என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி சிலுவைப்பாதையுடன் தொடங்கியது.
    • பவனியை தெற்குகள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்கு தந்தை ஜாண்சன் ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் புனித பாத்திமா திருத்தலத்தில் இருந்து தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பாதம் பதித்த புனித மலைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்கால தவப்பவனி சென்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி சிலுவைப்பாதையுடன் தொடங்கியது. இந்த தவக்கா லத்தில் கிறிஸ்தவர்கள் பல்வேறு ஜெப வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்குகள்ளிகுளம் மற்றும் வள்ளியூர் பங்கு மக்கள் இணைந்து தவக்கால தவப்பவனி சென்றனர்.

    இந்த பவனியை தெற்குகள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்கு தந்தை ஜாண்சன் ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர். பவனியில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூர் பங்கு மக்கள், தெற்கு கள்ளிகுளம் பங்கு மக்கள் கலந்துகொண்டனர். பவனி வள்ளியூர் பிரதான சாலை வழியாக ராதாபுரம் சாலை, நேருநர்ஸிங் கல்லூரி சாலை வழியாக வந்தது. நேரு நர்ஸிங் கல்லூரி முன்பு கல்லூரி தலைவர் டி.லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் பவனி மடப்பும், ஆறுபுளி விலக்கு, தட்சண மாறநாடார் சங்க கல்லூரி வழியாக தெற்குகள்ளிகுளம் மலையை சென்றடைந்தது. அங்கு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் அசனவிருந்து வழங்கப்பட்டது. தவப்ப ணிக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் ஜெரால்டு எஸ்.ரவி, ஜாண்சன், தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி பொருளாதாரத் துறை சார்பாக பொருளியல் மன்ற விழா நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து வினாடி வினா போட்டியை ராஜேந்திரன் ரவிக்குமார் நடத்தினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி பொருளாதாரத் துறை சார்பாக பொருளியல் மன்ற விழா நடைபெற்றது. மூன்றாமாண்டு மாணவி அனுசியா வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் து.ராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    பொருளியல்துறை தலைவர் ஹரிகோவிந்தராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவியும், சாராள்டக்கர் கல்லூரியின் பொருளியல் துறை உதவிப் பேராசிரியருமான அனிசி சுபா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கையின் அவசியத்ததை எடுத்துரைத்தார் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் பண்னை செல்வகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து வினாடி வினா போட்டியை ராஜேந்திரன் ரவிக்குமார் நடத்தினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் இரண்டாமாண்டு மாணவி முத்து லட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    • சம்பவத்தன்று ஸ்டாலின் களக்காடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்டாலினிடம் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அதனை திருப்புவதற்கு ரூ.1 லட்சம் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

    களக்காடு:

    சேரன்மகாதேவி அருகே உள்ள தெய்வநாயகபேரி கீழத்தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மகன் ஸ்டாலின் (வயது 24). விவசாயி.

    நகை அடகு

    சம்பவத்தன்று இவர் களக்காடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்டாலினிடம் தான் ஏர்வாடியில் உள்ள ஒரு வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அதனை திருப்புவதற்கு ரூ.1 லட்சம் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

    மேலும் நகையை திருப்பியவுடன் தங்களிடமே தந்து விடுகிறேன் என்றும் கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய ஸ்டாலின் அவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் ஸ்டாலினை ஏர்வாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை வங்கியின் அருகே நிற்க சொல்லி விட்டு, நகையை திருப்பி வருகிறேன் என்று கூறி வங்கிக்குள் சென்றார்.

    விசாரணை

    ஆனால் நீண்டநேரமாகி யும் திரும்ப வரவில்லை. அந்த மர்ம நபர் ரூ.1 லட்சத்துடன் தப்பி சென்று விட்டதை அறிந்த ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • இந்த நிலங்களை மீட்பதற்காக நிலங்களை அளவீடு செய்து கல் பதிக்கப்பட்டு வருகிறது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா விற்குட்பட்ட ஆழ்வார் திருநகரி யில் ஏகாந்தலிங்க சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, திருமலாபுரம் கிராமத்தில் உள்ளது.

