என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • கடைகளில் பழச்சாறு, தர்ப்பூசணி ஜூஸ் விற்பனை அமோக உள்ளது.

    நெல்லை:

    ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட முன்னதாகவே இந்த மாதம் தொடக்கத்திலேயே அதிகளவு வெயில் வாட்டி வந்தது.

    சுட்டெரிக்கும் வெயில்

    நெல்லை மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. அத்தி யாவசிய தேவை மற்றும் பணிகளுக்காக செல்வோர் குடை பிடித்தபடி சென்று வருகிறார்கள்.

    பகலில் இப்படி என்றால் இரவில் வீட்டிற்குள் எத்தனை மின் விசிறிகள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் சிலர் வீட்டின் முற்றத்திலும், மாடிகளிலும் தூங்கி வருகிறார்கள்.

    கோடை மழை

    இந்நிலையில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வளி மண்டல சுழற்சி காரணமாக மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இதனால் கடும் வெயிலால் தவித்து வந்த மக்கள் குளிர்ச்சியான கால நிலை நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை முதலே நெல்லை மாநகர பகுதிகளில் கடும் வெயில் வாட்டியது. கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொது மக்கள் குளிர்பானங் களை நாடிச்செல்வது வழக்கம். இதையொட்டி அந்த கால கட்டத்தில் சாலை யோரங்களில் புதிதாக தற்காலிக கடைகள் அதிகளவில் தோன்றுவது வழக்கம்.

    குளிர்பான விற்பனை

    அதன்படி நெல்லை, டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் புதிது புதிதாக குளிர் பான கடைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கடை களில் பழச்சாறு, குளிர் பானங்கள், தர்ப்பூசணி ஜூஸ், பதநீர் விற்பனை அமோக உள்ளது.

    இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளில் வருபவர்கள், பாதசாரிகள் குளிர்பான கடைகளை பார்த்ததும் சற்று இளைப்பாரி பழசாறு, நுங்கு, பதநீர் உள்ளிட்டவை களை அருந்தி செல்கிறார் கள்.

    இதே போல் கம்பு, சோளம், ராகி கூழ் ஆகிய வையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப் படுகிறது. சில இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப் பட்டுள்ளது.

    பழச்சாறு

    இதே போல் பழக்கடை களிலும் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்டவை களை பொதுமக்கள் அதிக ளவு வாங்கி செல்கிறார்கள். பகல் நேரங்களில் அதிகளவு வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மாலை நேரங் களில் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருகிறார்கள்.

    நெல்லை மாவட்ட அறிவியல் மையம், பாளை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் இன்று விடுமுறை நாளை யொட்டி காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு உற்சாகமாக விளை யாடி மகிழ்ந்தனர்.

    கொக்கிரகுளம் மற்றும் பாளை வ.உ.சி. மைதான பகுதிகளில் ஏராளமான தற்காலிக குளிர்பான கடை கள் அமைக்கப் பட்டுள்ளது. அங்கும் இன்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

    • நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது.
    • மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    வீட்டு சமையலில் முக்கிய இடம் பிடிப்பது பல்லாரி மற்றும் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம். சுப நிகழ்ச்சி விருந்துகளிலும், ஓட்டல் சமையல்களிலும் இவற்றின் தேவை இன்றியமையாததாக உள்ளது.எனவே இவற்றின் தேவை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

    நெல்லை, தென்காசி

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக பாவூர்சத்திரம், சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் இதனை அதிகம் பயிரிடுகின்றனர்.

    பெரும்பாலும் தீபாவளி யை யொட்டிய 3 மாதங்கள் நெல்லை , தென்காசியில் அதிகளவு விளைச்சல் இருக்கும். மற்ற நாட்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

    விளைச்சல் அதிகம்

    மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்துள்ளது. இதனால் அங்கு பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் வழக்கத்தை விட அதிகளவு உள்ளது.

    வெளி மாநிலங் களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் நெல்லை மார்க்கெட்டு களில் பல்லாரி விலை கிலோ ரூ.10 முதல் 15 வரை குறைந்துள்ளது.

    இறக்குமதி

    இதுதொடர்பாக பாளை மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    பாளை, டவுன் மார்க்கெட்டுகளுக்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விளையும் பல்லாரி, சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது இங்கு போதிய விளைச்சல் இல்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

    மும்பை, புனே, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயம் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் பகுதியில் விளைச்சல் இல்லாத போதும் வெளி மாநிலங்களில் இருந்து தேவைக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    கிலோ ரூ.10 முதல் 15

    இன்று 1 கிலோ பல்லாரி ரூ.10 முதல் 15 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்கிறோம். இதே போல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் 40 வரை விற்கப்படுகிறது.

