என் மலர்
திருநெல்வேலி
- பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் பதுங்கும் யானை இரவில் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது
- ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
களக்காடு:
திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் கடந்த 1 வாரமாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் பதுங்கும் யானை இரவில் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் விவசாய தோட்டங்களில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த 3 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தது. இந்த சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை நீண்ட நேரத்திற்கு பின்னரே தோட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது. ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். யானை நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். ஒற்றை யானை நடமாடும் பகுதி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் பாதை ஆகும். மேலும் யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்று விவசாயிகளும் புகார் தெரிவித்துள்ளதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆபத்து நிலவுவதாக கூறுகின்றனர். எனவே அச்சுறுத்தி வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பக்தர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
- கல்லூரி முதல்வர் ராஜன் புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
- சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் வணிகவியல் துறை சுயநிதிப்பிரிவு சார்பில், எம்பிராயடரிங் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சி பட்டறை நடைபெற்றது. பேராசிரியர் மரிய கிறிஸ்டின் நிர்மலா வரவேற்று பேசினார். முதல்வர் ராஜன், தலைமை தாங்கி புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். உள்தர உறுதி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புஷ்பராஜ் பயிற்சியின் அவசியம் பற்றி வாழ்த்தி பேசினார். துறைத்தலைவர் மனோகர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து மாணவர் திறன் மேம்பாட்டின் அவசியத்தை விளக்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் அதிகாரம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு சங்க நிறுவன தலைவர் சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பெண்களின் பெருமைகளையும், பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தென்காசி, சஞ்சய் அகாடமி நிறுவனர் செண்பகவல்லி பயிற்சியின் நோக்கம் பற்றி பேசி குழு மூலமாக மாணவர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர் திறன் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சுஜா பிரேமரஜினி, லதா, மனோகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.
- காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
- திசையன்விளை மனோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
திசையன்விளை:
திசையன்விளை மனோ கல்லூரி முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
காமராஜர் ஆட்சிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிக்கூடங்களை திறந்ததால், கல்வி கற்றவர்களின் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்ந்தது. எனவேதான் காமராஜரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் புதிய கல்விக்கூடங்களை கட்டுவதற்கு ரூ.1,000 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த கல்விக்கூடங்களுக்கு காமராஜர் பெயரை சூட்டி பெருமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
திசையன்விளை மனோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்லூரிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்கல்லூரியானது இந்த ஆண்டில் அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவிகள் மனு
திசையன்விளை பஸ் நிலையத்தில் இருந்து மனோ கல்லூரிக்கு அரசு டவுன் பஸ் சேவையை நீட்டித்து தர வேண்டும் என்று மாணவிகள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திசையன்விளை, குருகாபுரம், நந்தன்குளம், எருமைகுளம், ரோச் மாநகர், ஆனைகுடி, பொத்தகாலன்விளை, இடையன்குடி, இலக்கரிவிளை, காரம்பாடு, அப்புவிளை உள்ளிட்ட 13 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
- மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
- நாடகம் மூலம் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் புகையிலைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே தொடங்கிய இப்பேரணியை கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, கூடங்குளம் சி.எஸ்.ஐ தேவாலய ரெவரன்ட் எட்வின் டேனியல், மாவட்ட கவுன்சிலர் ஜான் ரூபா கிங்ஸ்டன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்ற கல்லூரி மாணவ மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பி பொதுமக்களிடம் துண்டறிக்கையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிழக்கு பஸ் நிலையத்தில் மாணவர்கள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கிய டி.டி.என் கல்வி குழுமத்தின் தலைவர் லாரன்ஸ் பொது மக்களுக்கும், மாணவர் களுக்கும் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்று பேசினார்கள். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது இபாம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலை சங்கம் மற்றும் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- 20-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.
- கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
களக்காடு:
களக்காடு அருகே மஞ்சுவிளை பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றி திரிகிறது. மேலும் கரடி வாழைகளையும் நாசம் செய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் 20-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.
இந்த வாழைகள் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயிகள் ஜேம்ஸ், பால்ராஜ் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே வாழை தோட்டங்களுக்குள் உலா வந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும், கரடிகள் நாசம் செய்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சமீபகாலமாக காட்டுப்பன்றி, கடமான், கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
- சொத்துக்களை பிரிக்க முத்தையா எதிர்ப்பு தெரிவித்து தனக்கு மட்டும் தான் சொத்தை வழங்க வேண்டும் என கூறி வந்துள்ளார்
- பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி பாளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நெல்லை:
நெல்லை சீவலப்பேரி அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (வயது 70). இவருக்கு முத்தையா என்ற மகனும், வெயிலாச்சி (40) என்ற மகளும் உள்ளனர்.