    ஆனால் இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் கோவிலுக்குரிய குத்தகை தொகைகளை செலுத்து வதில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற் கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உத்தரவின் பேரில், தனி தாசில்தார் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித், பேஸ்கார் முத்துராஜா, அளவையர்கள் ஜெகன், முத்துசெல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருமலாபுரத்தில் கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் இப்பகுதியில் கோவிலுக்கு சொந்தமாக 1,010 ஏக்கர் நிலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலங் களை மீட்பதற்காக நிலங் களை அளவீடு செய்து கல் பதிக்கப்பட்டு வருகிறது. 900 ஏக்கர் நிலங்கள் கண்டறி யப்பட்டு, கல் நடப்பட்டு உள்ளது.

    மீதமுள்ள நிலங்களை கண்டறிய அளவீடு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அளவீடு பணிகள் முடிந்த பின் நிலங்கள் மீட்கப்படும் என்றும் அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    • மாவடியில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ‘திருமதி’ வாழை நார் உற்பத்தி மையம் திறப்பு விழா நடந்தது.
    • பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்ற அடைந்து தங்களது கிராம பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் பேசினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மாவடியில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 'திருமதி' வாழை நார் உற்பத்தி மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உற்பத்தி மையத்தினை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வேலைவாய்ப்பு இல்லாத பெண்கள், குறைவான வருமானம் பெறும் பெண்கள் அனைவரும் தங்களது பகுதியிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர்ந்து உழைப்பதன் மூலம் தங்களது பொருளாதரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.

    இந்த வருமானம், பெண்கள் தங்களது குடும்பத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும், குழந்தைகளின் கல்வி செலவிற்கும், உயர் கல்விக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்ற அடைந்து தங்களது கிராம பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக மலையடிபுதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் வரவேற்றார். இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜார்ஜ்கோசல், ரமேஷ் பிளவர் லிமிடெட் முதன்மை செயல் அலுவலர் சுரேஷ், யூனைடெட் வே ஆப் சென்னை திட்ட தலைவர் ஜெர்சலா வினோத், யூனியன் கவுன்சிலர் விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முத்தையா, மணி, மகளிர் திட்ட உதவி அலுவலர் ராமர், செங்களாகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மலையடிபுதூர் பஞ்சாயத்து துணை தலைவர் பொன்ராணி நன்றி கூறினார்.

    • திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
    • குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 என்பது ஓசியும் இல்லை. இலவசமும் இல்லை. அது பெண்களுக்கான உரிமைத்தொகை.

    நெல்லை:

    சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு நிதிஉதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் 105 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.47 லட்சம் மதிப்பில் 840 கிராம் தங்கம், பட்டப்படிப்பு படித்த 89 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.44.5 லட்சம், 16 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்தில் உதவிகள் என 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும் 832 தையல் எந்திரங்களையும் சபாநாயகர் அப்பாவு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

    பெண்களை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினால் தான் நாடு முன்னேற்றம் அடையும். இதனால் தான் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தி பெண்களின் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத் தொடரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும்.

    குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 என்பது ஓசியும் இல்லை. இலவசமும் இல்லை. அது பெண்களுக்கான உரிமைத்தொகை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மேயர் சரவண், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி மற்றும் பொன்முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதாவை பொறுத்த வரை கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.
    • உள்கட்சி பிரச்சினை என்பது எல்லா கட்சியிலும் இருக்கக்கூடியது தான்.

    நெல்லை:

    பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று பாளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கேள்வி: அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசி உள்ளாரே. அவரது முடிவு பற்றி உங்களது கருத்து என்ன?

    பதில்: அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. பா.ஜனதாவை பொறுத்த வரை கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம்.

    தமிழ்நாட்டில் யாரும் தனித்து போட்டியிட்டது கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்கவும் முடியாது. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தான் ஆகவேண்டும்.

    கேள்வி: பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளனர். உங்கள் கருத்தை தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்களா?