    வெளி மாநிலங்களில் இருந்து பல்லாரி கிலோ ரூ.6-க்கு வாங்கப்பட்டு வாகன வாடகை, இறக்குமதி கூலி உள்ளிட்டவைகளுடன் ரூ.10 முதல் தரத்திற்கேற்ப விற்று வருகிறோம் என்றார்.

    • பட்டமளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் திருப்பதி, பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.

    யு.கே.ஜி. மாணவர்களை கே.ஜி. வகுப்பிலிருந்து அவர்களை அடுத்த கட்ட (முதலாம்) வகுப்பிற்கு வழி அனுப்பும் விதமாக எல்.கே.ஜி. மற்றும் பிரி-கே.ஜி. மாணவர்கள் நடனங்கள் மற்றும் நாடகம் மூலம் பிரியாவிடை அளித்து மகிழ்வித்தனர். யு.கே.ஜி. மாணவர்களும் தாங்கள் கே.ஜி. வகுப்புகளில் கற்ற அனுபவங்களை கலை நிகழ்ச்சியாக கற்காலத்தில் உருவாக்கப்பட்ட சக்கரத்தின் உதவியால் இயக்கப்பட்ட கட்டைவண்டி முதல் தற்காலத்தில் விண்ணில் ஏவப்படும் விண்கலம் வரை அறிவியல் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருவது குறித்தும், சுற்றுச்சூழலை மனிதன் மாசுபடுத்துவதால் தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவது குறித்தும், விண்வெளியின் முக்கியத்துவம் மற்றும் கோள்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும் நாடகம் மற்றும் நடனம், உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.

    மாணவர்களின் பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டமளிப்பு விழாவை கண்டு களித்தனர். சிறப்பு விருந்தினர் திருப்பதி யு.கே.ஜி. மாணவர்கள் 96 பேருக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் எலிசபெத் விழாவினை முன்னின்று வழிநடத்தினார்.

    • பெரும்பாலான இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
    • விபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள கால்வாயில் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    குழாய் உடைப்பு

    ஆனால் பெரும்பாலான இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் டவுன்- குற்றாலம் சாலையில் மீன் மார்க்கெட் அருகே தரைப்பாலத்தின் மீது செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 10 நாட்களாக வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. அந்த தண்ணீர் குற்றாலம் சாலையில் உள்ள பள்ளங்களில் நிரம்பி கிடக்கிறது.

    வாகன ஓட்டிகள் அவதி

    இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பி இருப்பதை அறியாமல் மோட்டார் சைக்கிளில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள நெல்லை கால்வாயில் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    கடந்த 10 நாட்களாக வீணாகச் செல்லும் இந்த குடிநீரை உடனடியாக நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி கமிஷனரிடம் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    இதற்கிடையே தகவல் அறிந்து மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் உத்தரவின்பேரில் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிறப்பு அழைப்பாளராக களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார்.
    • கூட்டத்தில் பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இணை செயலாளர் முகம்மது ரபிக் வரவேற்று பேசினார். நகர துணை தலைவர் கபீர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு களிலும் தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரக் கோரியும், புதிய பஸ் நிலையம் எதிரில் தனியார் விடுதி அமைந்துள்ள உப்பாறு 16 அடி பாதையை மீட்டு தரக் கோரியும் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் வகை யில் வருகின்ற 22-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் போராட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப் பட்டது.

    களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி களிலும் இன்புளுயன்சா நோய் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப் பைஜி, முகம்மத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

    • தனக்கு சொந்தமான வீட்டில் ஜார்ஜ்துரை தனியாக வசித்து வருகிறார்.
    • வீட்டின் கதவு திறக்கப்பட்டு வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் புதுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ்துரை(வயது 79). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் ஜெரால்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    கடந்த 11-ந்தேதி ஜார்ஜ்துரை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றார். நேற்று மாலை ஊருக்கு திரும்பிய அவர் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு கள்ளச்சாவி போட்டு திறக்கப்பட்டு இருந்தது.

    அங்கு படுக்கை அறையில் இருந்த பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த வெளிநாட்டு பணம் ரூ.10 ஆயிரம், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஜார்ஜ்துரை அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • தனது தந்தையிடம் புதிய ஆட்டோ வாங்கி தருமாறு தங்கலெட்சுமணன் கேட்டுள்ளார்.
    • திருக்குறுங்குடி பூங்காவில் தங்கலெட்சுமணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே நம்பிதலைவன் பட்டயம் மேலத் தெருவை சேர்ந்தவர் தங்கலெட்சுமணன் (வயது21). ஆட்டோ டிரைவரான இவர் தனது தந்தை சுசிகர்ராஜிடம் புதிய ஆட்டோ வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கலெட்சுமணன் கடந்த மாதம் 8-ந் தேதி திருக்குறுங்குடி பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கலெட்சுமணன் இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தோணிராஜா மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
    • விசாரணையில்,பாலசுந்தர் தங்க செயினை திருடியது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் அந்தோணிராஜா (வயது21). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி சுரேசுக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வள்ளகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 17-ந்தேதி அந்தோணிராஜா மற்றும் உறவினர்கள் புதிய ஆடைகள் வாங்க சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தங்கினர். பெண்ணின் சகோதரர் பாலசுந்தரும் (21) அவர்களுடன் தங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் எடையுள்ள தங்கசெயின் மாயமாகியிருந்தது.

