வதேச அளவில், பருத்தி ஆடை களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் வர்த்தக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு பின், அந்நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.பட்ஜெட் தயாரித்து செலவு செய்ய பழகிவிட்டனர்.விலை குறைவான ஆடைகளை பயன்படுத்துகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் மட்டுமே வர்த்தக இயல்பு நிலை திரும்பும்.அதன் பிறகே பருத்தி ஆடை ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படும்.
முன்னதாக செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதிக்கு இந்திய நிறுவனங்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது என்றார்.
- திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது.
- கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது.
உடுமலை:
திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி ெரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ெரயிலை கோவை வரை நீட்டிப்பதாக அப்போது ெரயில்வே அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.ஆனால் அதற்கு மாறாக அந்த ெரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ெரயிலை, இப்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது பாம்பன் பாலமும், ராமேஸ்வரம் ெரயில்வே நிலையமும் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ெரயில்கள் அனைத்தும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகின்றன.
கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த பின்பு அந்த ெரயில் கோவை- ராமேஸ்வரம் இரவு நேர ெரயிலாக இயக்கப்பட்டு வந்தது.மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, ராமே ஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் 90 ஆண்டுகளாக இயங்கி வந்தது.கோவையில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனளித்து வந்தது. அகல ெரயில் பாதைப்பணிக்காக நிறுத்தப்பட்ட அந்த ெரயிலை மீண்டும் இயக்கினால் கொங்கு மண்டலத்திலுள்ள பக்தர்கள், தென் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்குமென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி, மனுப்போர் நடத்தி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் கடிதம் மேல் கடிதம் அனுப்பி வருகின்றனர். இன்று வரையிலும் இதற்கான பரிந்துரை கூட அனுப்பப்படவில்லை.
இந்நிலையில் மங்களூருவி லிருந்து ராமேஸ்வரத்துக்கு போத்தனூர் வழியாக வாரம் இரு முறை ெரயிலை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது.அதையும் கோவை சந்திப்புக்கு வராமல், போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- 2023-24 ஆண்டுக்கான மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
- மாணவிகளுக்கு வாழ்க்கையில் நாம் என்ன ஆகப் போகிறோம் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும்
திருப்பூர்:
திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் 2023-24 ஆண்டுக்கான மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வா் வசந்தி வரவேற்றாா். கல்லூரியின் தாளாளரும், கோவை மண்டல வீட்டுவசதி துணைப் பதிவாளருமான அா்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், பேரவைத் தலைவியாக ஸ்ரீநிதி (பி.காம்., 3-ம் ஆண்டு), துணைத் தலைவியாக ஹரிணி (பி.எஸ்சி., கணினி அறிவியல் 3-ம்ஆண்டு), செயலாளராக சுரேகா (பி.காம்., 2-ம் ஆண்டு) ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை லாா்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் மனித வளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிா்வாகி டெய்ஸி மேரி பேசியதாவது:- மாணவி களுக்கு வாழ்க்கையில் நாம் என்ன ஆகப் போகிறோம் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும். படிப்புக்கு வயது தடை இல்லை. படிப்பை நம்மிடம் இருந்து யாரும் வாங்க முடியாது என்றாா்.
நிகழ்ச்சியில் எத்தியோப்பியா நாட்டு பேராசிரியா் கருணாகரன், கல்லூரி நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 25.8.2023 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.
மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் கூட்டத்தில் அமைக்கப்படும். வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
- ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தப்பெண் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பெண்ணின் ஊர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்து பைக் மற்றும் 3 கார்களில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் அந்த ஆண் நண்பர், மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணபதிபாளையம் ஊராட்சி கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் ராமகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகன் விக்னேஷ் இருவரையும் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.
- எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடிமங்கலம்:
குடிமங்கலத்தையடுத்த கோட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது தோட்டத்து கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி வெறிநாய்களால் கடித்து கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறுவதாக எண்ணி வந்த நிலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் நேரில் பார்த்தவர்கள் மூலம் நாய்கள் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபடுகின்றன என்று உறுதிப்படுத்தினர்.இதனால் வனத்துறையினர் இந்த பிரச்சினையிலிருந்து விலகி விட்டனர். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார் என்று தெரியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இப்போதும் விவசாயிகளுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் கடித்து குதறப்படும்போது ஏன் சத்தம் கேட்பதில்லை. காட்டு விலங்குகள் போல நாய்களும் சத்தமெழும்பாத வகையில் மூச்சுக் குழாயை கடித்து வேட்டையாடுமா? . கால்நடைகளை வேட்டையாடுவது நாய்கள்தானா? அல்லது ஏதேனும் வேட்டை விலங்குகளா என்பதை கண்டறியும் வகையில் முழுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடைகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு குழந்தைகள் இலக்காகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று விவசாயிகள் கூறினர்.






