என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சொத்தை பிரிக்க மகன் எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
- சொத்துக்களை பிரிக்க முத்தையா எதிர்ப்பு தெரிவித்து தனக்கு மட்டும் தான் சொத்தை வழங்க வேண்டும் என கூறி வந்துள்ளார்
- பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி பாளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நெல்லை:
நெல்லை சீவலப்பேரி அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (வயது 70). இவருக்கு முத்தையா என்ற மகனும், வெயிலாச்சி (40) என்ற மகளும் உள்ளனர்.
வெயிலாச்சிக்கு தூத்துக்குடியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 மகனும், மகளும் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெயிலாச்சி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இசக்கியம்மாளுக்கு சொந்தமான சொத்துக்களை தனது மகனுக்கும், மகளுக்கும் பிரித்து வழங்க முயற்சித்துள்ளார்.
ஆனால் சொத்துக்களை பிரிக்க முத்தையா எதிர்ப்பு தெரிவித்து தனக்கு மட்டும் தான் சொத்தை வழங்க வேண்டும் என கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அவ்வப் போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது முத்தையா பாட்டிலால் இசக்கியம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இசக்கியம்மாள் அவரது மகள் வெயிலாச்சி மற்றும் 2 குழந்தைகளுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். நுழைவு வாயில் முன்பு திடீரென இசக்கியம்மாளும், வெயிலாச்சியும் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதைப்பார்த்து அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தாய், மகளை மீட்டு அவர்களது உடலில் தண்ணீர் ஊற்றினர்.
அப்போது வெயிலாச்சி கூறும்போது, எனது அண்ணன் முத்தையா சொத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி எனது தாயை அடித்து துன்புறுத்தி வருகிறார். சொத்தை அபகரிக்கும் நோக்கில் எனது தாய்க்கு கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக தொலைபேசி மூலம் போலீசாருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றோம் என்றார்.
பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி பாளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.