    இதுகுறித்து அந்தோணி ராஜா நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாலசுந்தர் தான் தங்க செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கண்காட்சியில் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம்.
    • பாரம்பரிய உணவு கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அநேக விவசாயிகள் இயற்கை வேளாண்மை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், அதிக விளைச்சல் தருவதாகவும், வறட்சியை தாங்கி வளரக் கூடியதாகவும் உள்ளது.

    தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இதற்கான கண்காட்சி நடத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    அதன் அடிப்படையில் பல்வேறு பயிர் ரகங்களை கண்டறிந்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற சிறந்த ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டம் தோறும் இதுகுறித்து கண்காட்சி நடத்திட வேளாண்மை- உழவர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.

    கண்காட்சியை சேரன்மகா தேவி ஸ்காட் பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை10 மணிக்கு அட்மா வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

    இந்த கண்காட்சியில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம். வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி ரகங்களை கட்சிப்படுத்துதல், விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது ரகங்களை காட்சிப்படுத்தவும், கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டும். இத்தகவலை நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது.
    • பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

     சிவகாசி:

    தமிழகத்தில் பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்றது சிவகாசி. இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இங்கு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது . இது பற்றிய விவரம் வருமாறு;

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரவு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலையில் நள்ளிரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்துக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆட்சியின் போதும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
    • அதில், தமிழக காவல்துறையில் பணியாற்றி 20 ஆண்டுகளை எட்டியவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    நெல்லை:

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆட்சியின் போதும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    தேர்தல் வாக்குறுதி

    அந்த வகையில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்தவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்ற அங்கீகாரம் வழங்க உத்தரவிட்டார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் ஏராளமான தலைமை காவலர்கள் பதவி உயர்வு பெற்றனர். தற்போது வரை அந்த ஆண்டுக்கான அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

    எதிர்பார்ப்பு

    அதில், தமிழக காவல்துறையில் பணியாற்றி 20 ஆண்டுகளை எட்டியவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று நெல்லை மாவட்ட போலீசார் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    இதுகுறித்து நெல்லை மாநகர போலீசார் கூறியதாவது:-

    பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி, காவல் நிலையங்களில் பெண் போலீசாருக்கு தனி ஓய்வு அறை, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    1,000 தலைமை காவலர்கள்

    தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது காவல்துறையில் பணியாற்றி 20 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் எங்களுக்கு அதிகாரி என்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    அதே நேரத்தில் எங்களுக்கு மாத சம்பளத்திலும் உயர்வு கிடைக்கும். தற்போது மாவட்டம் முழுவதும் 2002-ம் ஆண்டு மற்றும் 2003-ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த தலைமை காவலர்கள் சுமார் 1,000 பேர் உள்ளனர். தேர்தல் வாக்குறுதி நடைமுறைக்கு வந்தால், எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்

    • இயற்பியல் துறை தலைவர் மகரஜோதி லெட்சுமி தொடக்கவுரையாற்றினார்.
    • இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிகளை விளக்கினார்கள்.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை ஒமேகா மன்றம் சார்பில் 'இயற்பியலில் இன்றைய வளர்ச்சிகள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இயற்பியல் துறை தலைவர் மகரஜோதி லெட்சுமி தொடக்கவுரையாற்றினார். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.

    மதுரை விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் கணேசன் 'நானோ தொழில்நுட்பம் குறித்தும், மதுரை பாத்திமா கல்லூரி உதவி பேராசிரியர் ஷீலா விமாலா மருத்துவ இயற்பியல் பற்றியும், லண்டனில் உள்ள நியூட்டன் இன்டர்நேஷனல் பெல்லொவ் முனைவர் லோகு திருமலைசாமி, குறைமின் கடத்திகளில் எக்ஸ் கதிர்கள் தாக்கங்கள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

    இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சிகளை விளக்கினார்கள். ஸ்ரீசாரதா கல்வி குழுமங்களின் இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வாழ்த்தி பேசினார். உதவி பேராசிரியை சவுபாக்கியவதி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முத்துராணி மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×