வெயிலாச்சிக்கு தூத்துக்குடியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 மகனும், மகளும் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெயிலாச்சி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இசக்கியம்மாளுக்கு சொந்தமான சொத்துக்களை தனது மகனுக்கும், மகளுக்கும் பிரித்து வழங்க முயற்சித்துள்ளார்.
ஆனால் சொத்துக்களை பிரிக்க முத்தையா எதிர்ப்பு தெரிவித்து தனக்கு மட்டும் தான் சொத்தை வழங்க வேண்டும் என கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அவ்வப் போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது முத்தையா பாட்டிலால் இசக்கியம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இசக்கியம்மாள் அவரது மகள் வெயிலாச்சி மற்றும் 2 குழந்தைகளுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். நுழைவு வாயில் முன்பு திடீரென இசக்கியம்மாளும், வெயிலாச்சியும் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதைப்பார்த்து அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தாய், மகளை மீட்டு அவர்களது உடலில் தண்ணீர் ஊற்றினர்.
அப்போது வெயிலாச்சி கூறும்போது, எனது அண்ணன் முத்தையா சொத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி எனது தாயை அடித்து துன்புறுத்தி வருகிறார். சொத்தை அபகரிக்கும் நோக்கில் எனது தாய்க்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக தொலைபேசி மூலம் போலீசாருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றோம் என்றார்.
பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி பாளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
- போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகள் கிதோரின் ஸ்மைலா. இவர் நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரி விடுதி அறையில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை விடுதி அறையில் மாணவி கிதோரின் ஸ்மைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த சக மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்ததோடு, 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
- தினேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் குலவணிகர்புரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம்(வயது 28). பெயிண்டர்.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரது சகோதரர் முத்து பெருமாளை தேடி உள்ளனர். அவர் அங்கு இல்லாததால் செந்தில் ஆறுமுகத்தை அந்த கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றது.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். உடனே போலீசார் சோதனை சாவடிகளில் இருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாநகர பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
அப்போது மேலப்பாளையம் பகுதியில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 5 பேரிடமும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் 5 பேரும் செந்தில் ஆறுமுகத்தை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவர்கள் ரெட்டியார்பட்டி எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்த தினேஷ்(26), சுரேஷ்(21), குலவணிகர்புரம் யாதவர் தெருவை சேர்ந்த மச்சகண்ணன், சபரிநாதன்(27), கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கிராஜா(32) ஆகியோர் என்பதும், பெண் விவகாரத்தில் கடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்ததோடு, 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இதில் தினேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
- கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
- நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் கொண்டாநகரம் பகுதியில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அதே பகுதியில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டிட பணிகளையும், நடுக்கல்லூரில் இயங்கி வரும் வாழை நாரில் இருந்து கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் கூடத்தையும் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கொண்டா நகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம், கோடகநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- 422 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உரிமம் கோரப்படாத 422 வாகனங்களில் 415 மோட்டார் சைக்கிள்களும், 7 நான்கு சக்கர வாகனங்களும் போலீ சாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்வோர் முன்பணமாக ரூ.5 ஆயிரம் நெல்லை மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதிக்குள் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனத்தை வாங்குவோர் முன்னதாகவே அதனை பார்வையிட்டு செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- கொங்கந்தான் பாறை,இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான கழகத்தின் நகர்புற விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால் ரெட்டியார் பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல் பாளை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வி.எம். சத்திரம், கேடிசி நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரிய குளம், மேலகுளம், நடுவக் குறிச்சி, ரஹ்மத் நகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட் பகுதி,
திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், படப்பக்குறிச்சி, மணப்படை வீடு, கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜா நகர், தியாகராஜ நகர், அன்பு நகர், முருகன் குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தலையணையில் குளிக்க தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- தற்போது தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டுகிறது.
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது களக்காடு மலைப்பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலால் வெப்பம் நிலவுகிறது. இதனைதொடர்ந்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது.
தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டு கிறது. இந்த தண்ணீர் 10 நாட்களில் முழுவதும் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கோடை விடுமுறைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிவார்கள். இந்தாண்டு அடுத்த மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில் தலையணையில் தண்ணீர்வரத்து குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.