    பதில்: என்னுடைய கருத்தை நான் தான் பிரதிபலிக்க முடியும்.

    கேள்வி: எம்.எல்.ஏ.-மேயர் உள்கட்சி பிரச்சினையால் நெல்லை மாநகராட்சி பணிகள் முடங்கி உள்ளதாக கருதுகிறீர்களா?

    பதில்: உள்கட்சி பிரச்சினை என்பது எல்லா கட்சியிலும் இருக்கக்கூடியது தான். ஆனாலும் மாநகராட்சியில் எல்லா பணிகளும் தொய்வின்றி நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
    • மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 42). இவர் வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு தனக்கு சொந்தமான 246 பவுன் தங்கநகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவலால் வியாபாரம் சரியாக நடக்கவில்லை.

    இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் திணறி வந்துள்ளார். உடனே அவர் பாளை கே.டி.சி.நகர் பாலீன் தோட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம்(41) என்பவரிடம் சென்று, நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

    உடனே கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனாலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.

    ஆனால் கோமதிநாயகம் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே அவர் ரமேஷ்குமாரை அழைத்து, கொடுத்த பணத்தை வாங்கி கொள்ளவேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஐகிரவுண்டு போலீசார் நடத்திய விசாரணையில், 246 பவுன் நகையை வங்கியில் இருந்து திருப்பி வைத்துக்கொண்டு அடகு வைத்த தொகையை மட்டும் திருப்பி தருவோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகோதரர் மிரட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை மோசடி செய்து அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும்
    • இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகர தி.மு.க. நிர்வாகி ஒருவர், ஒப்பந்ததாரருடன் பேசுவது போல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடக்கவுள்ள ஒப்பந்த பணிக்கு 18 சதவீதம் கமிஷன் வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகி ஒப்பந்ததாரரிடம் கூறுகிறார்.

    மேலும், நெல்லை மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள பணிகள் தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. நான் பலருக்கும் இந்த கமிஷனை பிரித்து கொடுக்க வேண்டி உள்ளது.

    எனவே கண்டிப்பாக 18 சதவீதம் கமிஷன் தந்தாக வேண்டும். நாளைக்கு தான் டெண்டர். நீங்கள் இன்றே பணத்தை தந்துவிட்டால் நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம் என்று அந்த நிர்வாகி கூறுகிறார்.

    அப்போது எதிரே அமர்ந்து பேசும் ஒப்பந்ததாரர், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். என்றும், ஜிஎஸ்.டி. தொகையை கழித்துக்கொள்ளுங்கள். அது மட்டுமே 55 லட்சம் ரூபாய் வருகிறது என்று கூறுகிறார்.

    ஆனால் அந்த நிர்வாகி, அது எல்லாம் முடியாது. கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • பேட்டை பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா பயிற்சியினை நடத்தினார்.

    நெல்லை:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    அவற்றுள் ஒன்றாக இன்று அரசு அருங்காட்சி யகத்தில் நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரம் மற்றும் கங்கை கொண்டான் பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

    இப்பயிற்சியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை பேட்டை பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா நடத்தினார்.

    நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சார்ந்த தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், குணசீலி வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புறக் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் நகர் புறக்கோட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மின் நுகர்வோர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும், கனிவுடன் நடந்து கொள்ளவும் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். 

    • ஸ்ரீரிக்‌ஷியா பாளையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஸ்ரீரிக்‌ஷியா உடலை கீழே இறக்கினர்.

    நெல்லை:

    பாளையை அடுத்த கிருஷ்ணாபுரம் ஜெயஜோதி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கிருஷ்ணாபுரத்தில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஸ்ரீரிக்ஷியா (வயது 14) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    தற்கொலை

    ஸ்ரீரிக்ஷியா பாளையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இன்று காலை ஸ்ரீரிக்ஷியா படுத்திருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் அவரது பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அதனை கண்டு அவரது பெற்றோர் அலறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த ஸ்ரீரிக்ஷியா உடலை கீழே இறக்கினர். தகவல் அறிந்த சிவந்திபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×