என் மலர்
நீங்கள் தேடியது "Courtalam Road"
- பெரும்பாலான இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
- விபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள கால்வாயில் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
குழாய் உடைப்பு
ஆனால் பெரும்பாலான இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் டவுன்- குற்றாலம் சாலையில் மீன் மார்க்கெட் அருகே தரைப்பாலத்தின் மீது செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 10 நாட்களாக வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. அந்த தண்ணீர் குற்றாலம் சாலையில் உள்ள பள்ளங்களில் நிரம்பி கிடக்கிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பி இருப்பதை அறியாமல் மோட்டார் சைக்கிளில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள நெல்லை கால்வாயில் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 10 நாட்களாக வீணாகச் செல்லும் இந்த குடிநீரை உடனடியாக நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி கமிஷனரிடம் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதற்கிடையே தகவல் அறிந்து மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் உத்தரவின்பேரில் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






