என் மலர்
தூத்துக்குடி
- ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும்.
- பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ஜே.ஜே. நகர் பகுதி கடற்கரையில் தினசரி இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிகாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று ஜெ.ஜெ. நகர் கடற்கரை பகுதியில் இருந்து வீரபாண்டி பட்டினம் கடற்கரைக்கு செல்லக்கூடிய பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும்பொழுது கடற்கரை பகுதியில் இருந்து கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும் என்று தெரிகிறது.
இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்தும் சென்றனர்.
ஆனால் தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டும் அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயங்கள் ஏற்பட்டும் இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
கடந்த 2 வாரங்களில் இந்த ஆமையோடு சேர்த்து மொத்தம் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடற்கரையில் 100 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் 10 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் நேற்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆமையும் கரை ஒதுங்கியது.
இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் அருகே ஜெ. ஜெ. நகர் கடற்கரை பகுதியில் 50 கிலோ எடைகொண்ட 3½ அடி நீளமுடைய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்று சமீப நாட்களாக கடல் வாழ் உயிரினங்களான டால்பின், ஆமை உள்ளவைகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது திருச்செந்தூர் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சென்னை கடற்கரையில் கடந்த மாதம் இதுபோல் அதிக அளவில் கடல் ஆமைகள் வாழ்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
- எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
- தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
* எல்லா வரியையும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பதா?
* எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
* தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாக, சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சியினர், சினிமா நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
- கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் சாலையில் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் குடும்பத்தினர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தரைத்தளம் மற்றும் மாடியில் 2 தளங்கள் என கடை செயல்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றும் அவரின் மகன் ஜோயல் இருவரும் பார்த்து வருகின்றனர். மாடியில் உள்ள முதல் தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றொரு மகன் பிரபு பார்த்து வருகிறார். மேலும் மாடியில் உள்ள 2-வது தளத்தை குடோனாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மாடியில் உள்ள முதல் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 2 தீயணைப்பு வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.
தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
- இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே முனியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). உப்பள தொழிலாளி.
இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சுரேஷ் (40). பெயிண்டர். இவர்கள் இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அரிவாளை எடுத்து ராஜாவின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்ட ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி நகர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் பெயிண்டர் சுரேசை இரவோடு இரவாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு முதல் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை சமையல் புளி, 1 லட்சம் எண்ணிக்கையிலான இங்கிலாந்து நாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.
இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கடற்கரை ஓரமாக போட்டுவிட்டு பைபர் படகில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலில் இன்று, சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 370-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
நாளை (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் கோவிலில் குவிந்து வருகிறார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சண்முகர் படங்களை வைத்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வந்து கோவிலில் குவிந்தனர்.
காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
- விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி என்பவர் காயமடைந்தார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கான தீப்பெட்டி ஆலை உள்ளது. இதனை கோவில்பட்டி லாயல் மில் காலனியை சேர்ந்த செண்பக விநாயக மூர்த்தி, சிராக் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் டிராக்டர் டேங்கர்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி (வயது 55) என்பவர் காயமடைந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் ஆலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், மூலப்பொருட்கள், எந்திரங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமானது. விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, டீசல், புளி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் படகு மூலம் கடத்தப்படும் சம்பவங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைப்பற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி-குளத்தூர் கடற்கரை வழியாக பீடி இலை உள்ளிட்ட சில பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் நேற்று இரவு முதல் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை குளத்தூர் அருகே கல்லூரணி கிராம கடற்கரை பகுதியில் லோடு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டை பீடி இலைகளும் (மொத்தம் 1200 கிலோ), இங்கிலாந்து நாட்டின் சிகரெட் 1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை கைப்பற்றிய போலீசார் லோடு ஏற்றி வந்த வாகனத்தில் இருந்த ஓட்டப்பிடாரம் மேலசுப்பிர மணியபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் (வயது 25), ஒசநூத்து சிவன்கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைப்பற்றபட்ட சிகரெட் மற்றும் பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.
மேலும் கடத்தலுக்கு உடந்தையாக அவர்களுடன் வந்து தப்பி ஓடிய தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்த வினித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது.
- வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இருந்து ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் சார்பில் பதிவு செய்யப்பட்ட மணமக்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30-க்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
- சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
- சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் கோவில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம்,மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.
10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் உபயோகிக்க மற்றும் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் சினிமா துணை நடிகரான செல்வா என்பவர் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது போல உள்ளே சென்று செல்போனில் அத்துமீறி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் கருவறையில் உள்ள மூலவரையும் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆன்லைன் மூலம் துணை நடிகர் செல்வா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






